ரூ.4000 கோடி வாட்டர் பேக்கேஜ் : சென்னை என ‘பாகிஸ்தான்’ வீடியோவைப் பரப்பும் பாஜக ஐடி விங் நிர்மல் குமார்

பரவிய செய்தி

4000 கோடி ஷவர் வாட்டர் பேக்கேஜ் ? 

மதிப்பீடு

விளக்கம்

சென்னையில் மழைக் காலங்களில் பல இடங்களில் தண்ணீர் தேங்கிக் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் அதிக சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையினை சரி செய்யச் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை நடைபெற்று வருகிறது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகள் ரூ.4000 கோடி செலவில் முடிவடைந்துள்ளதாகச் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கூறியிருந்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியது. அம்மழையில் மேம்பாலம் ஒன்றில் தண்ணீர் தேங்கியதாகவும், பேருந்து ஒன்று பாலத்தின் மீது செல்லும் போது அங்குத் தேங்கி இருந்த மழைநீர் கீழே இருந்த வாகன ஓட்டிகளின் மீது விழுந்ததாகவும், இதுதான் 4000 கோடி ஷவர் வாட்டர் பேக்கேஜ் என வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. 

https://twitter.com/CTR_Nirmalkumar/status/1589266296423976962

Archive twitter link

https://twitter.com/tpskumar1985/status/1589461385947541504

Archive twitter link

அந்த வீடியோவை பாஜகவின் தகவல் தொழில் நுட்ப பிரிவு மாநில தலைவர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் முதற்கொண்டு பலரும் தங்களது  டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை என்ன ?

வைரல் செய்யப்படும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து தேடினோம். அது 2022ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி Video Nation என்னும் பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் எந்த இடம் எனக் குறிப்பிடவில்லை. ஆனால் சிலர் பாகிஸ்தான் லாகூர் என கமெண்டில் குறிப்பிட்டுள்ளனர். 

மேலும், அதில் பாலத்தின் மீது சிகப்பு நிற பேருந்து செல்கிறது. அப்பேருந்து வழக்கமான பேருந்துகளைவிட நீளமாக உள்ளது. இத்தகைய பேருந்து ‘மெட்ரோ பஸ்’ என அழைக்கப்படும். வீடியோவில் உள்ளது போன்ற சிகப்பு நிற மெட்ரோ பஸ்கள் சென்னையில் இயங்கவில்லை

அதனைக் கொண்டு பாகிஸ்தானில் இவ்வகையான பேருந்துகள் இயங்குகிறதா என இணையத்தில் தேடினோம். Homes Pakistan என்ற இணையதளத்தில் பாகிஸ்தானில் முக்கிய நகரங்களில் இத்தகைய பேருந்துகள் இயக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், அதே வீடியோ EBKsy என்ற யூடியூப் பக்கத்திலும் அக்டோபர் 9ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. அதில் 10வது வினாடியில் ‘ABU YOUSAF’ என்ற கடை இருப்பதினை காண முடிகிறது. 

அந்த கடை குறித்து கூகுளில் தேடியபோது அது Pakistan, Lchhra Lahore, Punjab-ல் இருப்பது தெரியவந்தது. இதிலிருந்து இது பாகிஸ்தானில் எடுக்கப்பட்ட வீடியோ என்பதை அறிய முடிகிறது. பாகிஸ்தானில் நடந்ததை சென்னையில் நடந்ததாக பாஜகவினர் தவறாக பரப்பி வருகின்றனர்.

முடிவு : 

நம் தேடலில், சாலையில் தேங்கி இருந்த மழை நீரினை வாகன ஓட்டிகளின் மீது பேருந்து ஒன்று வாரி இறைத்ததாக பாஜகவினர் பரப்பும் வீடியோ சென்னையில் நிகழ்ந்தது அல்ல, அது பாகிஸ்தான் லாகூரில் நிகழ்ந்தது என அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader