யானை வழித்தடத்தில் இரும்பு ஆணி தடை.. தமிழ்நாடு எனத் தவறாகப் பரப்பப்படும் அசாம் புகைப்படம் !

பரவிய செய்தி
யானைகள் உயிரிழப்பை கண்டுகொள்ளாத விடியா திமுக திராவிடமாடல் அரசு. இது வேறயா இந்தக்கொடுமையை தட்டி கேக்க விலங்கு ஆர்வலர் ஒருவர் கூட இல்லையா ?
மதிப்பீடு
விளக்கம்
கடந்த சில நாட்களில் தமிழ்நாட்டில் யானைகள் உயிரிழப்பு சம்பவங்கள் குறித்த செய்திகள் தொடர்ச்சியாக வந்து அதிர்ச்சியூட்டின. தர்மபுரி மாவட்டத்தில் விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 3 யானைகள் இறந்தன. கோவை மாவட்டத்தில் நாட்டு வெடி மற்றும் மின்சாரம் தாக்கி 2 யானைகள் உயரிழந்தன.
இப்படி யானைகள் உயிரிழப்பு சம்பவங்கள் சோகத்தை ஏற்படுத்தி வரும் வேளையில், ‘ வனத்துக்குள் பண்ணை வீடு கட்டி, அதற்கு பிறகு இந்த மனிதன் என்ன வேலை பார்த்துள்ளான் பாருங்கள் ‘ என யானை செல்லும் பாதையில் இரும்பு ஆணி தடை வேலி அமைக்கப்பட்டு இருக்கும் புகைப்படம் இடம்பெற்ற பாலிமர் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
😤நீங்க லா என்ன பிறவி டா😒😒😑
மனிதன் எனும் மிருகம் pic.twitter.com/6DwGcFtZpM— கருப்பன் (@kallar_1) March 28, 2023
உண்மை என்ன ?
வனத்திற்குள் பண்ணை வீடு கட்டி இரும்பு ஆணி தடை வேலி அமைத்ததாக வைரலாகி வரும் நியூஸ் கார்டு குறித்து பாலிமர் செய்தியின் சமூக வலைதள பக்கங்களில் தேடுகையில், அந்தப் பதிவு இடம்பெறவில்லை.
ஆகையால், அப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில் வைரல் செய்யப்படும் புகைப்படம் தமிழ்நாட்டைச் சேர்ந்தது அல்ல, அசாம் மாநிலத்தைச் சேர்ந்தது எனத் தெரிந்தது. 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் அசாம் மாநிலத்தில் குவஹாத்தி எல்லைப் பகுதியில் அமைந்து இருக்கும் அம்சாங் வனவிலங்கு சரணாலயப் பகுதியில் இராணுவ வீரர்களின் சமையல் அறை மற்றும் பண்டகசாலைக்கு வரும் கால்நடைகளை தடுக்க தடை வேலியாக இராணுவம் சிமென்ட் தளத்தில் இரும்பு ஆணிகளை பதித்து உள்ளனர்.
இதுபோன்ற ஆணி வேலியால் 2018 டிசம்பர் மாதத்தில் ஒரு யானையும், 2019 பிப்ரவரி மாதத்தில் இன்னொரு யானையும் காயமடைந்து நீண்ட நாட்கள் காலில் காயம் முற்றி இறந்துள்ளன.
முதல் யானை இறப்பின் போதே இந்தக் கொடூரமான யோசனைக்கு எதிராக எதிர்ப்புகள் எழுந்தன. அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என புகார்கள், கண்டனங்கள் எழுந்தன.
யானை இறப்பால் எழுந்த கண்டனங்களால் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு ஆணி வேலியை நீக்குவதாக இராணுவ அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டதாக தி இந்து செய்தியில் வெளியாகி இருக்கிறது.
மேலும் படிக்க : இரும்பு ஆணிகள் தடை வேலியால் யானைகள் இறப்பு | எங்கே ?
இந்த புகைப்படம் கடந்த 2019ம் ஆண்டு பரவிய போதே இதுகுறித்து கட்டுரை ஒன்றை யூடர்ன் வெளியிட்டு இருந்தோம்.
முடிவு :
நம் தேடலில், வனத்துக்குள் பண்ணை வீடு கட்டி அதற்கு முன்பாக இரும்பு ஆணி தடை வேலி அமைத்ததாகப் பரவும் புகைப்படம் கடந்த 2019 அசாம் மாநிலத்தில் வனப் பகுதியில் இராணுவ அதிகாரிகளால் அமைக்கப்பட்டது. அது தமிழ்நாட்டைச் சேர்ந்தது அல்ல என்பதை அறிய முடிகிறது.