This article is from May 08, 2021

திமுக அரசு பால் விலையை ரூ.6 உயர்த்தி ரூ.3 ஆக குறைத்ததா ?

பரவிய செய்தி

பால் விற்பனை விலை உயர்வு. விற்பனை விலை 6 ரூபாயில் இருந்து ரூ.3 குறைந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மதிப்பீடு

விளக்கம்

தமிழக அரசின் முதல்வராக மு.க.ஸ்டாலின் மே 7-ம் தேதி பொறுப்பேற்ற போது ஆவின் பால் விலை ரூ.3 குறைக்கப்படும் எனும் கோப்பில் கையெழுத்திட்டார்.

இந்நிலையில், மே 7-ம் தேதி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் பால் கொள்முதல் விலை உயர்த்தி உள்ளதாகவும், விற்பனை விலையில் 6 ரூபாயாக இருப்பதை 3 ரூபாயாக குறைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது என முன்னணி செய்தித்தாள்கள், சேனல்களில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ?

தமிழக பால்வளத்துறை அரசு முதன்மை செயலாளர் கே.கோபால் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது,

மேலே படிக்கப்பட்ட அரசாணையில் 19.08.2019 முதல் கீழ்க்கண்டவாறு பால்கொள்முதல் விலை மற்றும் பால் விற்பனை விலையை உயர்த்தி ஆணை வெளியிட்டது. அ.கொள்முதல் விலை :  ஒரு லிட்டர் பசும்பாலின் தற்போதைய கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.4 உயர்த்தப்பட்டு ரூ.28-ல் இருந்து ரூ.32 ஆக விலை நிர்ணயம் செய்யப்படுகிறது ஒரு லிட்டர் எருமைப்பாலின் தற்போதைய கொள்முதல் விலை ஒன்றுக்கு ரூ.6 உயர்த்தப்பட்டு ரூ.35-ல் இருந்து ரூ.41 ஆக விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆ. விற்பனை விலை : அனைத்து பால் வகைகளுக்கான விற்பனை விலையினை லிட்டர் ஒன்றுக்கு ரூ.6 மட்டும் உயர்த்தி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

2. பொதுமக்களின் நலன் கருதி பால் விற்பனை விலையினை அரசு நன்கு பரிசீலனை செய்து அனைத்து பால் வகைகளுக்கான விற்பனை விலையினை லிட்டர் ஒன்றுக்கு ரூ.6-ல் இருந்து ரூ.3 ஆக குறைத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பு ஆணை வருகிற 16-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
3. மேலே பத்தி இரண்டில் ஆணையிட்ட விலை குறைப்பு 16.05.2021 முதல் அமலுக்கு வருகிறது ” எனக் கூறப்பட்டுள்ளது.
.
தமிழக அரசு தற்போது பால் விலையை உயர்த்தவில்லை. 2019ம் ஆண்டு பால் கொள்முதல் விலையை உயர்த்திய போது அனைத்து வகையான பால்களுக்கும் விற்பனை விலையை ரூ.6 ஆக  உயர்த்தியது. அந்த 6 ரூபாயில் 3 ரூபாய் விலையை குறைத்து அரசாணை வெளியிட்டு இருக்கிறது.
.
ஆனால், பால் விலையை 6 ரூபாய் உயர்த்தி 3 ரூபாய் குறைத்து 3 ரூபாய் லாபம் பார்த்ததாகவும், தற்போதைய அரசு பால் விலையை உயர்த்தி உள்ளதாகவும் தவறான செய்திகளை செய்தி நிறுவனங்களுமே வெளியிட்டு வருகின்றன.
.
இதுகுறித்து, ஆவின் தரப்பில் விசாரித்த போது இதை மறுத்தனர். விலை குறைக்கவே நடவடிக்கைகள் மேற்கொள்கிறோம் என்றனர்.
.
மேலும், ஆவின் பாலின் புதிய விலை ரூ.31.50 ஆக இருப்பதாக சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். ஆனால், கடைகளில் இன்றைய விலை ரூ26 (ரூ25.50) ஆகவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Please complete the required fields.




Back to top button
loader