தமிழகத்தில் உருது மட்டுமே கற்பிக்கப்படுகிறதா ?| சிறுபான்மை மொழி கற்பிக்கும் அரசு பள்ளிகள்.

பரவிய செய்தி
தமிழகத்தில் மும்மொழி பாடம் உள்ள மாநில அரசு பள்ளிக் கூடங்கள் இல்லை என்று திமுகவும் அதிமுகவும் சொல்ல துணிவு உண்டா..? தமிழ் ஆங்கிலத்தோடு மூன்றாவது மொழியாக உருது சொல்லிக் கொடுக்கும் அரசு பள்ளிகள் தமிழகத்தில் பல உண்டு….ஆனால் மற்ற மொழிகள் மட்டும் கூடாது.
மதிப்பீடு
விளக்கம்
இந்திய அளவில் புதிய தேசியக் கல்விக் கொள்கை அமல்படுத்துவது மீண்டும் சர்ச்சையாகி வரும் நிலையில் அதற்கான எதிர்ப்பு குரல்கள் தமிழகத்தில் இருந்து அதிகம் எழுகிறது. அதேபோல், தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படாது, ஏற்கனவே உள்ள இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதும் பாராட்டுக்குள்ளாக்கியது.
தமிழகத்தில் தமிழ் ஆங்கிலத்தோடு மூன்றாவது மொழியாக உருது சொல்லிக் கொடுக்கும் அரசு பள்ளிகள் தமிழகத்தில் பல உண்டு, ஆனால் மற்ற மொழிகள் கூடாது என தமிழக முதல்வர் கூறிய கருத்திற்கு எதிராக தமிழக பாஜகவைச் சேர்ந்த கே.டி.ராகவன் பதிவிட்ட பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழக அரசு பள்ளிகளில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படுகிறது. அரசு பள்ளிகளில் கூடுதலாக உருது மட்டுமே கற்பிக்கப்படுவதாக கூறுவது தவறு. சிறுபான்மையினர் மக்களுக்காக அவர்களின் மொழியை கற்பிக்கும் பள்ளிகள் இயங்கி வருகின்ற என்பதை அறிந்தும் உருது மொழியை மட்டும் குறிப்பிட்டு வைரல் செய்து வருகிறார்கள். தமிழகத்தில் சிறுபான்மை மொழிகளான தெலுங்கு, உருது, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. இம்மொழிகள் குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டுமே கற்பிக்கப்படுகின்றன, அனைத்து அரசு பள்ளிகளிலும் கற்பிக்கப்படுவதில்லை.
உதாரணமாக, வேலூர் போன்ற முஸ்லீம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உருது மொழி இடம்பெறுகிறது. ஓசூர் போன்ற தமிழக எல்லையோர பகுதிகளில் உள்ள பள்ளிகளில் கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகள் இடம்பெறுகின்றன. அதேபோல், சமஸ்கிருதம் மற்றும் அரபிக் மொழி கற்பிக்கும் ஓரியண்டல் பள்ளிகளும் தமிழகத்தில் இயங்குகின்றன.
ஆர்டிகள் 30-ன் படி, மதம் மற்றும் மொழியின் அடிப்டையில் உள்ள சிறுபான்மையினர் தங்களுக்கு விருப்பமான கல்வி நிறுவனங்களை நிறுவுவதற்கும், நிர்வகிப்பதற்கும் உரிமை உண்டு.
2018-ம் ஆண்டு ஈரோட்டில் பேட்டியளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ” தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இந்தி மொழி கிடையாது. உருது, மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் பேசும் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து வருகிறது ” எனக் கூறி இருந்தார்.
சிறுபான்மை மொழி கற்பிக்கும் முறை தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் செயல்பாட்டில் இருக்கும் ஒன்று. தமிழகத்தில் சிறுபான்மை மொழி சங்கம் இயங்கி வருகிறது. கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தை தமிழக அரசு கடந்த 2006-ம் ஆண்டு அமல்படுத்தியது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளில் முதல் பாடமாக தமிழ் கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும், மொழிச் சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத் தேர்வு எழுதுவதில் இருந்து 2022-ம் ஆண்டு வரை விலக்களித்து உள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
அரசு பள்ளிகளில் அனைவருக்கும் உருது மொழி கற்பிக்கப்படுவதாக தவறான உதாரணத்தை முன்வைக்கின்றனர். சிறுபான்மை மொழி என்கிற அடிப்படையில் தேவைப்படும் பகுதிகளில் மட்டுமே உருது, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகள் கற்பிக்கப்படுகிறது. இதைத் தவிர்த்து, மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படுகிறது. சிறுபான்மை மொழி பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம் என்கிற சட்டம் இயற்றப்பட்டுள்ளது.