தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளிகள் கொல்லப்படுவதாகப் பரவும் வேறு சில வதந்தி வீடியோக்கள் !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாட்டில் பணிபரியும் வடமாநில தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு இல்லை, அவர்கள் மீது தமிழ்நாட்டு மக்கள் மிகக் கொடூரமாகத் தாக்குதல் நடத்துகிறார்கள் எனப் போலிச் செய்திகள் சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டு பீகார் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையே பதற்றம் உருவாகியது. இந்த வதந்திகளை இந்தி ஊடகங்களும், பீகாரின் எதிர்க்கட்சி பாஜகவும் பரப்பினர்.
இதற்கிடையில், தமிழ்நாட்டில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர், வதந்திகளை பரப்ப வேண்டாம் என தமிழ்நாடு அரசும், காவல்துறையும் தெரிவித்து வருகிறது. மேலும், வதந்தி பரப்பி வரும் நபர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், கொலை செய்யப்படுவதாகவும் பல பொய்யான வீடியோக்கள் தொடர்ந்து வடமாநிலங்களில் பரப்பப்பட்டு வருகின்றன.
வீடியோ 1 :
What is happening?#Sad #BihariMajdoor #Bihar #TamilNadu #RahulGandhiinCambridge pic.twitter.com/lqp7muWzjJ
— . (@YaduSenaChief) March 4, 2023
இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை சிலர் இரும்பு கம்பிகளால் தாக்கும் வீடியோ தமிழ்நாட்டில் நிகழ்ந்தது போன்று பரப்பி வருகின்றனர். ஆனால், இந்த கடந்த மாதம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்ததாக பரப்பப்பட்டது. அதற்கு உத்தரப் பிரதேசத்தின் புலந்த்சாகர் காவல்துறை மறுப்பு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டு இருந்தது.
भ्रामक खबर का खण्डन~ @UPPViralCheck
#UPPolice pic.twitter.com/xgLyzJPU3x— Bulandshahr Police (@bulandshahrpol) February 24, 2023
வைரல் வீடியோ பஞ்சாப் மாநிலம் சங்க்ரூர் பகுதியில் நிகழ்ந்ததாக 2023 பிப்ரவரி 20ம் தேதி தி ப்ரீ ப்ரெஸ் ஜர்னல் எனும் செய்தி இணையதளத்தில் புகைப்படத்துடன் வெளியாகி இருக்கிறது.
வீடியோ 2 :
அடுத்ததாக, சாலையில் வைத்து ஒருவரை ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்யும் வீடியோ காட்சி தமிழ்நாடு எனப் பரப்பப்பட்டு வருகிறது.
பரப்பப்படும் வீடியோ கடந்த 2021ம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தில் நிகழ்ந்தது. ” MURDER OF GANGSTER ANWAR SHAIKH ” எனும் தலைப்பில் 2021ம் ஆண்டு யூடியூப் சேனல் ஒன்றில் இதே வீடியோ பதிவாகி இருக்கிறது.
2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கர்நாடக மாநிலம் சாவனுர் பகுதியில் அன்வர் ஷேக் எனும் ரவுடியை சிலர் கொலை செய்துள்ளனர். இதுகுறித்து ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
வீடியோ 3 :
அடுத்ததாக, தமிழ்நாட்டில் பணிக்கு சென்றுக் கொண்டிருந்த பீகாரைச் சேர்ந்த இருவரை கொலை செய்ய முயற்சித்து கத்தியால் வெட்டியதாக இவ்விரு புகைப்படங்களை பரப்பி வருகின்றனர்.
ஆனால், வைரல் செய்யப்படும் புகைப்படங்கள் கோவையில் 15 மணி நேரத்தில் நடந்த இரண்டை கொலை சம்பவம் தொடர்பாக பிப்ரவரி 13ம் தேதி பிபிசி வெளியிட்ட கட்டுரையில் வெளியாகி இருக்கிறது.
இது கோவை நீதிமன்றத்திற்கு வெளியே நடந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையது. புகைப்படத்தில் இருப்பது கொலை செய்யப்பட்ட கோகுல் மற்றும் காயத்துடன் இருப்பது மனோஜ். இவர்கள் யாரும் வடமாநில தொழிலாளர்கள் அல்ல, அப்பகுதியைச் சேர்ந்தவர்களே.
மேலும் படிக்க : தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளிகளுக்கு ஆபத்து என பீகாரில் பொய் பிரச்சாரம் செய்யும் பாஜக, இந்தி ஊடகங்கள்
மேலும் படிக்க : தமிழ்நாட்டில் இந்தி பேசுபவர்களை தாக்கி கொல்வதாக வடநாட்டில் பரப்பப்படும் வதந்தி !
இதற்கு முன்பாகவும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், கொல்லப்படுவதாகவும் பரப்பப்பட்ட பல்வேறு வீடியோக்கள் குறித்தும் கட்டுரைகள் வெளியிட்டு இருக்கிறோம்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.