This article is from May 11, 2019

தமிழக பள்ளிக் கல்வியில் புதிய மாற்றங்கள் என தவறான ஊடகச் செய்தி !

பரவிய செய்தி

10-ம் வகுப்பிற்கு இனி தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கு 2 தாள் கிடையாது. ஒரே தாள் மட்டுமே. 11 மற்றும் 12-ம் வகுப்பில் ஏதாவது ஒரு மொழிப்பாடத்தை மட்டுமே தேர்ந்தெடுக்கும் முறையை அமல்படுத்த பள்ளிக் கல்வித்துறை பரிந்துரை செய்துள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

ஒரேயொரு மொழிப்பாடத்தை தேர்ந்தெடுத்து படிக்கும் முறை அமலாகும் என்ற செய்திகளுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை மறுப்பு தெரிவித்து உள்ளது.

விளக்கம்

கடந்த சில ஆண்டுகளில் தமிழக பள்ளிக் கல்வி முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக 10-ம் வகுப்பிற்கு இனி தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கு 2 தாள்கள் இல்லை, 11 மற்றும் 12-ம் வகுப்பில் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான ஒரு மொழிப்பாடத்தை தேர்வு செய்து படிக்கலாம் என்ற முறையையும் அமல்படுத்த பள்ளிக் கல்வித்துறை பரிந்துரை செய்ததாக செய்திகள் வெளியாகின.

சமீப ஆண்டுகளில் 1200 மதிப்பெண் முறையை குறைத்து 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு 600 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன, அடுத்த ஆண்டில் இருந்து அதனை 500 மதிப்பெண்ணாக குறைக்கவும், 500 மதிப்பெண் என்பதால் மொழிப் பாடத்தில் ஏதாவது ஒன்றை விருப்ப பாடமாக தேர்வு செய்துக் கொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை பரிந்துரை செய்து உள்ளதாக செய்தி வெளியாகியது.

இம்முறையை கல்வித்துறை நடைமுறைக்கு கொண்டு வர வாய்ப்புகள் இருக்கின்றன என  அனைத்து தமிழக செய்தி சேனல்களிலும் வெளியாகின. இந்த செய்திக்கு கல்வியாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். தமிழ் மொழியை ஓரங்கட்ட இத்தகைய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளதாக குற்றம்சாட்டினர்.

ஆனால், 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஒரேயொரு மொழிப்பாடத்தை தேர்ந்தெடுத்து படிக்கும் முறை அமலாகும் என்ற செய்திக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை மறுப்பு தெரிவித்து உள்ளது. மேலும், 10-ம் வகுப்பில் இரு தாள்கள் முறையே பின்பற்றப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்து உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக பேட்டி அளித்த தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ” 11 மற்றும் 12-ம் வகுப்பில் மொழிப்பாடத்தை தேர்ந்தெடுப்பது தொடர்பாக வெளியான தகவல்கள் உண்மையில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரையில் 6 பாடத் திட்டங்கள் தொடரும், இரண்டு மொழிப் பாடங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் ” எனத் தெரிவித்து இருந்தார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை பரிந்துரைத்ததாகச் செய்தி வெளியிட்டது ஊடகங்கள். ஆனால் அதைப் பற்றிய எந்த அரசாணையோ, பரிந்துரை கோப்போ, அதிகாரப்பூர்வ செய்தியோ, பேட்டியோ இல்லை. எதன் அடிப்படையில் செய்திகளை வெளியிட்டார்கள் என்பது தெரியவில்லை. தற்போது அமைச்சர் மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.

இருமொழிக் கொள்கை என்பது நீக்கப்பட்டால் நிச்சயம் அது பெரிய பாதிப்பு தான். ஆனால், இந்த செய்தி வெளியிடப்பட்டது ஏன் என்பதற்கு விடை இல்லை.

Please complete the required fields.




Back to top button
loader