மலக்குழி மரணங்களில் தமிழ்நாடு முதலிடம் எனப் பரவும் பொய் செய்தி!

பரவிய செய்தி

“கழிவுநீர் கால்வாய் இறப்பு எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்” – தேசிய தூய்மை பணியாளர் ஆணையத் தலைவர்.

X Link

மதிப்பீடு

விளக்கம்

“கழிவுநீர் கால்வாய் இறப்பு எண்ணிக்கையில் இந்தியாவிலே தமிழ்நாடுதான் முதல் இடத்தில் உள்ளது” என்று தேசிய தூய்மை பணியாளர் ஆணையத் தலைவர் எம்.வெங்கடேசன் கூறியதாக ‘E TV BHARAT தமிழ்நாடு’ ஊடகம் ஒரு செய்தி வெளியிட்டிருந்தார்கள். இதே தகவலை தினமலரும் தன் யூடியூப் பக்கத்தில் ஒரு செய்தியாக வெளியிட்டிருக்கிறார்கள்.

பரவி வரும் தகவல் குறித்து இணையத்தில் தேடியதில் 2023 டிசம்பர் 5ஆம் தேதி அபரூபா போடார்(Aparupa Poddar) என்பவர் நாடாளுமன்ற மக்களவையில் மலக்குழி சுத்தம் செய்வது பற்றிய பல்வேறு கேள்விகளை முன்வைத்தார்.  

அதற்கு பதிலளித்த சமுகநீதி அமைச்சகத்தின் (‘Ministry of Social Justice and Empowerment’) இணையமைச்சர் ராம்தாஸ் அதவாலே ஆண்டுவாரியாக எந்தெந்த மாநிலத்தில் எவ்வளவு மலக்குழி மரணங்கள் என்கிற தகவலை உள்ளடக்கிய பட்டியலை கொடுத்திருந்தார்.

கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் ஏற்பட்ட மலக்குழி மரணங்கள்:
(20.11.2023 வரை)

ராஜஸ்தான் – 10, குஜராத் – 9, தமிழ்நாடு – 7, மகாராஷ்டிரா – 7 என்பதே இறப்பு எண்ணிக்கையாக உள்ளது. எனவே 2023ஆம் ஆண்டை பொறுத்தவரை தமிழ்நாடு முதலிடத்தில் இல்லை என்பது தெளிவாகிறது.

மேலும், 2021-2023ஆம் ஆண்டுவரை மலக்குழி மரணங்களில் எண்ணிக்கை மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் குறைவாகவே உள்ளது. ஆனால் 2020ஆம் ஆண்டு மட்டும்தான் மலக்குழி மரணங்களின் எண்ணிக்கை (13) மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் வருடாவருடம் சமூகநீதி அமைச்சகத்தால் கொடுக்கப்படும் இந்தத் தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக உள்ளது.



2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் மக்களவையில் இதுதொடர்பாக கொடுக்கப்பட்ட தகவலில், மலக்குழி மரணங்களால் தமிழ்நாட்டில் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை ஆண்டுவாரியாக கீழ்க்கண்டவாறு கொடுக்கப்பட்டிருந்தது:

2019 : 13
2020 : 9
2021 : 5



2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் மலக்குழி மரணங்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த சமூகநீதி அமைச்சகம் தமிழ்நாட்டில் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை குறித்து கொடுத்த தகவல் கீழ்க்கண்டவாறு:

2019 : 13
2020 : 9
2021 : 8

மீண்டும் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மலக்குழி மரணங்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அதே அமைச்சகம் தமிழ்நாட்டில் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை குறித்து கொடுத்த தகவலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது:

2019 : 21
2020 : 13
2021 : 5   

இப்படியாக முன்னுக்குப்பின் முரணான தரவுகளையே ஆண்டுதோறும் சமூகநீதி அமைச்சகம் வழங்கி வருகிறது. அதோடு Manual Scavengers சட்டம் 2013, பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி மலம் அள்ளுபவர்களை Manual Scavenger எனக் கருதாது, இதிலும் பெரும் சிக்கல் உள்ளது. இந்த தரவுகளில் உள்ள குழப்பம் குறித்தும், யார்யாரை Manual Scavenger ஆகக் கருதவேண்டும் என்பதிலும் இருக்கும் பிரச்னை குறித்து சென்ற வருடம் நாம் ஒரு விரிவான கட்டுரையை வெளியிட்டுள்ளோம்.

மேலும் படிக்க: தலித் மக்கள் மீது நடத்தப்படும் வன்முறையில் தமிழ்நாடு முதலிடமென சாணக்யாவில் பொய் தகவல்!

முடிவு:

எனவே, மலக்குழி மரணங்களின் எண்ணிக்கையிலேயே தற்போதுவரை முரணான தரவுகளே இருப்பதால், இதில் தமிழ்நாடுதான் முதலிடம் என்று சொல்வது தவறாக சித்தரிக்கப்படும் செய்தி என்பதை அறியமுடிகிறது. அப்படி ஒன்றிய அரசால் கொடுக்கப்பட்ட தரவுகளிலும் வருடந்தோறும் தமிழ்நாடு முதல் இடத்தில் இல்லை என்பதையும் தெளிவாக பார்க்கமுடிகிறது. 

Please complete the required fields.




Back to top button
loader