திருமண இ-பதிவில் அழைப்பிதழில் உள்ள அனைவரின் பெயரையும் கட்டாயம் குறிப்பிட வேண்டுமா ?

பரவிய செய்தி

திருமணத்திற்கு செல்வதற்கான இபதிவு முறையில் புதிய நடைமுறை அறிமுகம். பத்திரிகையில் உள்ள அனைவர் பெயரையும் இ-பதிவில் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

Facebook link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் முக்கிய பயணங்களுக்கு இ-பதிவு செய்து பயணிக்கலாம் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. அவற்றில், திருமணங்கள் தொடர்பான பயணங்களுக்கு வழங்கப்படும் இ-பதிவு பிரிவு நீக்கப்பட்டும், மீண்டும் சேர்க்கப்பட்டும் என மாறி மாறி நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது மீண்டும் திருமண பயண பிரிவு சேர்க்கப்பட்டு அதற்கான விதிகளும் கூறப்பட்டு இருக்கின்றன.

Advertisement

அதுதொடர்பாக, பாலிமர் செய்தியில் வெளியான நியூஸ் கார்டில், ” திருமண பத்திரிகையில் பெயர் இடம்பெற்றுள்ளவர்கள் மட்டுமே இ-பதிவு செய்ய முடியும். பத்திரிகையில் உள்ள அனைவர் பெயரும் இ-பதிவில் கட்டாயம் குறிப்பிட வேண்டும். ஒரு திருமண நிகழ்விற்கு ஒரே ஒருமுறை மட்டுமே இ-பதிவு செய்ய இயலும் ” எனக் கூறப்பட்டுள்ளது.

உண்மை என்ன ?

தமிழக இ-பதிவில் திருமணம் தொடர்பான பிரிவில் உள்நுழைந்து பார்க்கையில், ” திருமண நிகழ்விற்கு வரும் அத்தனை விருந்தினர்களுக்கும் சேர்த்து ஒரு பதிவு மட்டுமே செய்ய வேண்டும். ஒரே பதிவிலேயே அனைத்து வண்டிகளுக்கும் இ-பதிவு செய்ய வழி வகுக்கப்பட்டுள்ளது.

திருமணத்தில் நேரடியாக சார்ந்துள்ள நபர் (விண்ணப்பதாரர் – மணமகள், மணமகன், தாய், தந்தை, போன்றோர்) ஒருவர் மட்டுமே இப்பதிவை மேற்கொள்ளலாம். விண்ணப்பதாரர் பெயர் பத்திரிக்கையில் கண்டிப்பாக இருக்க வேண்டும். திருமண அழைப்பிதழை கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தவறான தகவல்கள் தந்திருந்தாலோ, ஒரு நிகழ்விற்கு ஒன்றுக்கு மேற்பட்ட இ-பதிவுகள் செய்திருந்தாலோ Epidemic Diseases Act, 1897 மற்றும் Disaster Management Act, 2005 இன் படி (சிவில் மற்றும் கிரிமினல்) நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement

அனைத்து வண்டிகளின் எண்கள், ஓட்டுநர் பெயர், கைபேசி எண், அதில் பயணிக்கும் ஒவ்வொருவருடைய பெயர், ஏதேனும் ஒரு அரசாங்க அடையாளம் (ஆதார், ரேஷன், ஓட்டுநர் உரிமம், பான் அட்டை, பாஸ்போர்ட்) தயாராக வைத்துக்கொள்ளவும் ” என நிபந்தனைகள் இடம்பெற்று இருக்கிறது.

ஒரு திருமணத்திற்கு ஒரு இ-பதிவு மட்டுமே பதிவு செய்ய முடியும். அதையும் திருமணத்தில் நேரடியாக தொடர்பு கொண்டவர்கள் மட்டுமே பதிவு செய்ய இயலும். அவர்களின் பெயர் கண்டிப்பாக திருமண அழைப்பிதழில் இருக்க வேண்டும்.

எனினும், திருமணத்திற்காக அச்சடிக்கப்பட்ட அனைத்து பெயரையும் பதிவேற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஒரு திருமணத்திற்கு 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டது. திருமணத்திற்கு வரும் நபர்களின் வாகனங்களின் எண்கள், ஓட்டுநர் பெயர் மற்றும் அதில் பயணிக்கும் அனைவரின் பெயர்களும் கொடுக்க வேண்டும்.

முடிவு : 

நம் தேடலில், திருமண பயணங்களுக்கான இ-பதிவில் திருமண அழைப்பிதழில் உள்ள அனைவரின் பெயரையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என எந்த நிபந்தனையும் இல்லை என அறிய முடிகிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button