This article is from Apr 24, 2021

தமிழக அரசு மருந்துவமனைகளில் ஆக்சிஜன் சேமிப்பு உண்டு, உற்பத்தி இல்லை !

பரவிய செய்தி

இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளிலேயே ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை இரண்டு. அவை ஸ்டான்லி மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை.

Archive 

மதிப்பீடு

விளக்கம்

கொரோனாவின் இரண்டாவது அலையால் இந்தியாவில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு உயிரிழப்புகளும், நோயாளிகள் சிரமம்படுவதும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வடமாநிலங்களில் ஆக்சிஜனுக்காக நோயாளிகளின் உறவினர்கள் அலையும் காட்சிகள், மருத்துவமனைகள் தத்தளிக்கும் நிகழ்வுகள் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தமிழகத்தின் ஸ்டான்லி மற்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுவதாக ஓர் தகவல் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

2020 ஏப்ரல் 18-ம் தேதி National Health Mission வெளியிட்ட அறிக்கையில், இந்திய மருத்துவமனைகளில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி திறன், சேமிப்பு வசதி, ஐசியூ படுக்கைகள் போன்ற விவரங்கள் வெளியிடப்பட்டு இருந்தது.

அதில், ஆக்சிஜன் உற்பத்தி திறன் வசதியுடன் கூடிய 34 மருத்துவமனைகளின் பட்டியலில் ஸ்டான்லி மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனை மட்டுமின்றி தமிழகத்தின் எந்தவொரு மருத்துவமனையின் பெயரும் இடம்பெறவில்லை. ஏன், தென்னிந்தியாவில் கர்நாடகாவின் 2 மருத்துவனைகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இத்தகைய மருத்துவமனைகள் அனைத்தும் 100 படுக்கைகளை கொண்டவையாகவும், ஒரே ஒரு மருத்துவமனை மட்டும் 1000 படுக்கைகளை கொண்டதாகவும் இருக்கிறது.

அடுத்ததாக அதே அறிக்கையில் 18ம் பக்கத்தில், மருத்துவ ஆக்சிஜனை சேமித்து வைக்கும் டேங்க் உடன் கூடிய மாநிலவாரியான 165 மருத்துவமனைகளின் பட்டியலில் ராஜீவ் காந்தி மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை உள்ளிட்ட தமிழகத்தின் 12 மருத்துவமனைகள் இடம்பெற்றுள்ளன.

2018-ம் ஆண்டு Tamilnadu Medical Services Corporation Limited வெளியிட்ட டெண்டர் ஆணையில், ”  தமிழகத்தில் உள்ள 33 அரசு மருத்துவமனைகளில் 42 Liquid Oxygen Plant இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சேமித்து வைக்கும் பெரிய அளவிலான டேங்குகள்.

தமிழ்நாட்டில் முதல்முறையாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் Liquid Oxygen Plant டேங்க் பயன்பாட்டிற்கு வந்தது. இதை அமைப்பதற்கான ஆணை 2007ம் ஆண்டு கருணாநிதி அரசு வெளியிட்டது. 2012ம் ஆண்டு செயல்பாட்டிற்கு வந்தது.

” தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சேமிப்பு கொள்ளளவை தமிழக அரசு உயர்த்துவதாக ” 2020 மே மாதம் தி ஹிந்து செய்தியில் வெளியாகி இருக்கிறது. இதில், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 2 புதிய டேங்குகளை அமைத்து 20கிலி என்ற கொள்ளவை 60கிலி ஆக உயர்த்துவதாகக் கூறப்பட்டது.

கடந்த ஆண்டும் சேலம் அரசு மருத்துவமனையில் 35,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட Liquid Oxygen Plant டேங்கை திறந்து வைப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பகிர்ந்து இருந்தார்.

அரசு மருத்துவமனைகளில் புதிய டேங்குகளை அமைத்து கொள்ளளவை அதிகரிப்பது உரிய நேரத்தில் தடையில்லாமல் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதற்கு வழிவகை செய்யும். ஏனெனில், தமிழக அரசு மருத்துவமனைகள் அதிக படுக்கை வசதிகளுடன் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் திறன் கொண்டவை. உதாரணத்திற்கு, 2000 படுக்கைகளுக்கு மேல் கொண்ட சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு 20,000+ லிட்டர் கொள்ளளவு ஆக்சிஜன் டேங்க் அமைக்கப்பட்டு(60,000லிட்டர் ஆக உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டது) இருக்கிறது.

கேரளா மாநிலம் கொரோனா இரண்டாம் அலையில் ஆக்சிஜன் தேவையை சரி செய்து உபரி ஆக்சிஜனை தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு வழங்கும் நிலைக்கு சென்றது. அதற்கு காரணம், 2020 மார்ச் முதலே மாநிலத்தின் ஆக்சிஜன் தேவை கண்காணிக்கப்பட்டு கேரளாவில் இயங்கும் தொழிற்சாலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் அனைத்து மருத்துவமனைக்கு மட்டும் கிடைக்கும் வகையில் மாற்றப்பட்டது.

கேரளாவில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனில் 72 மெட்ரிக் டன் தமிழகத்திற்கு வழங்கி உள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. கேரளாவின் மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் உற்பத்தி திறன் இல்லை, தொழிற்சாலைகள் மூலமே உற்பத்தி செய்யப்படுகிறது.

முடிவு :

தமிழகத்தின் ராஜீவ் காந்தி மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி ஆகிய இரு மருத்துவமனைகள் மட்டுமே ஆக்சிஜன் உற்பத்தி திறன் கொண்டவை அல்ல. அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டு இருக்கும் Liquid Oxygen Plant டேங்குகளால் சேமிக்கும் ஆக்சிஜன் மூலம் மருத்துவமனை தேவை நிவர்த்தி செய்யப்படுகிறது. இவை பெரிய அளவில் கொள்ளளவு கொண்ட சேமிப்பு டேங்குகள்.

கருணாநிதி அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதை தொடங்கி வைக்கவில்லை, Liquid Oxygen Plant டேங்கை அமைப்பதை தொடங்கி வைத்து இருக்கிறது.

கூடுதல் தகவல் :

2012ம் ஆண்டு வெளியான தி ஹிந்து செய்தியில், ” ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்ட டேங்க் ரூ.40 லட்சம் செலவில் மருத்துவமனைக்கு எரிவாயுவை வழங்கும் ஐனாக்ஸ் ஏர் தயாரிப்பு நிறுவனத்தால் இலவசமாக கட்டப்பட்டுள்ளது ” என வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader