தமிழக அரசின் முத்திரையில் “வாய்மையே வெல்லும்” நீக்கப்பட்டதா ?

பரவிய செய்தி
தமிழக அரசு சின்னத்தில் இருந்த ” வாய்மையே வெல்லும்” என்ற தமிழ் சொற்கள் நீக்கம்
மதிப்பீடு
விளக்கம்
2019-ம் ஆண்டில் கார்த்திக் தமிழன் எனும் முகநூல் பக்கத்தில் வெளியாகி 5 ஆயிரத்திற்கும் மேல் பகிரப்பட்ட மீம் பதிவில், தமிழகத்தின் அரசு முத்திரையில் ” வாய்மையே வெல்லும் ” எனும் தமிழ் சொற்கள் நீக்கப்பட்டு உள்ளதாகக் கூறி மெட்ராஸ் ஹை கோர்ட் உடைய முத்திரை காண்பிக்கப்பட்டு உள்ளது. அதன் கமெண்ட்டில் யூடர்ன் பெயரை டக் செய்து உண்மைத்தன்மையைக் கேட்டு இருந்தனர்.
உண்மை என்ன ?
தமிழக அரசின் முத்திரையில் இருந்த “ வாய்மையே வெல்லும் ” எனும் தமிழ் சொற்கள் நீக்கப்பட்டு உள்ளதா எனத் தேடிப் பார்க்கையில், தமிழக அரசின் இணையதளங்களில் வாய்மையே வெல்லும் சொற்கள் நீக்கப்படவில்லை என்பதையும், வாய்மையே வெல்லும் இடம்பெற்று இருப்பதையும் காண முடிந்தது. ” வாய்மையே வெல்லும் ” தமிழ் சொற்கள் நீக்கப்பட்டு இருந்தால் தமிழகத்தில் நிச்சயம் எதிர்ப்புகள் கிளம்பி இருக்கும். ஆனால், அப்படி ஏதுமில்லை.
வைரல் செய்யப்படும் புகைப்படத்தில் இருக்கும் முத்திரை சென்னை உயர்நீதிமன்றத்தின் முத்திரை. சென்னை உயர்நீதிமன்றத்தின் இணையதளத்திற்கு சென்று பார்க்கையில், முத்திரையில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி மட்டுமே இடம்பெற்று இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் கூட முத்திரையை காணலாம்.
இருப்பினும், அவை தற்போது மாற்றப்பட்டவை அல்ல. நீண்டகாலமாகவே ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி மட்டுமே இடம்பெற்று இருக்கிறது. ஆம், சென்னை உயர்நீதிமன்றம் மிகப் பழமையான நீதிமன்றம் என அறிவோம். ஆனால், தற்போதுவரை அங்கு தமிழ் மொழி அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாகக் கொண்டு வரப்படவில்லை.
சென்னை உயர்நீதிமன்றத்தின் முத்திரை குறித்து வழக்கறிஞரிடம் யூடர்ன் தரப்பில் தொடர்பு கொண்டு பேசிய போது, ” மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழிகளான ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி மட்டுமே இருப்பதால் முத்திரையில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி மட்டுமே இடம்பெற்று இருக்கிறது ” எனத் தெரிவித்து இருந்தார்.
2016-ல் ” உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும்: கருணாநிதி ” எனும் தலைப்பில் வெளியான செய்தியில், சென்னை உயர் நீதிமன்றத்தின் பெயரை மாற்றியது போல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் எனும் கோரிக்கை நிலுவையில் இருப்பதாகவும், இந்த கோரிக்கையை ஏற்று தமிழ் மொழியை சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக மத்திய அரசு விரைவில் அறிவிக்க வேண்டும் ” என மறைந்த திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது.
2020 மார்ச் 20-ம் தேதி தி ஹிந்து செய்தியில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக கொண்டு வர மாநில அரசு முயற்சித்து வருவதாக தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் பதில் அளித்துள்ளதாக வெளியாகி இருக்கிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாகக் கொண்டு வர வேண்டுமென தொடர்ந்து போராட்டங்களும், கோரிக்கைகளும் எழுந்து கொண்ட இருக்கின்றன. ஆனால், பலமுறை அது நிராகரிக்கவும் செய்யப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.
முடிவு :
நம் தேடலில், சென்னை உயர் நீதிமன்றத்தின் முத்திரையில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி இடம்பெற்று உள்ளதை வைத்து தமிழக அரசின் முத்திரையில் ” வாய்மையே வெல்லும் ” எனும் தமிழ் சொற்கள் நீக்கப்பட்டு உள்ளதாகத் தவறாகப் பரப்பி வருகிறார்கள். சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக இல்லை. ஆகையால், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி மட்டுமே இடம்பெற்று இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.