தமிழகத்தில் தான் முதன் முதலாக அரசு பள்ளியில் KG வகுப்புகளா ?

பரவிய செய்தி

இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் அரசு பள்ளியில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடக்கம்.

மதிப்பீடு

சுருக்கம்

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கி இருப்பது பாராட்டுக்குரிய செயலாகும். எனினும், அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தமிழகத்திற்கு முன்பாகவே இந்தியாவில் பல மாநிலங்களில் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளக்கம்

தமிழக அரசு மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்புகளான எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கி வைத்துள்ளனர். இதில், தமிழகத்தில் முதல் முறையாக தருமபுரியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளை தமிழக அமைச்சர் அன்பழகன் தொடங்கி வைத்தார்.

தனியார் பள்ளிகளில் அதிக கட்டணத்தைப் பெறும் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் அரசு பள்ளியில் தொடங்கி இருப்பது இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் தான் என தமிழ் செய்தி நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அரசு பள்ளியில் எல்.கே.ஜி & யு.கே.ஜி :

கர்நாடகா :

2012 -ல் கர்நாடகாவின் பெங்களூரைச் சுற்றியுள்ள 31 அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் நடப்பு கல்வியாண்டில் இருந்து தொடங்க இருப்பதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது.

எனினும், 2017-ல் கன்னட மொழி வழி பள்ளிகளில் அரசின் அனுமதி இல்லாமல் ஆங்கில வழியில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் நடத்தி வந்த 18 பள்ளிகளில் வகுப்புகள் நிறுத்துவதாக கன்னட வளர்ச்சி ஆணையத்தின் தலைவர் எஸ்.ஜி.சித்தராமையா கூறியதாக செய்திகளில் இடம்பெற்றுள்ளது.

2018-19 கல்வியாண்டிற்கு பெங்களூரின் கடுகோடியில் உள்ள சீகேஹலி அரசு பள்ளியில் தனியார் அமைப்பு ஒன்று ப்ரி-ப்ரைமரி வகுப்புகளை தொடங்கியுள்ளனர்.

டெல்லி :

  டெல்லியில் உள்ள அரசு அங்கீகாரம் உடைய, உதவிபெறாத மற்றும் தனியார் பள்ளிகளில் இருக்கும் நர்சரி, கிண்டர் கார்டன்(கே.ஜி), 1-ம் வகுப்பு மாணவர்களுக்கான அதிகப்பட்ச வயதினை 2019-2020 கல்வியாண்டிற்கான சேர்க்கைக்கு கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில் குறைந்தபட்ச வயதே குறிப்பிட்டு இருந்துள்ளனர்.

தெலங்கானா :

பள்ளிப் பாடத்தில் தெலுங்கு மொழி கட்டாயம் என அறிவித்த தெலங்கானா மாநில அரசு 2018 கல்வியாண்டில் இருந்து மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இயங்கும் 11,800 அங்கன்வாடி மையங்களில் ஆங்கில வழியில் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகள் செயல்படுத்த இருப்பதாக 2018 மார்ச்சில் செய்தியில் வெளியாகி இருக்கிறது.

கேரளா :

கேரள மாநிலத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கல்வி மேம்பாட்டு திட்டம் குறித்த விவரத்தில், 90 நர்சரி பள்ளிகளில் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி முறையை பின்பற்றுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

புதுச்சேரி :

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் கூட ஆரம்ப நிலைப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழியில் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகள் நடைபெறுகிறது என்ற விவரங்கள் புதுச்சேரியின் கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் முதல் முறையாக எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகள் தமிழகத்தில் கொண்டு வந்ததாக கூறுவது தவறான தகவல்.

எனினும், தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளுக்கு  குறைந்த பட்சம் 30,000 முதல் அதிகபட்சம் லட்சக்கணக்கில் வாங்கும் சூழ்நிலையில் இம்முயற்சி மக்களுக்கு பயனுள்ளவையே.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button