கடந்த 50 ஆண்டுகளில் தமிழகத்தின் ஜி.டி.பி 764 மடங்கு வளர்ந்ததா ?

பரவிய செய்தி
கடந்த 50 ஆண்டுகளில் தமிழகத்தில் பெரிய வளர்ச்சி எதுவும் இல்லை, காமராஜருக்கு பிறகு தமிழகத்தில் பெரிய வளர்ச்சி எதுவும் இல்லை என்று சொல்பவர்களின் மனமாற்றத்திற்கு இந்த தரவு உகந்த மருந்தாக இருக்கும் என்று “Dream Tamilnadu” இயக்கம் நம்புகிறது.
மதிப்பீடு
விளக்கம்
சுரேஷ் சம்பந்தம், 1970-ம் ஆண்டில் 0.34 பில்லியன் டாலர்களாக இருந்த தமிழகத்தின் ஜி.டி.பி 2020-ல் 260 பில்லியன் டாலர்களாக 764 மடங்கு வளர்ந்து இருக்கிறது என்றும், 1970-ல் 62 பில்லியன் டாலர்களாக இருந்த இந்தியாவின் ஜி.டி.பி 2020-ல் 2.9 ட்ரில்லியன் டாலர்களாக 47 மடங்குகள் உயர்ந்து இருப்பதாக தரவுகளை அளித்து இருந்தார்.
இதுதொடர்பான தரவுகளை எங்கிருந்து எடுத்துள்ளீர்கள் என யூடர்ன் தரப்பில் விளக்கம் கேட்ட போது, உலக வங்கியின் தரவுகளின் மூலம் குறிப்பிட்டு உள்ளதாக சுரேஷ் சம்பந்தம் தெரிவித்து இருந்தார். இதற்கிடையில், சுரேஷ் சம்பந்தம் அளித்த தரவுகள் தவறானது என புருசோத்தமன் என்பவர் இந்திய அரசின் தரவுகள் உடன் நீண்டப் பதிவை தன் முகநூல் பக்கத்தில் செப்டம்பர் 23-ம் தேதி வெளியிட்டு இருந்தார்.
அவரின் பதிவில், ” 1970ல் $0.34பில்லியனாக இருந்த ஜிடிபி இப்போது $260பில்லியனாக உள்ளது, இது 764 மடங்கு என்றும், அதே நேரம் இந்தியா $62பில்லியனில் இருந்து இப்போது $2.9டிரில்லியனாக 47 மடங்கு மட்டுமே வளர்ந்துள்ளது என பரப்பி வருகிறார்கள்.
இதில் உள்ள பிழைகளை பார்ப்போம், 1970ல் தமிழக ஜிடிபி $0.34பில்லியன், இந்தியா ஜிடிபி $62 பில்லியன் எனில் இந்திய ஜிடிபியில் தமிழகத்தின் பங்கு வெறும் 0.5% மட்டுமே. இதற்கு வாய்ப்பே இல்லை என்பது தான் எனக்கு சந்தேகம் தட்டியது. இந்தியா ஜிடிபியில் குறைந்தது 5% ஆகவாவது இருந்திருக்குமேயொழிய 0.5% ஆக இருக்க வாய்ப்பே இல்லை. எனவே இது குறித்த புள்ளி விபரங்களை இந்தியாவின் அதிகாரப்பூர்வ புள்ளிவிபர தளங்களில் தேடினேன். வெள்ளையர்கள் ஆண்ட காலத்திலிருந்து நூறு ஆண்டுகளுக்கும் மேலான புள்ளி விபரங்கள் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ தளத்தில் பெறலாம். அப்படி தேடியதில் கிடைத்த விபரம் இதோ (nic.in)
1970-71 இல் இந்தியாவின் ஜிடிபி 44,382 கோடி ரூபாய்கள், அதே 1970-71 இல் தமிழகத்தின் ஜிடிபி 2,371கோடி ரூபாய்கள் இப்படி பார்த்தால் இந்திய ஜிடிபியில் தமிழகத்தின் பங்கு 5.34% அன்றைக்கு ஒரு டாலர் என்பது 7.5 ரூபாய் அப்படி பார்த்தால் இந்தியாவின் ஜிடிபி $59.18பில்லியன். தமிழ்நாட்டின் ஜிடிபியை ரூபாயில் இருந்து டாலருக்கு மாற்றும் போது $3.16 பில்லியன் ஆகும். இவனுங்க 316கோடி டாலரை 3.16பில்லியன் என போடாமல் 316 மில்லியன் என தவறாகவோ, வேண்டும் என்றோ கணக்கிட்டு அதை பரப்பிக்கொண்டுள்ளார்கள்.
பீகார் வளர்ச்சியை பார்க்கலாம். 1970-71 இல் பீகாரின் ஜிடிபி 2245 கோடி ரூபாய்கள் 1984ல் 8824 கோடி 393% வளர்ச்சி 1970-71 இல் தமிழகத்தின் ஜிடிபி 2371 கோடி ரூபாய்கள் 1984ல் 9151 கோடி 386% வளர்ச்சி ஆக திராவிடத்தின் முதல் 15 ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்தை விட மடங்கில் பீகார் வளர்ச்சி சிறிது அதிகமே. இது கிட்டத்தட்ட 2000 ஆண்டு வரை தொடர்ந்துள்ளது (2000 ஆண்டு பீகார், ஜார்க்கண்ட் இரண்டின் ஜிடிபியையும் கூட்டிக்கொள்ளவும்).
90களுக்கு பிந்தைய தாராளமயமாக்கலில் தமிழகத்தில் ஏற்பட்ட அசுர வளர்ச்சிக்கு திராவிட அரசுகள் உரிமை கோர இயலாது. அப்படி பார்த்தால் தென் மாநிலங்கள் அனைத்துமே தாராளமயமாக்கலுக்கு பின் வளர்ச்சி கண்டுள்ளது. மீண்டும் சொல்வது இதை தான், திராவிடத்தால் தமிழகம் வாழவில்லை, தமிழகத்தின் வளர்ச்சி வீழ்ந்தே உள்ளது. தமிழகத்தின் வளர்ச்சியை எப்போதும் பிற வடமாநிலங்களுடன் ஒப்பிடக்கூடாது. தமிழகம் ஒப்பிடப்பட வேண்டியது ஐரோப்பிய நாடுகளுடன். ஆனால் திராவிட அரசுகள் ஐரோப்பிய நாடுகள் அளவிற்கு வளரவேண்டிய தமிழகத்தை வடமாநிலங்களுடன் ஒப்பிட்டுக்கொண்டுள்ளன. ஏற்கனவே 70 மார்க் எடுத்தவனை ஏற்கனவே 35 மார்க் எடுத்தவனின் வளர்ச்சியோடு ஒப்பிடக்கூடாது. source : nic.in பக்கம் 114
http://mospi.nic.in/…/Estimates_of_SDP_1960-61_to_1983…
https://eands.dacnet.nic.in/…/Agriculture…/page24-89.pdf ” எனப் பதிவிட்டு இருந்தார்.
புருசோத்தமன் அவர்கள் தன்னுடைய புள்ளிவிவரங்கள் அடங்கிய பதிவை சுரேஷ் சம்பந்தம் உடைய பதிவில் பதிவிட்டு உங்களுடைய தரவு தவறானது என்றேக் கூறி இருக்கிறார். புருசோத்தமன் அளித்த தரவுகளை தவறானது என சுரேஷ் சம்பந்தம் மறுத்து நீண்ட உரையாடல் நிகழ்ந்து இருக்கிறது.
புருசோத்தமன் பகிர்ந்த தரவுகள் குறித்து யூடர்ன் தரப்பில் விளக்கம் கேட்ட போது, ” Estimates of State Domestic Products 1960-61 – 83-84” என்ற தலைப்பில் அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் 1970-71 இல் தமிழ்நாட்டின் NSDP 2371 கோடியாக உள்ளது. அன்றைய தேதியின் டாலர் விலைபடி ( 2371.1 / 7.5 = $3.16பில்லியன் ) $3.16 பில்லியன் ஆகும். ஆனால் 3.16 பில்லியன் டாலரை 0.314 பில்லியன் என பதிவிட்டு உள்ளார். மேலும் சுரேஷ் சம்பந்தம் தெரிவித்தது போல உலகவங்கி தரவுகளை எடுத்து பார்த்தாலும் இந்திய ஜிடிபியில் தமிழகத்தின் பங்கு 0.5% ஆக இருக்க வாய்ப்பே இல்லை ” என தெரிவித்து உள்ளார்.
Year | NSDP in Crores | GSDP in Crores |
1970-71 | 2371 | – |
1980-81 | 7218 | 8080 |
1984-85 | 12027 | 13657 |
1990-91 | 27673 | 31339 |
1994-95 | 54130 | 60734 |
1997-98 | 77302 | 87394 |
2000-01 | 119704 | 146796 |
தமிழகத்தின் 1970ஆம்ஆண்டு GSDP தரவு கிடைக்காத காரணத்தால் NSDP தரவுகளை வைத்து ஒப்பீடு செய்து பார்க்கையில், 1980-ல் இருந்து 1993 வரை உள்ள GSDP மற்றும் NSDP மிகப்பெரிய வித்தியாசத்தை கொண்டு உள்ளதாக தெரியவில்லை (மேலே உள்ள அட்டவணையில் காணலாம்).
Tamilnadu 2019 GSDP | Rs 16302.08 Billion | $ 229.60 Billion |
Tamilnadu 1970 NSDP | Rs 23.71 Billion | $ 3.16 Billion |
Growth Multiply | 687.56 x | 72.46 x |
( Dollar price : 1$ = Rs. 7.5 in 1970, 1$ = Rs. 69.7 in 2018 )
India 2018 GDP | Rs 189584.00 Billion | $ 2720.00 Billion |
India 1970 GDP | Rs 468.15 Billion | $ 62.42 Billion |
Growth Multiply | 404.96 x | 43.57 x |
இவ்வாறு கிடைத்த தரவுகளை வைத்து ஒப்பிடுகையில் தமிழகத்தின் வளர்ச்சி கடந்த 49 ஆண்டுகளில் 687.56 மடங்கு வளர்ந்து உள்ளது, அதேசமயம் இந்தியாவின் வளர்ச்சி கடந்த 48 ஆண்டுகளில் 404.96 மடங்கு வளர்ந்து உள்ளது. இவை இந்திய ருபாய் மதிப்பில் வகுக்கப்பட்ட மதிப்பு. ஆனால் இந்த மதிப்பை அமெரிக்க டாலருக்கு நிகராக மாற்றி ஒப்பிட்டால் தமிழகத்தின் வளர்ச்சி கடந்த 49 ஆண்டுகளில் 72.56 மடங்கு வளர்ந்து உள்ளது, அதே சமயம் இந்தியாவின் வளர்ச்சி கடந்த 48 ஆண்டுகளில் 43.57 மடங்கு வளர்ந்து உள்ளது.
1970-ம் ஆண்டு NSDP தரவில் இருந்த 3.16 பில்லியன் டாலரை 0.314 பில்லியன் என தவறாக மதிப்பிட்டு இருக்கலாம் அல்லது அவர் மேலேக் குறிப்பிட்டுள்ள அட்டவணை போல் தமிழகத்தின் வளர்ச்சி விகிதத்தை ரூபாய் உடனும், இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை அமெரிக்க டாலர் உடனும் மாறாக ஒப்பிட்டு இருக்கலாம். எவ்வாறாயினும், பொருளாதாரம் அறிந்தவர்கள் கூறுவது போல இந்தியா ஜிடிபியில் தமிழகத்தின் பங்கு குறைந்தது 5% ஆவது இருந்திருக்குமே தவிர 0.5% ஆக இருக்க வாய்ப்பு இல்லை எனப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த தரவுகளை வைத்து பார்க்கையில் தமிழகம் இந்தியாவை விட வளர்ச்சி விகிதத்தில் அதிகம் உள்ளது உண்மை தான், ஆனால் சுரேஷ் சம்பந்தம் கூறுவது போல இந்தியா 47 மடங்கும் தமிழகம் 764 மடங்கும் உயர்ந்து மிக பெரிய வித்தியாசத்தை கொண்டு உள்ளது என்ற தரவு தவறானது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.
ஆதாரம்
GSDP 1980-1999 – http://mospi.nic.in/sites/default/files/reports_and_publication/cso_national_accounts/state_domestic_product_state_series/1980_81/GTN.pdf
NSDP 1980-1999 – http://mospi.nic.in/sites/default/files/reports_and_publication/cso_national_accounts/state_domestic_product_state_series/1980_81/NTN.pdf
NSDP 2010-2019 – https://www.indiabudget.gov.in/economicsurvey/doc/Statistical-Appendix-in-English.pdf
GSDP 2011-2019 – https://www.esopb.gov.in/static/PDF/GSDP/Statewise-Data/statewisedata.pdf