தமிழகத்தில் அடுத்தடுத்து 5 புயல்கள் வருகிறதா ? வாட்ஸ் அப் வதந்தியை நம்பாதீர்கள் !

பரவிய செய்தி
டிசம்பர் 8 ஆம் தேதி புயல் வரலாம் “Tauktao” என்று பெயர் . டிசம்பர் 17 ஆம் தேதி புயல் வரலாம் “Yaas” என்று பெயர்.. டிசம்பர் 24 ஆம் தேதி புயல் வரலாம் “Gulab”என்று பெயர்.. ஜனவரி 01 ஆம் தேதி ஒரு புயல் வரலாம் “Shaheen”என்று பெயர்.. ஜனவரி 8 ஆம் தேதி ஒரு புயல் வரலாம் “Jawad “என்று பெயர்.. வானிலை நிலையம் அறிவிப்பு.. தமிழ்நாடு ஒரு புயல் மாநிலமாக உருவாகிறதா… ஐந்து புயல்கள் வரிசையாக வருகிறது.
மதிப்பீடு
விளக்கம்
நிவர் மற்றும் புரெவி ஆகிய இரு புயல்கள் அடுத்தடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழையை பொழிந்ததோடு பாதிப்புகளையும் ஏற்படுத்தி சென்றன. இந்நிலையில், தமிழகத்தில் அடுத்தடுத்து 5 புயல்கள் தாக்க உள்ளதாக தேதியுடன் ஒவ்வொரு புயலுக்கு பெயரும் வைத்து ஓர் ஃபார்வர்டு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அடுத்தடுத்து 5 புயல்கள் தாக்க உள்ளதாக பரவும் ஃபார்வர்டு தகவல் முற்றிலும் வதந்தியே. அவ்வாறான எந்தவொரு தகவலையும் தமிழ்நாடு வானிலை ஆய்வு மையத்தின் தரப்பில் வெளியிடவில்லை. வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மட்டுமே இப்படியொரு வதந்தி பரவி வருகிறது.
தமிழ்நாடு வெதர்மேன் என அழைக்கப்படும் பிரதீப் ஜான் தன்னுடைய முகநூல் பக்கத்தில், ” இதுபோன்ற செய்திகளை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம். இது முற்றிலும் வதந்தியே ” எனப் பதிவிட்டு உள்ளார்.
தமிழகத்தில் அடுத்தடுத்து 2 புயல்கள் தாக்கியதால் அதை வைத்து தொடர்ச்சியாக 5 புயல்கள் தாக்க உள்ளதாக ஃவாட்ஸ் அப் வதந்தியை பரப்பி இருக்கிறார்கள்.