தமிழ்நாட்டை பிரிக்கும் நிபந்தனையுடன் டெல்லி மசோதாவுக்கு ஆதரவு என அன்புமணி பேசியதாகப் பரவும் போலிச் செய்தி !

பரவிய செய்தி
தமிழகத்தை 3 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கவேண்டும் என்கிற நிபந்தனையுடன்தான் டெல்லி நிர்வாக மசோதாவை பாமக ஆதரித்தது – அன்புமணி ராமதாஸ்
மதிப்பீடு
விளக்கம்
அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசுக்கும், துணைநிலை ஆளுநருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வந்த நிலையில், டெல்லி யூனியன் பிரதேசத்தில் பணிபுரியும் குடிமைப்பணி அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்ற அதிகார மோதல் தொடங்கியது. இது குறித்து ஆம் ஆத்மி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
டெல்லிக்கு மாநில அந்தஸ்து இல்லாவிட்டாலும் சட்டம் இயற்றும் அதிகாரம் உள்ளது. எனவே ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமே அதிகாரம் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் டெல்லியின் அதிகாரம் தொடர்பான சட்டமியற்றும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கு உண்டு. தேவையெனில் ஒன்றிய அரசு சட்டம் இயற்றிக்கொள்ளலாம் என்றும் அத்தீர்ப்பில் கூறப்பட்டது.
இதனையடுத்து ‘தேசிய தலைநகர் பிரதேச டெல்லி அரசு சட்டம் 1991’ (The Government of National Capital Territory of Delhi Act, 1991) திருத்தும் வகையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பித்தார். அந்த அவசரச் சட்டத்தைச் சட்டமாக்கும் நடவடிக்கையையும் பாஜக அரசு மேற்கொண்டது.
மகன் செத்தாலும் பரவாயில்லை மருமகள் தாலி அறுபடனும்
தனது முதலமைச்சர் கனவுக்கு
தமிழகம் சிதறனும் pic.twitter.com/kgdMGQ3BDZ— மகராஜா (@Magaraja2021) August 9, 2023
இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் டெல்லி அரசு தொடர்பான சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாக மாநிலங்களவையில் வாக்கு செலுத்தினார்.
டெல்லி சட்டத்திற்கு ஆதரவாக வாக்கு செலுத்தத் தான் ஒரு நிபந்தனையை விதித்ததாக அன்புமணி கூறியுள்ளார் என மாலை மலர் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில், ‘தமிழகத்தை 3 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கவேண்டும் என்கிற நிபந்தனையுடன்தான் டெல்லி நிர்வாக மசோதாவை பாமக ஆதரித்தது’ என்றுள்ளது.
உண்மை என்ன ?
அன்புமணி குறித்துப் பரவக் கூடிய மாலை மலர் நியூஸ் கார்டில் ‘08.08.2023’ என்ற தேதி உள்ளது. அந்த தேதியில் அவர்களது அதிகாரப்பூர்வமான சமூக வலைத்தள பக்கங்களில் தேடியதில் அப்படி எந்த நியூஸ் கார்டும் அவர்கள் பதிவிடவில்லை.
மேற்கொண்டு டெல்லி சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆதரவு அளித்ததற்குக் காரணமாக, பரவக் கூடிய நியூஸ் கார்டில் இருப்பது போன்று அன்புமணி ஏதேனும் கருத்து தெரிவித்துள்ளாரா என்பது பற்றி இணையத்தில் தேடினோம். அப்படி எந்த செய்தியும் கிடைக்கவில்லை.
நெய்வேலியில் 3-வது நிலக்கரி சுரங்கத்துக்கு தமிழக அரசு அனுமதித்துள்ளது: அன்புமணி குற்றச்சாட்டு
மேலும் படிக்க : https://t.co/oJZTT3UUpG#AnbumaniRamadoss #neyveli #TNGovt #MMNews #Maalaimalar pic.twitter.com/RXPyPpPvWD
— Maalai Malar தமிழ் (@maalaimalar) August 1, 2023
மாலை மலர் கடந்த ஒன்றாம் தேதி அன்புமணி நெய்வேலி நிலக்கரி சுரங்கம் தொடர்பாகப் பேசியது குறித்து ஒரு நியூஸ் கார்டினை வெளியிட்டுள்ளது. அதில், ‘நெய்வேலியில் 3-வது நிலக்கரி சுரங்கத்துக்கு தமிழக அரசு அனுமதித்துள்ளது: அன்புமணி குற்றச்சாட்டு’ என்றுள்ளது. அந்த கார்டில் உள்ள தகவல்களை மட்டும் எடிட் செய்து, அவர் சொல்லாத கருத்தினை தவறாக பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
மேலும் இது பற்றி மேற்கொண்டு தேடியதில், அன்புமணியின் தந்தையும் பாமகவின் நிறுவனருமான ராமதாஸ் தமிழ்நாட்டினை மூன்று மாநிலங்களாகப் பிரிப்பது தொடர்பாக 2021ம் ஆண்டு அறிக்கை வெளியிட்டுள்ளதைக் காண முடிந்தது. அதில், ‘தமிழ்நாட்டைச் சென்னை, மதுரை, கோவை என மூன்று மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும். மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களையும் பிரித்து புதிய மாநிலங்களை உருவாக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முடிவு :
நம் தேடலில், தமிழகத்தை 3 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கவேண்டும் என்கிற நிபந்தனையுடன்தான் டெல்லி நிர்வாக மசோதாவை பாமக ஆதரித்தது என அன்புமணி ராமதாஸ் கூறியதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. பாமக நிறுவனர் ராமதாஸ் 2021ம் ஆண்டு சொன்னதையும், தற்போது டெல்லி மசோதாவிற்கு அன்புமணி ஆதரவு தெரிவித்ததையும் சேர்த்து தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.