65,000 ச.மீ நாடாளுமன்றத்திற்கு 970 கோடி, 12,000 ச.மீ தமிழக தலைமை செயலகத்திற்கு 465 கோடி செலவா ?

பரவிய செய்தி

2020-ல சுமார் 65 ஆயிரம் சதுர மீட்டரில், நவீன கட்டிட கலையுடன் 4 மாடி கட்டிடமாக கட்டபடும் புதிய நாடாளமன்ற கட்டடத்தின் கட்டுமான செலவு ₹970 கோடி தான்…
ஆனால் 10-ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 12 ஆயிரம் சதுர மீட்டரில், 2 மாடி தமிழக புதிய சட்டசபை கட்டடத்தின் கட்டுமான செலவு ₹465 கோடி!!.

மதிப்பீடு

விளக்கம்

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டுவது தொடர்பான அறிவிப்பு வெளியானதில் இருந்து எழுந்த ஆதரவிற்கும், எதிர்ப்பிற்கும் நடுவில் புதிய கட்டிடம் கட்டப்படுவதற்கு அடிக்கலை நாட்டினர் பிரதமர் மோடி. 64,500 சதுர மீட்டரில் ரூ.971 கோடி மதிப்பில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

இதற்கிடையில், புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு எதிராக வரும் எதிர்ப்புகளுக்கு பதில் அளிக்கும் வகையில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தமிழக முதல்வராக இருந்த போது கட்டப்பட்ட புதிய தலைமை செயலகம் கட்டிடத்தின் பரப்பளவு மற்றும் அது கட்டப்படுவதற்கான தொகை ஆகியவற்றை புதிய நாடாளுமன்றத்துடன் ஒப்பிட்டு ஒரு தகவலை சமூக வலைதளங்களில் பாஜகவினர் பரப்பி வருகிறார்கள்.

Archive link 

Advertisement

” 65,000 சதுர மீட்டரில் கட்டப்படும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் கட்டுமான செலவு 970 கோடி, 10  ஆண்டுகளுக்கு முன்பு 12,000 சதுர மீட்டரில் தமிழக புதிய சட்டசபை கட்டடத்தின் கட்டுமான செலவு 465 கோடி ” என ஒப்பிட்டு பகிர்ந்து வருகிறார்கள். இதன் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பில் கேட்கப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?  

புதிய தலைமை செயலகம் கட்டிடத்தின் உண்மையான பரப்பளவு எவ்வளவு என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்பாக, பகிரப்படும் தகவலில் அவர்களே குழப்பிக் கொண்ட ஒன்றை எடுத்துரைக்க வேண்டும். முதலில் 12,000 சதுர மீட்டர்கள் எனக் குறிப்பிட்டவர்கள், பின்னர் 12,000 சதுர அடிகள் எனக் குறிப்பிட்டு உள்ளார்கள்.

பாஜகவின் செய்தித்தொடர்பாளர் எஸ்.ஜி.சூர்யா பகிர்ந்த தகவலிலும், ” 12,000 சதுர மீட்டர்கள் என்றும், 12,000 சதுர அடிகள் என்றும் ” மாறிக் குறிப்பிட்டு இருப்பதை காணலாம். 12,000 சதுர அடிகளில் புதிய தலைமை செயலகம் கட்டிடத்தை கட்ட இயலாது என நன்றாக தெரியும். சரி, 12,000 சதுர மீட்டர்கள் என்ற பரப்பளவை வைத்துக் கொள்ளலாம்.

2010-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி வெளியான NDTV செய்தியில், ” தமிழ்நாடு புதிய சட்டசபை வளாகம் 80,000 சதுர மீட்டர்களில் 425 கோடியில் கட்டப்பட்டு மார்ச் 13-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைக்க அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாகக் ” கூறப்பட்டுள்ளது.

2009-2010ம் ஆண்டு தமிழக பொதுப்பணித்துறை புதிய தலைமை செயலகம் குறித்து வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தின் புதிய தலைமை செயலகம் பிளாக் ஏ மற்றும் பிளாக் பி என இரு பிரிவாக கட்டப்பட்டு உள்ளது. பிளாக் ஏ மட்டும் 9,30,297 சதுர அடிகள், பிளாக் பி பகுதி 7,43,900 சதுர அடிகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், பிளாக் ஏ-விற்கு 425.57 கோடியும், பிளாக் பி-க்கு 279.564 கோடியும் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சதுர அடிகளை சதுர மீட்டராக மாற்றுகையில், பிளாக் ஏ 9,30,297 சதுர அடிகள் = 86,427 சதுர மீட்டர்கள், பிளாக் பி  69,110 சதுர மீட்டர்கள் என அறிய முடிந்தது. மொத்த பரப்பளவு 1,55,537 சதுர மீட்டர்கள், மொத்த நிதி 705.134 கோடிகள். 2010-ல் வெளியான செய்தியிலும், தமிழக சட்டசபை வளாகம் 80,000 சதுர மீட்டர்கள் எனக் குறிப்பிட்டு உள்ளதை பார்க்கலாம்.

இது வெறும் சட்டசபைக்கான கட்டிடம் மட்டுமில்லை. புதிய தலைமை செயலகம் வளாகத்தில், சட்டசபை, சட்டசபை செயலகம், முதல்வர், ஆளுநர், அமைச்சர்கள், தலைமை செயலர், முக்கிய துறைககள் ஆகியவற்றிற்கான அலுவலங்கள் இடம்பெற்று இருக்கும். பிளாக் பி பகுதியில் 30 செயலக துறைகளுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக பொதுப்பணி துறை அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.

சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி ஆட்சியில் தமிழகத்திற்கு புதிய தலைமை செயலகம் கட்டிடம் கட்டப்பட்டாலும், அதிமுக தலைவர் ஜெயலலிதா ஆட்சி வந்த உடன் புதிய தலைமை செயலகம் வளாகத்தை தமிழக அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது.

முடிவு :

நம் தேடலில், மத்திய அரசின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்துடன் ஒப்பிட்டப்பட்ட தமிழகத்தின் புதிய தலைமை செயலகம் கட்டிடத்தின் பரப்பளவு 12,000 சதுர மீட்டர் இல்லை என்று தெளிவாய் அறிய முடிகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button