பைக்குகள் விற்றால் 2 ஹெல்மெட் இலவசமாக வழங்க வேண்டும் – தமிழக அரசு

பரவிய செய்தி

புதிய இருசக்கர வாகனங்கள் விற்கும் போது 2 ஹெல்மெட்களை இலவசமாக வழங்க வேண்டும் என டீலர்களுக்கு தமிழக அரசு உத்தரவு.

மதிப்பீடு

சுருக்கம்

இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் போது 2 ஹெல்மெட்கள் வழங்க வேண்டும் என சட்டத்தில் இருந்த விதியின் படி, டீலர்கள் பைக்குகள் விற்பனையின் போது இரு ஹெல்மெட்களை வழங்க வேண்டும் என தமிழக அரசு மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

விளக்கம்

சாலையில் இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதோடு சாலை விபத்துக்களின் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் ஹெல்மெட்களை பயன்படுத்தாமல் செல்கையில் நிகழும் விபத்துகளால் ஏற்படும் மரணங்களே அதிகம்.

Advertisement

விபத்துக்கள் :

அதிகாரப்பூர்வ தகவல்களின் படி, தமிழகத்தில் 2008-ம் ஆண்டில் 82.6 லட்சமாக இருந்த இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 2018-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 2.16 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தது போன்று சாலை விபத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.

2017-ம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்களின் புள்ளி விவரங்கள் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட் அமைத்த குழுவின் பரிந்துரைப்படி, நிகழும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க இலக்கு வைத்து நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, சாலை விபத்துக்கள் 2019-ல் 7,767க்கு குறைவாகவும், 2020-ல் 3,572-ஐ தாண்டக் கூடாது என்ற இலக்கை வைத்து மாநிலங்களுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இலவச ஹெல்மெட்கள் சட்டம் :

Advertisement

1989 மத்திய மோட்டார் வாகன விதிகள் 138 (4)(எஃப்)-ன் படி இரு சக்கர வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் பாதுகாப்பான தலைகவசத்தை இரு சக்கர வாகனம் வாங்கும் பொழுது வழங்க வேண்டும் என கூறுகிறது.

தமிழகத்தில் ஹெல்மெட் இலவசம் :

சாலை விபத்தில் மரணிப்பவர்களில் 73 சதவீத பேர் ஹெல்மெட் இல்லாமல் பயணித்து விபத்தில் சிக்கி இறந்தவர்கள். இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் டீலர்கள் வாகனங்களை விற்பனை செய்யும் பொழுது இரு ஹெல்மெட்களை வழங்க வேண்டும் என்ற மோட்டார் சட்டம் இருந்து வந்தாலும் நடைமுறையில் செயல்படுத்தாமல் இருந்து வந்தன.

இந்நிலையில், தமிழகத்தில் இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் புதிய இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் பொழுது இலவசமாக 2 ஹெல்மெட்களை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

” இரு சக்கர வாகனங்கள் விற்கும் பொழுது BSI தர உறுதி அளிக்கப்பட்ட இரு தலைகவசம் இலவசமாக வழங்க வேண்டும் என போக்குவரத்து கமிஷனர் சி.சமயமூர்த்தி பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது “.

விற்பனையாளர்கள் எதிர்ப்பு :

தமிழக அரசின் அறிவிப்பிற்கு சில விற்பனையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவும் செய்துள்ளனர். 2 ஹெல்மெட்களுக்கு ரூ.3,000 முதல் ரூ.3,500 வரை செலவாகும் என்கிறார்கள். ஹெல்மெட்கள் இலவசமாக வழங்குவதால் விற்பனையாளர்கள் லாபத்தில் பாதிப்புகள் ஏற்படும் என்பது அவர்களுடைய கருத்து.

மேலும் படிக்க : சட்டம் தெரியுமா ? வாகனம் வாங்கினால் ஹெல்மெட்கள் வழங்க வேண்டும்.

எனினும், தமிழகத்தில் இருசக்கர வாகனங்கள் விற்பனையின் போது 2 ஹெல்மெட்கள் இலவசமாக வழங்க வேண்டும் என்பது எந்த அளவிற்கு நடைமுறைப்படுத்தப்படும் என்பதை பொருத்து இருந்தே பார்க்க முடியும். தமிழகத்திற்கு முன்பாக 2016-ல் ராஜஸ்தான் மாநிலத்திலும் இதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இருசக்கர வாகனங்கள் உடன் ஹெல்மெட்கள் இலவசமாக வழங்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை. அப்படி வழங்கும் பட்சத்தில் விபத்துக்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புகள் உள்ளன.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button