தமிழ்நாட்டு மசூதியின் உண்டியல் பணம் எனப் பரப்பப்படும் பங்களாதேஷ் வீடியோ !

பரவிய செய்தி
இவர்கள் உண்டியல் பணம் மட்டும் அவர்களுக்கு சொந்தம். இந்துகள் பணம் அரசாங்கத்துக்கு இது என்ன நியாயம் ஆண்டவா எங்கள் தமிழ் நாட்டை நீதான் காப்பாற்ற வேண்டும்.
மதிப்பீடு
விளக்கம்
மசூதி உண்டியல் பணம் இஸ்லாமியர்களிடமே வழங்கப்படுகிறது. ஆனால் இந்துக் கோவில்களின் உண்டியல் பணத்தினை மட்டும் அரசாங்கம் எடுத்துக் கொள்கிறது. தமிழ் நாட்டினை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் எனக் கூறி வீடியோ ஒன்றினை பாஜகவினர் பலரும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
அந்த வீடியோவில், பெட்டிகளிலிருந்து ரூபாய் நோட்டுக்கள் எடுத்து இஸ்லாமியர்கள் சிலர் மூட்டைக் கட்டுவதும், அதனை எண்ணும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இவர்கள் உண்டியல் பணம் மட்டும் அவர்களுக்கு சொந்தம் 😭 இந்துகள் பணம் அரசாங்கத்துக்கு இது என்ன நியாயம் ஆண்டவா எங்கள் தமிழ் நாட்டை நீதான் காப்பாற்ற வேண்டும் pic.twitter.com/32tH9BUJSe
— K Selvam BJP (@FaMD3WNWPuvnuSL) June 7, 2023
இவர்கள் உண்டியல் பணம் மட்டும் அவர்களுக்கு சொந்தம் 😭 இந்துகள் பணம் அரசாங்கத்துக்கு இது என்ன நியாயம் …..நீதான் இந்து கோவில்கள் விடுவிக்க அருள் புரிய வேண்டும்.. pic.twitter.com/FdrCSEmpYY
— T.K.T.IYYAPPAN IASS (@JaHindh) June 7, 2023
உண்மை என்ன ?
பரவக் கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு இணையத்தில் தேடியதில், அது தமிழ்நாட்டிலோ, இந்தியாவிலோ நடந்தது அல்ல என்பதை அறிய முடிந்தது.
அந்த வீடியோ ‘Jago News’ எனும் யூடியூப் பக்கத்தில் 2023, மே மாதம் 6ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. பெங்காலி மொழியில் இருந்த அதன் தலைப்பினை மொழிப்பெயர்த்துப் படித்ததில் “A record 5.5 million taka was found in the donation box of Pagla mosque” என குறிப்பிடப்பட்டுள்ளதை காண முடிந்தது. மேலும் அந்த வீடியோ நிலைத்தகவலில் இது பற்றி வெளியான செய்தியின் லிங்க்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
அச்செய்தியில் ‘கிஷோர்கஞ்சில் உள்ள பக்லா மசூதி’ என்றுள்ளது. பங்களாதேஷில் உள்ள பக்லா என்னும் மசூதியில் கடந்த மே மாதம் 6ம் தேதி நான்கு மாதங்களுக்குப் பிறகு 8 நன்கொடை பெட்டிகள் திறக்கப்பட்டுள்ளது. சுமார் 200 பேர் 13 மணிநேரம் அப்பணத்தினை எண்ணி முடித்த பிறகு, அதில் 5 கோடியே 59 லட்சத்து 7 ஆயிரத்து 689 டாக்கா (பங்களாதேஷ் பணத்தின் மதிப்பு) இருந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பணம் எண்ணும் பணி நடைபெறும்போது கிஷோர்கஞ்ச் துணை ஆணையரும், பக்லா மசூதி நிர்வாகக் குழுத் தலைவருமான முகமது அபுல் கலாம் ஆசாத் ஆய்வு செய்துள்ளார். இவ்வாறு நன்கொடை மூலம் பெறப்படும் பணம் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்கள், மதரஸாக்கள் மற்றும் அனாதை இல்லங்களுடன் இணைந்து பல்வேறு சமூக நலப் பணிகளுக்குச் செலவிடப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.

மேலும் முகமது அபுல் கலாம் ஆசாத் பேசுகையில் மசூதியின் வளாகத்தில் சர்வதேச தரத்தில் ஒரு இஸ்லாமிய வளாகத்தைக் கட்டுவதற்கான திட்டத்தையும் அறிவித்துள்ளார். இது குறித்த செய்தி ‘Kalerkantho’ என்ற இணையதளத்திலும் வெளியாகியுள்ளது.
பங்களாதேஷ் மசூதியில் நடந்த நிகழ்வினை தமிழ்நாட்டில் நடந்தது போலத் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க : திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறையில் பௌத்த மதச்சின்னம் கொண்டு வந்ததாகப் பரப்பப்படும் பொய் !
மேலும் படிக்க : கேரளாவில் உள்ள சர்ச்சில் ரூ7000 கோடி கருப்பு பணம் கைப்பற்றப்பட்டதாகப் பரவும் தவறான தகவல் !
முடிவு :
நம் தேடலில், தமிழ்நாட்டிலுள்ள மசூதி உண்டியல் பணம் எனப் பரப்பப்படும் வீடியோ பங்களாதேஷ் நாட்டில் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.