காரின் டயரில் எலுமிச்சை பழம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பயன்படுத்திய காரா ?

பரவிய செய்தி

மதிப்பீடு

விளக்கம்

டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் இருந்து பிரதமர் மோடி அவர்களை பார்க்க செல்லும் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பயன்படுத்திய வாகனத்தின் டயர்களில் எலுமிச்சை பழம் வைத்து இருந்ததாக இப்புகைப்படமானது தமிழக பாஜகவினர், ஆதரவாளர்கள், மாரிதாஸ் ரசிக பக்கம் உள்ளிட்டோரால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Facebook link

உண்மை என்ன ?

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் பயணிக்கும் வாகனம் குறித்து டெல்லியில் பணியாற்றும் பத்திரிக்கையாளர் அரவிந்த் குணசேகர் காரின் புகைப்படத்தை தன் ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார்.

Archive link 

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் காரில் வந்து இறங்கிய காட்சியில் இருந்து நேரலை வீடியோவை சன் நியூஸ் வெளியிட்டது. அதில், பத்திரிக்கையாளர் அரவிந்த் கூறியது போலவே மு.க.ஸ்டாலின் DL 9C F 0900 என்ற எண் கொண்ட லேண்ட் க்ரூஸர் வாகனத்தையே பயன்படுத்தி இருக்கிறார்.

வைரல் செய்யப்படும் இனோவா வாகனத்தின் எண் DL 9C T 5858 மற்றும் ஸ்டாலின் பயன்படுத்திய லேண்ட் க்ரூஸர் DL 9C F 0900 என்ற எண் ஆகியவற்றை பரிவாகன் செயலி மூலம் விவரம் குறித்து ஆராய்கையில், முதல்வர் ஸ்டாலின் பயன்படுத்திய வாகனத்தின் இன்சூரன்ஸ் 2022 வரை உள்ளதாகவும், வைரல் செய்யப்படும் இனோவா காரின் இன்சூரன்ஸ் குறித்த விவரம் இல்லை என்பதையும் அறிய முடிந்தது.

வாகன எண் மற்றும் வீடியோ ஆதாரங்கள் தவிர்த்து, வைரல் செய்யப்படும் வாகனம் நிறுத்தப்பட்ட இடத்தில் இருக்கும் செடிகள் மற்றும் தூண்கள் ஆனது தற்போது எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் வேறுபட்டு இருப்பதையும் குறிப்பிட்டு பார்க்க முடிந்தது.

வைரல் செய்யப்படும் காரின் புகைப்படம் தமிழ்நாடு இல்லத்தில் நிறுத்தப்பட்ட வாகனமாக இருந்தாலும், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் பயன்படுத்திய வாகனம் அல்ல. முந்தைய ஆட்சியில் முதல்வர் பயன்படுத்திய வாகனமாக கூட இருக்கலாம். அதுகுறித்த தகவல் கிடைக்கும்பட்சத்தில் அதையும் இணைக்கிறோம்.

முடிவு :

நம் தேடலில், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயன்படுத்திய வாகனத்தின் டயர்களில் எலுமிச்சை பழங்கள் வைக்கப்பட்டு உள்ளதாக பரப்பப்படும் புகைப்படம் தவறானது. அது முதல்வர் மு.க.ஸ்டாலின் பயன்படுத்திய வாகனமே அல்ல என்பதை அறிய முடிந்தது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button