தமிழ்நாட்டில் குழந்தை கடத்தல் தொடர்பாகப் பரப்பப்படும் வதந்திகள்!

பரவிய செய்தி

தமிழ்நாட்டில் குழந்தைகள் கடத்தப்பட்டு அவர்களது உடல் உறுப்புகள் திருடப்படுகிறது.

மதிப்பீடு

விளக்கம்

தமிழ்நாட்டில் குழந்தை கடத்தல் அதிகரித்துள்ளதாகவும் குழந்தைகளைக் கடத்தி அவர்களது உடல் உறுப்புக்களை வெட்டி எடுத்து கொலை செய்யப்படுவதாகவும் வீடியோ ஒன்று வாட்ஸ்அப்பில் பரப்பப்படுகிறது. வீடியோவில் கொடூரமான காட்சிகள் இருப்பதால் பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது. (Video)

உண்மை என்ன ?

பரவக் கூடிய வீடியோவில் நான்கு காட்சிகள் காட்டப்படுகிறது. அவை ஒவ்வொன்றின் கீஃப்ரேம்களை கொண்டும் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் ஆய்வு செய்தோம்.

காட்சி 1: 

வீடியோவின் தொடக்கத்தில் இறந்த குழந்தைகளின் உடல்கள் பிளாஸ்டிக் கவர் மற்றும் வெள்ளை நிற துணி கொண்டு சுற்றப்பட்டு கீழே இருப்பதும் அதைச் சுற்றி சிலர் அழுவதையும் காண முடிகிறது. 

அதன் கீஃப்ரேம் கொண்டு தேடியதில், இதே காட்சிகளைக் கொண்ட சில புகைப்படங்கள் சஹ்தேவ் கஸ்வான் (Sahdev kaswan) என்பவரது பேஸ்புக் பக்கத்தில் 2022, ஜூலை 17ம் தேதி பதிவிடப்பட்டுள்ளதைக் காண முடிந்தது. . 

அப்பதிவில் குப்பை கொட்டுவதற்காக நாகவுர் (Nagaur) நகராட்சி தோண்டி வைத்திருந்த பள்ளத்தில் நீர் நிரம்பி இருந்தது. அதில் 4 குழந்தைகள் விழுந்து இறந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் தொடர்பாக 2022, ஜூலை மாதம் ‘Bhaskar’, ‘Times Of India’ ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளது. அவற்றிலும் மேற்கண்ட தகவலே குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விடம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது. 

காட்சி 2: 

அடுத்ததாகச் சிலர் குழந்தைகளைக் கடத்தி காட்டுக்குள் கட்டிப் போட்டு வைத்திருப்பது போன்ற காட்சி பரவக் கூடிய வீடியோவில் இடம்பெற்றுள்ளது. 

அக்காட்சிகளின் கீஃப்ரேம்களை கொண்டு தேடியதில், அதன் முழு வீடியோ 2022, ஜூலை 4ம் தேதி ’Punjab News’ என்னும் பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

அவ்வீடியோவின் ஒரு இடத்தில் Disclaimer காட்டப்படுகிறது. அதில், ’இந்த வீடியோ முழுக்க முழுக்க விழிப்புணர்விற்காகச் சித்தரிக்கப்பட்டது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது குழந்தை கடத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. விழிப்புணர்வு வீடியோவை தவறாகப் பரப்புகின்றனர். 

காட்சி 3:

குழந்தை ஒன்றின் முன்பக்க உடல் முழுவதும் வெட்டி எடுத்தது போன்ற புகைப்படம் ஒன்று அந்த வீடியோவில் காட்டப்படுகிறது.

அப்படம் குறித்துத் தேடியதில், ‘Dainik Khoj Khabar’ என்னும் தளத்தில் இறந்த குழந்தையின் படத்துடன் 2017, ஜூலை மாதம் செய்தி வெளியாகியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் சிராவஸ்தி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைச் சிறுத்தை தூக்கிச் சென்று கொன்றுள்ளது. சிறுத்தை கொன்ற குழந்தையின் புகைப்படத்தைத் தவறாகப் பரப்புகின்றனர்.

காட்சி 4: 

இறுதியாக உயிருடன் ஒருவரது வயிற்றினை கிழிக்கும் காட்சிகள் பரவக் கூடிய வீடியோவில் இடம் பெற்றுள்ளது. 

இந்த வீடியோ 2018, ஜனவரி மாதம் மெக்சிகோ எனக் குறிப்பிட்டு ஒரு தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு இதே வீடியோ வெவ்வேறு நாடுகளின் பெயரில் வெவ்வேறு காலக்கட்டத்தில் பரப்பப்பட்டுள்ளது. இச்சம்பவம் எந்த நாட்டில் நடந்தது என உறுதியாகக் கண்டறிய முடியவில்லை.

தமிழ்நாட்டில் குழந்தை கடத்தல் குறித்து வதந்திகள் பரப்பப்படுகிறது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும் இத்தகைய வதந்தி தொடர்பாகச் சென்னை காவல் துறை வெளியிட்ட பத்திரிக்கை செய்தியில், குழந்தை கடத்தல் தொடர்பாக மக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் சென்னை பெருநகர காவல் துறை உதவி எண் 100 அல்லது 112 அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இருப்பினும் பம்பல் பகுதியில் திருநங்கை ஒருவரைக் குழந்தை கடத்தலில் ஈடுபடுபவர் என நினைத்து பொது மக்கள் கடுமையாகத் தாக்கி அவரது ஆடைகளைக் கிழித்தனர். திருநங்கை தாக்கப்பட்டது தொடர்பாகக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து இரண்டு பேரைக் கைதும் செய்துள்ளது.

இதேபோல், வட சென்னையிலும் குழந்தை கடத்தலில் ஈடுபடுபவர் என வடமாநில தொழிலாளர் ஒருவரை பொது மக்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்த இரண்டு சம்பவங்களும் வதந்தியின் விளைவாக நடந்ததுதான். எனவே வாட்ஸ்அப்பில் எந்த செய்தி வந்தாலும் அதைத் தீர விசாரித்து, அதன் உண்மைத் தன்மை தெரிந்த பின்பு மற்றவர்களுக்குப் பகிருங்கள். வதந்திகளை நம்ப வேண்டாம்!

முடிவு : 

தமிழ்நாட்டில் குழந்தைகளைக் கடத்தி உடல் உறுப்புகள் திருடப்படுவதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் வதந்தியே. அது வெவ்வேறு மாநிலங்களில்  நடைபெற்ற வெவ்வேறு சம்பவங்களுடன் தொடர்புடையது. 

Please complete the required fields.
Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader