” GER ” விகிதத்தில் இந்தியாவிற்கு முன்னோடியாக விளங்கும் தமிழகம் !

பரவிய செய்தி
கல்வியில் தமிழ்நாடுதான் டாப்.. Gross enrollment ratio (step 2019). தமிழ்நாடு 49%, இந்தியா 26.3%.
மதிப்பீடு
விளக்கம்
கடந்த ஆண்டில் தேசிய கல்விக் கொள்கையின் வரைவு வெளியான போது தமிழகத்தில் இருந்து பெரும் எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால், இந்த வருடம் என்.சி.பி எனும் தேசிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, தமிழகத்தின் GER (Gross Enrollment Ratio) விகிதம் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படும் பொருளாக மாறி உள்ளது.
GER (Gross Enrollment Ratio) என்பது பள்ளிப் படிப்பில் இருந்து மாணவர்கள் உயர் கல்வியில் சேர்க்கைக்கு செல்பவர்களின் (18முதல் 23 வயதுக்குள்) ஒட்டுமொத்த விகிதமாகும். 2018-19 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மொத்த ஜிஇஆர் 26.3 சதவீதமாகும். 2014-15-ம் ஆண்டில் 24.3 சதவீதமாக இருந்தது. தேசிய கல்விக் கொள்கையில் இந்தியாவின் ஜிஇஆர் சதவீதத்தை 2035-ம் ஆண்டிற்குள் 50% ஆக உயர்த்த வேண்டும் என நிர்ணயித்து உள்ளனர். இதன் பொருள், 2018-19 வரையில் 100 மாணவர்களில் 27 மாணவர்கள் மட்டுமே கல்லூரி படிப்பிற்குச் செல்கிறார்கள். இதனை 2035-ம் ஆண்டில் 50 பேராக உயர்த்த வேண்டும் என்பதாகும்..
இந்தியாவில் அடிப்படை கல்வி முதல் உயர் கல்வி வரையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. அது அங்கு அமைக்கப்பட்டு இருக்கும் கட்டமைப்பை சார்ந்தது. பள்ளிப்படிப்பை முடித்து உயர் கல்வி சேரும் மாணவர்களை அதிகம் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.
மத்திய மனிதவள மேம்பாட்டு ஆணையத்தின் இணையத்தில் வெளியிடப்பட்ட aishe 2018-2019ன் அறிக்கையில், இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மாநிலங்களில், தமிழ்நாடு 49 சதவீத ஜிஇஆர் உடன் முதல் இடம் வகிக்கிறது. டெல்லி(46.3%) , கேரளா (37) , தெலங்கானா(36.2%), ஆந்திர பிரதேசம்(32.4%), மகாராஷ்டிரா(32%), கர்நாடகா (28%), குஜராத் (20.4%) என்கிற சதவீதத்தைக் கொண்டுள்ளன.
பெரிய மாநிலங்களை தவிர்த்து சிறிய மாநிலமான சிக்கிம் மாநிலத்தில் ஒரே ஆண்டில் 16.5 சதவீதம் ஜிஇஆர் அதிகரித்து இருந்தது. 2017-18-ம் ஆண்டில் 37.4 சதவீதமாக இருந்த ஜிஇஆர் 2018-19 ஆம் ஆண்டில் 53.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேபோல், சண்டிகர் மாநிலம் 50.6% ஜிஇஆர் விகிதத்தைக் கொண்டிருக்கிறது. 2011 மக்கள் தொகை கணக்குப்படி, சிக்கிம் மாநிலத்தின் மக்கள் தொகை 6.19 லட்சம், சண்டிகர் மக்கள் தொகை 10 லட்சமாகும்.
பெரிய மாநிலங்களை பொறுத்தவரையில், குறைந்த ஜிஇஆர் கொண்ட மாநிலமாக பீகார் (13.6%), சத்தீஸ்கர் (18.6%), அசாம் (18.7% ) மற்றும் ஜார்கண்ட், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் ஜிஇஆர் ஆனது 2018-19ம் ஆண்டில் இந்தியாவின் சராசரி 26.3%-ஐ விட குறைவாக உள்ளன.
2019-ம் ஆண்டு ஜூலை xinhuanet எனும் இணையதளத்தில் வெளியான செய்தியில், சீனா ஜிஇஆர் ஆனது 48-ஐ அடைந்ததாக கூறப்பட்டுள்ளது. 2018-ல் சீனாவின் ஜிஇஆர் 48.1% , அதற்கு முந்தைய ஆண்டை விட 2.4 சதவீதம் அதிகரித்து உள்ளது. இதைத் தொடர்ந்து மலேசியா (43%), பக்ரைன் (50.48%), குவைத் (54.36%) ஆக உள்ளன.
தமிழ்நாட்டில் பாலின விகித்ததில் ஜிஇஆர் பார்க்கையில், ஆண்கள் 49.8% மற்றும் பெண்கள் 48.3% ஆக உள்ளனர். இதே இந்திய அளவில் ஆண்கள் 26.3% மற்றும் பெண்கள் 26.4% ஆக உள்ளனர். 2018-19-ல் இந்தியாவில் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினரின் படி, 23% மற்றும் 19.1% ஆக ஜிஇஆர் உள்ளது. தமிழகத்தில் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினரின் படி, 41.6% மற்றும் 37.8% ஆக உள்ளது.
கடந்த வருடம் தேசியக் கல்விக் கொள்கை வரைவு வந்த போதே மக்கள் தங்களின் கருத்தை எப்படி பதிவு செய்வது என்பது குறித்து கட்டுரை வெளியிட்டு இருந்தோம். அதில், ஜிஇஆர் குறித்து குறிப்பிட்டு இருந்தோம். அதேபோல், யூடர்ன் ஆசிரியர் ஐயன் கார்த்திகேயன் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தமிழகத்தின் ஜிஇஆர் குறித்து விளக்கம் அளித்து இருந்தார்.
மேலும் படிக்க : தேசியக் கல்விக் கொள்கை குறித்து உங்களின் கருத்தை பதிவு செய்வது எப்படி ?
இந்தியா தமிழகத்தை பின்பற்ற வேண்டும். புதிய கல்விக்கொள்கை தேவையா? pic.twitter.com/GZDEmO2YBb
— Iyan Karthikeyan (@Iyankarthikeyan) July 30, 2020
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.