தமிழ்நாட்டில் பாக்ஸ்கான் நிறுவனம் முதலீடு செய்யவில்லை எனப் பரவும் பொய் செய்திகள் !

பரவிய செய்தி
தமிழக முதல்வர் Foxconn நிறுவனத்துடன் ₹1,600 கோடி முதலீடு செய்துள்ளதாக சொல்வது பொய் என அந்த நிறுவனம் மறுப்பு செய்தி வெளியிட்டுள்ளது. முதல்வரே பொய் செய்திகளை பரப்ப வேண்டிய அவல நிலையில் இருக்கிறது திராவிட மாடல் ஆட்சி.
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் ரூ1600 கோடி முதலீட்டில் பாக்ஸ்கான் நிறுவனம் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி ஆலை அமைக்க உள்ளதாகவும், இந்த முதலீட்டின் மூலம் 6000 பேருக்கு வேலைவாய்பு கிடைக்கும் என தமிழ்நாடு அரசு தரப்பில் வெளியான தகவல் செய்தியாக வெளியிடப்பட்டது.
ஆனால், பாக்ஸ்கான் இண்டஸ்ட்ரியல் இன்டர்நெட்(Foxconn Industrial Internet) நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் எந்தவொரு ஒப்பந்தத்தையும் மேற்கொள்ளவில்லை என சீன நாளிதழான ‘ செக்யூரிட்டி டைம்ஸ்” தரப்பிற்கு தெரிவித்ததாக ராய்டர்ஸ் இணையதளம் செய்தி வெளியிட்டது.
இதையடுத்து, தமிழ்நாட்டில் பாக்ஸ்கான் நிறுவனம் முதலீடு செய்வதாக முதல்வரே பொய்யான தகவலை வெளியிட்டு இருக்கிறார் என பாஜக மற்றும் அதிமுக தரப்பினர் சமூக வலைதளங்களில் பரப்பத் துவங்கினர்.
உண்மை என்ன ?
🚨 Big news and a proud moment for #TamilNadu!
Today, in the presence of Hon’ble @CMOTamilnadu Thiru @MKStalin avargal, M/s. Hon Hai Technology Group (#FOXCONN) signed a Letter of Intent with @Guidance_TN to set up a new mobile components manufacturing facility at a cost of Rs.… pic.twitter.com/eIf0QyIbi7
— Minister for Industries, GoTN, India (@TNIndMin) July 31, 2023
தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில், ” காஞ்சிபுரத்தில் ரூ.1600 கோடி முதலீட்டில் புதிய செல்போன் உதிரிபாகங்கள் உற்பத்தி ஆலை அமைப்பது தொடர்பான Hon Hai Technology Group (FOXCONN) உடன் உத்தேச ஒப்புதல் ஆவணத்தில் (letter of intent) கையெழுத்திடப்பட்டது ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Yesterday was an awesome day for #TamilNadu. Our Honourable @CMOTamilnadu @mkstalin guided us to ensure that big ticket investments like that of the huge Foxconn conglomerate invest into TN reinforcing their #TrustInTN.
It was a pleasure to spend most of my day with the hugely… pic.twitter.com/rh426gKJL6
— Dr. T R B Rajaa (@TRBRajaa) August 1, 2023
மேலும் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பதிவிட்ட மற்றொரு ட்வீட் பதிவில், Hon Hai Technology Group (FOXCONN) உடைய சிஇஓ Young Liu உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.
பாக்ஸ்கான் நிறுவனத்தின்(Hon Hai Precision Industry Co., Ltd) உடைய இந்திய பிரதிநிதியான வி. லீ தன்னுடைய linked in பக்கத்தில் தமிழ்நாடு முதல்வருடன் ஒப்பந்தம் கையெழுத்தான புகைப்படத்தை பதிவிட்டு ” we are committed ” எனப் பதிவிட்டு இருக்கிறார்.
தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது பாக்ஸ்கான் குழுமத்தைச் சேர்ந்த Hon Hai Technology Group . ஆனால், ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை என மறுப்பு தெரிவித்தது ஃபாக்ஸ்கான் இண்டஸ்ட்ரியல் இன்டர்நெட். இவை பாக்ஸ்கான் உடைய துணை நிறுவனங்கள்.
இதுகுறித்து CNBC TV 18 ஊடகத்தில் வெளியான செய்தியில், பாக்ஸ்கான் நிறுவனத்தின் துணை நிறுவனங்களான Hon Hai Technology மற்றும் Foxconn Industrial Internet (FII) இடையே ஊடகங்கள் குழம்பிவிட்டன. தமிழக அரசுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது ஹான் ஹை டெக்னாலஜி (Hon Hai Technology) என்றும், எஃப்ஐஐ அல்ல என தமிழ்நாடு தொழில்துறை அமைச்சரின் ட்விட்டர் பதிவை மேற்கொள்காட்டி வெளியிட்டு உள்ளது. மேலும் அந்நிறுவனத்தின் சிஇஓ Young Liu ஊடகங்களுக்கு பேட்டி அளித்ததும் இடம்பெற்று உள்ளது.
மேலும், இவ்வாறான தவறான தகவல்கள், தமிழ்நாடு அரசு முதலீடு மேற்கொள்வது தொடர்பாக எப்ஐஐ (Foxconn Industrial Internet) நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக வெளியான செய்திகளில் இருந்து உருவாகி இருக்கலாம் என்றும், எனினும் எப்ஐஐ உடன் முதலீடு தொடர்பான முடிவுகள் இன்னும் எடுக்கவில்லை என்றும் CNBC-TV18 செய்தியில் வெளியாகி இருக்கிறது.
தமிழ்நாடில் பாக்ஸ்கான் நிறுவனத்தின் முதலீடு குறித்து செய்தி வெளியிட்ட எகனாமிக் டைம்ஸ் செய்தியில், ஒப்பந்தமானது Foxconn Hon Hai Technology உடனே மேற்கொள்ளப்பட்டு உள்ளது, Foxconn Industrial Internet (FII) உடன் இல்லை என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்து உள்ளதாக அப்டேட் செய்து வெளியிட்டு உள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, ” ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது உண்மை. 1,600 கோடி முதலீடு, 6,000 பேருக்கு வேலை வாய்ப்பு, ஹான் ஹை நிறுவனம் நிச்சயமாக வருகிறது. ராய்டர்ஸ் நிறுவனம் தவறான செய்தியை வெளியிட்டு உள்ளனர். அது பாக்ஸ்கான் உடைய வேறொரு துணை நிறுவனம். அவர்களிடம் போய் கேட்டால் இல்லை என்று தான் சொல்வார்கள். எங்களுடைய பத்திரிகை செய்தியில் தெளிவாக தெரிவித்து உள்ளோம் ” எனக் கூறியுள்ளார்.
முடிவு :
நம் தேடலில், தமிழ்நாட்டில் பாக்ஸ்கான் நிறுவனம் ரூ1,600 கோடி முதலீடு செய்வதாக தமிழ்நாடு முதல்வர் சொல்வது பொய் என அந்நிறுவனம் மறுத்து உள்ளதாக பரவும் தகவல் தவறானது. மறுப்பு தெரிவித்தது Foxconn Industrial Internet. ஆனால், தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் (letter of intent) மேற்கொண்டது பாக்ஸ்கானின் மற்றொரு துணை நிறுவனமான Foxconn Hon Hai Technology என்பதை அறிய முடிகிறது.