ஆளுநர் உரை குறித்து எந்த விளக்கமும் ஆளுநர் மாளிகை அளிக்கவில்லை!

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்று (ஜனவர் 9ம் தேதி) தொடங்குகிறது. இவ்வாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கியது. அவர் தனது உரையில் சமூகநீதி, சுயமரியாதை, சமத்துவம், பெண்ணுரிமை, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் முதலான பல்வேறு சொற்களை தவிர்த்துள்ளார்.
இதனை தொடர்ந்து, “தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட குறிப்பை ஆளுநர் முழுமையாக படிக்காதது வருத்தம் அளிக்கிறது. இதனால் சட்டப் பேரவை விதி 117ன் படி அச்சடிக்கப்பட்ட வாசகங்கள் மட்டுமே அவை குறிப்பில் இடம்பெறும். வேறு எந்த உரையும் அவை குறிப்பில் இடம் பெறாது” என்ற தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் முன்மொழிந்தார். இதனையடுத்து ஆளுநர் அவையில் இருந்து வெளியேற, முதலமைச்சர் ஸ்டாலினின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு ஆளுநர் மாளிகை தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டதாக பாலிமர், நியூஸ் 7 தமிழ், நியூஸ் 18 தமிழ்நாடு, சமயம், குமுதம் முதலியவற்றில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
உண்மை என்ன ?
ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்ததாக வெளியான செய்திகளில், உரையில் திருத்தம் செய்ய ஆளுநர் தரப்பு கூறிய போது, “ஏற்கனவே அச்சுக்கு சென்று விட்டதால் பேசும் போது திருத்திக் கொள்ளலாம் என்று அரசு தரப்பில் பதில் கூறப்பட்டதாகவும், ஆளுநர் உரையை நீக்குவதாக கூறிவிட்டு ஒளவையார் மற்றும் பாரதியாரின் வரிகளை மட்டும் நீக்கியுள்ளனர். ஆளுநர் உரைக்கு பின்னர் சபையை முடிக்காமல் முதல்வர் பேசியது மரபு மீறல், தமிழக மீனவர்கள் விடுவிடுக்கப்பட்டது மாநில அரசின் பங்களிப்பு மட்டுமே என்பதை எப்படி ஏற்பது?” என்பது போன்ற தகவல்களைக் காண முடிந்தது.
இது குறித்து தமிழ்நாடு ஆளுநரின் அதிகாரப் பூர்வமான டிவிட்டர் பக்கத்தில் தேடியதில் அப்படி எந்த ஒரு அறிக்கையும் வெளியாகவில்லை. மேற்கொண்டு, ஆளுநர் மாளிகைக்கு தொர்பு கொண்டு யூடர்ன் ஆசிரியர் ஐயன் கார்த்திகேயன் பேசினார்.
“இன்று சட்ட சபையில் நிகழ்ந்த நிகழ்வு குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. அப்படி ஏதேனும் விளக்கமோ, அறிக்கையோ வெளியிடப்பட்டதா?” என கேட்கப்பட்டது.
“எங்கள் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையும் அளிக்கவில்லை” என ஆளுநர் மாளிகையின் மக்கள் தொடர்பு அலுவலர் (PRO) பதில் அளித்தார்.
இதற்கு முன்னதாக ஆளுநர் உரை குறித்து ’சோர்ஸ்’ தெரிவித்ததாக சவுக்கு சங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் மதியம் 1.05 மணியளவில் ஒரு டிவீட் செய்திருந்தார். அதில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டுவதால், தமிழ்நாடு தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது என்கிற கருத்து ஆளுநருக்கு ஏற்புடையதாக இல்லை என்று தனக்கு தகவல் கிடைத்ததுள்ளதாக பதிவிட்டிருந்தார்.
Sources : The portion of speech which Governor Ravi objected “This Government accords highest priority to maintenance of law and order in the State and is taking all necessary measures to ensure that the State continues to be a haven of peace and tranquility, 1/2
— Savukku Shankar (@Veera284) January 9, 2023
மேலும், இலங்கை அரசிடமிருந்து தமிழ்நாடு மீனவர்களை மீட்டது குறித்த வாக்கியத்தில் ஒன்றிய அரசு என்பதையும் சேர்க்க விரும்பினார் என்றும் சவுக்கு சங்கர் தனது பதிவில் கூறியுள்ளார்.
ஆளுநர் உரையும் அரங்கேற்றப்பட்ட நாடகமும்
ஆதி மனிதன் தமிழன் தான் அவன் மொழிந்ததும் செந்தமிழ்தான்
தமிழகம் என்ற தலைப்பிலே புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கவிதை வரிகளை நினைவு கூர்ந்து தமிழக அரசை கேட்கிறேன்
ஆளுநர் அவர்கள் தமிழகம் என்று சொன்னதால் என்ன தாழ்வு ஏற்பட்டுவிட்டது
திரு @annamalai_k pic.twitter.com/X2rzSksGmq— BJP Tamilnadu (@BJP4TamilNadu) January 9, 2023
இதே பொருள்படும்படியாக தமிழ்நாடு பாஜக 3 பக்க அறிக்கையினை 2.40 மணியளவில் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அவ்வறிக்கையின் 3வது பக்கத்தில், கோவை கார் வெடிப்பு, பாஜக அலுவலர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்கிறது என்று ஆளுநர் எவ்வாறு கூற முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், தமிழ்நாடு மீனவர் மீட்பு குறித்த வாசகத்தில், மாநில மற்றும் ஒன்றிய அரசின் முயற்சியால் என்ற மாறுதலையும் கவர்னர் விரும்பியதாக பா.ஜ.கவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதன் பிறகே ஊடகங்களில் “ஆளுநர் தரப்பு விளக்கம். ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் விளக்கம்” என செய்திகளை வெளியிட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் இருந்து இது போன்ற எந்த அறிக்கையும் வெளியாகாத நிலையில், ஊடகங்கள் எப்படி இவ்வாறான செய்திகளை வெளியிட்டன என்கிற கேள்வி எழுகிறது.
முடிவு :
நம் தேடலில், சட்டமன்ற நிகழ்வு குறித்து ஆளுநர் மாளிகை தரப்பு விளக்கம் என செய்திகளில் வந்த செய்தி குறித்து ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை என அதன் மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்துள்ளார். அதிகாரப்பூர்வமாக வெளியாகாத தகவலையே வெளியிட்டு வருகின்றனர் என அறிய முடிகிறது.