தமிழ்நாட்டில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையம் எனப் பரவும் 9 வருட பழைய புகைப்படம் !

பரவிய செய்தி
கடலில் எழுதாத பேனா வைக்க காசு இருக்கு , கருணாநிதி பேரில் சதுக்கம் அமைக்க காசு இருக்கு,கருணாநிதிக்கு கோட்டம் அமைக்க காசு இருக்கு, கருணாநிதிக்கு சுடுகாடு கட்டுவதற்கு காசு இருக்கு….. அரசு நெல் குடோன் கட்டிடம் கட்டுவதற்கு காசு இல்லை…
மதிப்பீடு
விளக்கம்
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவாகப் பேனா சிலை, சதுக்கம், கோட்டம் அமைக்கத் தமிழ்நாடு அரசிடம் காசு இருக்கிறது. ஆனால், நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்கக் காசு இல்லை எனக் கூறுவதாக நெல் மூட்டைகள் மழையில் வீணாகும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
பரவக் கூடிய புகைப்படத்தினை கூகுள் ரிவேர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் தேடியதில் அப்புகைப்படம் 2014ம் ஆண்டு முதலே பல்வேறு செய்திகளில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதை அறிய முடிந்தது.
‘India.com’ என்னும் இணையதளத்தில் 2017ம் ஆண்டு நெல் மற்றும் கோதுமை கொள்முதல் தொடர்பாக இந்திய உணவு கழக அதிகாரிகள் அளித்த தகவல் குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில் பரவக் கூடிய அப்புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
அதற்கும் முன்னதாக 2014ம் ஆண்டு, நவம்பர் மாதம் ஃபுட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (FCI) நிறுவனத்தில் ஒன்றிய பாஜக அரசு மாறுதல்களைக் கொண்டு வருவது தொடர்பாக ‘Livemint’ இணையதளத்தில் வெளியான கட்டுரையிலும் அப்புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதே 2014ம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய உணவுக் கழகம் (FCI) உணவு தானியங்களைக் கொள்முதல் மற்றும் விநியோகம் செய்வதில் மெத்தனமாக நடந்து கொள்வதால் விலை உயர்வு ஏற்படுவதாக ‘Business today’ தளத்தில் வெளியான செய்தியிலும் அப்படம் இடம்பெற்றுள்ளது.
இவற்றில் இருந்து நெல் கொள்முதல் தொடர்பாகப் பரவக் கூடிய புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டது அல்ல. மேலும், இந்த புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவலும் இல்லை என்பதை அறிய முடிகிறது.
தமிழ்நாட்டில் புதிய நெல் கொள்முதல் நிலையங்கள் :
விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லினை சரியான நேரத்தில் கொள்முதல் செய்வது கிடையாது. அதனால் உணவுப் பொருள் வீணாகிறது என்கிற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே நிலவி வருகிறது. எனவே தமிழ்நாட்டில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்கள் குறித்துத் தேடினோம்.
இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சில தகவல்கள் கிடைக்கப்பெற்றது. ஒரு நேரடி கொள்முதல் மையம் சுமார் 33 சென்ட் பரப்பளவு மற்றும் 100 மெட்ரிக் சேமிப்பு வசதி, உலர்த்தும் தளம், வின்னோவிங் மெஷின், மின்னணு எடை அளவீடு மற்றும் ஈரப்பதம் மீட்டர் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் வகையில் அமைக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும் 311 நேரடி கொள்முதல் மையங்கள் ஏற்கனவே சொந்த கட்டிடங்களில் செயல்பட்டு வருகின்றன மற்றும் 260 டிபிசிக்கள் கட்டுமானத்திற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளனர்.
புதிதாகத் திறக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் பற்றிய செய்திகளையும் காண முடிந்தது. தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 2022, மார்ச் மாதம் 25ம் தேதி திருச்செந்தூர் தொகுதியில் அவர் திறந்து வைத்த நெல் கொள்முதல் நிலையத்தின் புகைப்படத்தினை பதிவு செய்துள்ளார்.
இன்று (25.03.2022) திருச்செந்தூர் தொகுதியில், நெல் கொள்முதல் நிலையங்களின் திறப்பு விழா, உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா, பேருந்து நிலையம், காய்கறி சந்தை மற்றும் பாதாள சாக்கடை பணிகள் ஆய்வு ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டோம். pic.twitter.com/YHDjZctZkN
— Anitha Radhakrishnan (@ARROffice) March 25, 2022
அதே போல் 2023ம் ஆண்டு, பிப்ரவரியில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அகரம்சீகூரிலும், ஏப்ரல் மாதத்தில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதியில் சிறுவஞ்சிபட்டு, உக்கல், அளத்துறை ஆகிய கிராமங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் கடந்த ஜூலை மாதம் பெண்ணாடம் பகுதிகளில் குறுவை சாகுபடி துவங்கியுள்ள நிலையில், மழைக்கு முன்னதாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்ப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.
இவற்றிலிருந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அதிக அளவில் திறப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதை அறிய முடிகிறது.
முடிவு :
நம் தேடலில், தமிழ்நாடு அரசு நெல் கொள்முதல் நிலையம் எனப் பரவக் கூடிய புகைப்படம் 2014ம் ஆண்டு முதல் பல்வேறு செய்திகளில் வெளியாகியுள்ளது என்பதை அறிய முடிகிறது.