This article is from Jan 13, 2021

பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என 11 மடாதிபதிகள் கூட்டறிக்கை வெளியிட்டனரா ?

பரவிய செய்தி

இந்து விரோத பிஜேபி சக்திகளுக்கு வாக்களிக்க கூடாது. தமிழகத்தை சார்ந்த 11 மடாதிபதிகள் கூட்டறிக்கை !!!

Facebook link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

தமிழகத்தைச் சேர்ந்த 11 மடாதிபதிகள் இணைந்து இந்து விரோத பிஜேபி சக்திகளுக்கு வாக்களிக்க கூடாது என கூட்டறிக்கை வெளியிட்டதாக மடாதிபதிகள் ஒன்றாக இருக்கும் புகைப்படத்துடன் உள்ளாட்சி முரசு எனும் பெயரில் வெளியான இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ? 

வைரலாகும் மடாதிபதிகள் கைக்கோர்த்து இருக்கும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2019 ஏப்ரல் 14-ம் தேதி ” இந்து விரோத சக்திகளுக்கு வாக்களிக்க கூடாது” மடாதிபதிகள் பேட்டி எனும் தலைப்பில் வெளியான தினத்தந்தி செய்தி கிடைத்தது.

சென்னையில் பேரூர் ஆதினம் உள்பட 11 மடாதிபதிகள் இணைந்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ” பல லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு தலைவராக இருக்கும் தலைவர் இந்து மதத்தை மட்டும் இழிவுபடுத்துவது நியாயம் தானா ? நாங்கள் எந்த மதத்துக்கும் எதிரானவர்கள் இல்லை என்று அவர்கள் சொல்வது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், அந்த வார்த்தை வாய் அளவில் இருந்து வரும் வார்த்தையா ? அல்லது உள்ளத்தில் இருந்து வரும் வார்த்தையா ? என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். இந்து விரோத சக்திகளுக்கு வாக்களிக்க கூடாது. 

யாரெல்லாம் நம்மை மதிக்கிறார்கள், மதமாற்றம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று யார் சொல்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். இந்துக்களை யார் புறக்கணிக்கிறார்கள் என்பதை அடையாளம் காணுங்கள். குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களியுங்கள் என்று சொல்லவில்லை.
இந்துக்களுக்காக யார் பேசுவார்கள், யார் குரல் கொடுக்கிறார்கள் என்பதை அறிந்து செயல்பட வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை. ஒற்றுமையை இந்த தேர்தலில் காட்ட வேண்டும் என அவர்கள் தெரிவித்ததாக ” வெளியாகி இருக்கிறது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது 11 மடாதிபதிகள் சேர்ந்து ” இந்து விரோத சக்திகளுக்கு வாக்களிக்க கூடாது ” என்றேக் கூறியுள்ளனர். எனினும், யாருக்கு வாக்களிக்க வேண்டும், யாருக்கு வாக்களிக்க கூடாது எனக் குறிப்பிட்ட கட்சியை வெளிப்படையாக கூறவில்லை.
 
மடாதிபதிகள் இந்து விரோத சக்திகளுக்கு வாக்களிக்க கூடாது எனக் கூறியது கடந்த ஆண்டில் இருந்தே சமூக வலைதளங்களில் புகைப்படத்துடன் வைரலாகி இருக்கிறது. அதனுடன், பாஜக மீதான குற்றச்சாட்டுகளை வைத்து பகிர்ந்தும் இருக்கிறார்கள். பின்னர் அதை பாஜகவிற்கு எதிராக கூறியதாக பரப்பி உள்ளனர்.
முடிவு :
நம் தேடலில், இந்து விரோத பாஜக சக்திகளுக்கு வாக்களிக்க கூடாது என தமிழகத்தை சார்ந்த 11 மடாதிபதிகள் கூட்டறிக்கை வெளியிட்டதாக வைரலாகும் தகவல் தவறானது. கடந்த ஆண்டு வெளியிட்ட பேட்டியுடன், பாஜக கட்சியை இணைத்து பரப்பி இருக்கிறார்கள்.
Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader