This article is from Jun 16, 2021

தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளியில் சேர EMIS எண் மட்டும் போதுமா ?

பரவிய செய்தி

தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளியில் சேர்க்கும் போது, எந்த ஒரு குழந்தைக்கும் மாற்று சான்றிதழ்(TC) தேவை இல்லை. குழந்தையின் ஆதார் எண்ணை நீங்கள் சேர்க்கும் பள்ளியில் கொடுத்தால் போதுமானது. அவர்களாகவே உங்களுடைய EMIS Number ஐ எடுத்துக்கொள்வார்கள். தனியார் பள்ளியில் மாற்றுச் சான்றிதழ் கேட்டோ அல்லது EMIS Number ஐ கேட்டோ பணம் கட்டி ஏமாற வேண்டாம்.

மதிப்பீடு

விளக்கம்

தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் உள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க செல்கின்றனர். ஆனால், கட்டணம் செலுத்தாத காரணத்தினால் பள்ளி நிர்வாகம் டிசி கொடுக்க மறுத்தால் EMIS எண் மூலம் அரசு பள்ளியில் சேர்த்துக் கொள்ள வழி இருப்பதாக ஓர் மீம் பதிவு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து வாசகர்கள் தரப்பில் கேட்கப்பட்டது.

உண்மை என்ன ?

இந்த செய்தி பற்றிய தெளிவான விளக்கம் பெற பெயர் குறிப்பிட விரும்பாத அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்புகொண்டு பேசியபோது, ” 1-8 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் (TC) தேவை இல்லை. கல்வி உரிமைச் சட்டத்தின் படி அரசு பள்ளியில் அவர்கள் பதிவுசெய்து கொள்ளலாம். 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை சேர விரும்பும் மாணவர்களுக்கு TC அவசியம்.

EMIS நம்பர் என்பது 11 வரிசைக்கொண்ட மாணவர்களின் அடையாள எண். அந்த எண்ணையும், கடவுச்சொல்லையும் பயன்படுத்தி EMIS இணையத்தில் ( https://emis.tnschools.gov.in/login?returnUrl=%2Fdashboard ) லாக்இன் செய்யும் போது அந்த மாணவன் எந்த பள்ளியில், என்ன வகுப்பு படித்துக்கொண்டு உள்ளான் என்பது போன்ற விவரங்கள் வரும். ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் மாணவன் அந்த குறிப்பிட்ட பள்ளியில் பாக்கி உள்ள கட்டணங்களை கட்டிய பிறகே அந்த இணையத்தில் மாணவனின் பள்ளி விவரங்கள் மாற்றப்படுகின்றன. அதை மாற்றாமல் அரசு பள்ளியிலோ அல்லது வேறு எந்த தனியார் பள்ளியிலும் சேர்க்க முடியாது ” எனத் தெரிவித்தார்.

முடிவு :

நம் தேடலில், தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க மாற்று சான்றிதழுக்கு பதிலாக EMIS எண் மட்டும் போதும் என பரவும் தகவல் தவறானது. எனினும், 1-8 ஆம் வரை பயிலும் மாணவர்களுக்கு அரசு பள்ளியில் சேர மாற்று சான்றிதழ்(TC) அவசியம் இல்லை. அரசு பள்ளியில் பதிவு செய்து கொள்ளலாம். ஆனால், 9-12 வகுப்பு சேரும் மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் கட்டாயம் வேண்டும். வெறும் EMIS எண்ணை வைத்துக்கொண்டு மாணவ சேர்க்கையில் ஈடுபட முடியாது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader