தமிழக அரசின் குடியரசு தின அலங்கார ஊர்தி மாதிரியில் கருணாநிதியின் உருவம் இடம்பெற்றதா ?

பரவிய செய்தி

மதிப்பீடு
விளக்கம்
இந்திய குடியரசு தின விழாவில் இடம்பெறும் மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் தமிழ்நாடு முன்மொழிந்த சுதந்திர போராட்ட தியாகிகளின் உருவமாதிரிகளை இந்திய பாதுகாப்புத்துறையின் உயர்நிலைக்குழுவால் ஏற்கப்படவில்லை.
அந்த அலங்கார ஊர்தியின் மாதிரியில் தமிழ்நாடு சுதந்திர போராட்ட வீரர்களில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகைப்படம் இடம்பெற்றதாகவும், அதனால் நிராகரிக்கப்பட்டதாகவும் இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்களால் பரப்பப்பட்டு வருகிறது.
பின்னாடி மஞ்சள் துண்டு போட்டுகிட்டு ஒருத்தர் நிக்கிறாரே ?!
அவரு எந்த சுதந்திர போராட்டத்துல கலந்துகிட்டாரு ?!
?????!!!! #வரலாறுதிருட்டு_திமுக pic.twitter.com/bPdOARpk9x— A.Ashvathaman (@asuvathaman) January 21, 2022
சுதந்திர தின அணி வகுப்பில் தமிழ்நாட்டு ஊர்தி மறுக்கப்பட்டது என்று பொங்கியவர்கள் இங்கே வரவும்.
பாதுகாப்புத்துறை அமைச்சகம் சொன்னபடி ஊர்தியை வடிவமைக்காமல் இது போன்று வடிவமைத்தால் எப்படி அனுமதி தருவார்கள் ???
சுதந்திர போராட்ட தியாகிகளை வைத்து ஊர்தியை வடிவமைக்க சொன்னால், இடையில் pic.twitter.com/I8PasCYZIE
— பாரதி கண்ணம்மா (@vanamadevi) January 20, 2022
பின்னாடி மஞ்சள் துண்டு போட்டுகிட்டு ஒருத்தர் நிக்கிறாரே ?!
அவரு எந்த சுதந்திர போராட்டத்துல கலந்துகிட்டாரு ?!
?????!!!! 🤣🤣🤣#திருட்டு_திமுக #திருட்டு_திராவிடம் pic.twitter.com/iIXjIQPXut— Nadodi Mannan 🇮🇳 🚩🚩🚩 (@NadodiMannan786) January 21, 2022
உண்மை என்ன ?
2022-ம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பிற்கு தமிழகத்தின் புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களான வ.உ.சிதம்பரனார், ராணி வேலு நாச்சியார், மகாகவி பாரதியார் மற்றும் மருது சகோதரர்களை சித்தரிக்கும் அலங்கார ஊர்தியின் முன்மொழிவு மாதிரி வடிவம் பல கட்டத் தேர்வுகளுக்கு பிறகு பாதுகாப்புத்துறையின் உயர்நிலைக்குழுவால் ஏற்கப்படவில்லை. இதனால் ஆளும் பாஜக அரசின் மீது தமிழகத்தில் இருந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.
ஆனால், ” தமிழக அரசின் முன்மொழிவு நீக்கப்பட்ட விவகாரத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை. இந்த முன்மொழிவு பாதுகாப்புத்துறையின் தேர்வுகுழுவால் தன்னிச்சையாக அதன் அதிகாரத்துக்கு உட்பட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை. அதன் யோசனைகளை ஏற்காமல் மாநிலங்கள்தான் இந்த விவகாரத்தை அரசியலாக்கி வருகின்றன ” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்து இருந்தார்.
அலங்கார ஊர்தியின் மாதிரியில் முன்பக்கத்தில் இருந்த வ.உ.சிதம்பரனாருக்கு பதிலாக பாரதியாரை முன்னிலைப்படுத்தி வைக்கவும், அடுத்ததாக வேலு நாச்சியார், மூன்றாவதாக வ.உ.சிதம்பரனார் வருவது போல் மாதிரியை திருத்தித்தருமாறு பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் தரப்பில் கேட்கப்பட்டதாகவே, அதன்படி திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை என்பதால் 5 சுற்றுக்கு பிறகு தமிழக அரசின் முன்மொழிவு மாதிரி ஏற்கப்படவில்லை என பிபிசி செய்தியில் வெளியாகி இருக்கிறது.
டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழகத்தின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்கு கருணாநிதியின் உருவம் இடம்பெற்றதாக எந்த தகவலும் வெளியாகவில்லை. வைரலாகும் புகைப்படத்தில் நிரஞ்சன் என வாட்டர் மார்க் இருப்பதை பார்க்க முடிந்தது. அதை வைத்து தேடிப்பார்க்கையில், டெல்லியை மையமாக கொண்டு செய்திகளை வழங்கும் புதியதலைமுறையின் பத்திரிக்கையாளர் நிரஞ்சன் என்பவரே இப்புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.
Exclusive:
குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள நிராகரிக்கப்பட்ட கப்பலோட்டிய தமிழன்,மகாகவி பாரதி,குதிரையில் இருக்கும் வீரமங்கை வேலுநாச்சியார், வீரவாளுடன் நிற்கும் மருதுசகோதரர்கள் ஆகியோரின் உருவங்கள் அடங்கிய தமிழக அரசின் அலங்கார ஊர்தியின் மாதிரி#தமிழ்நாடு pic.twitter.com/SlxaubyoSi
— Niranjan kumar (@niranjan2428) January 20, 2022
ஜனவரி 20-ம் தேதி நிரஞ்சன் குமார் தன் ட்விட்டர் பக்கத்தில், ” குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள நிராகரிக்கப்பட்ட கப்பலோட்டிய தமிழன்,மகாகவி பாரதி,குதிரையில் இருக்கும் வீரமங்கை வேலுநாச்சியார், வீரவாளுடன் நிற்கும் மருதுசகோதரர்கள் ஆகியோரின் உருவங்கள் அடங்கிய தமிழக அரசின் அலங்கார ஊர்தியின் மாதிரி ” என புகைப்படத்துடன் பதிவிட்டு இருந்தார்.
பத்திரிகை தரப்பில் வெளியான தமிழக அரசின் அலங்கார ஊர்தியின் மாதிரி புகைப்படத்தில் மஞ்சள் நிற சட்டையில் கலைஞரின் உருவம் இடம்பெறவில்லை. கருணாநிதி மற்றும் அருகே இருபவரையும் ஃபோட்டோஷாப் மூலம் எடிட் செய்து மாற்றி இருக்கிறார்கள் எனத் தெளிவாய் தெரிகிறது.
முடிவு :
நம் தேடலில், இந்திய குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசு சார்பில் முன்மொழியப்பட்ட அலங்கார ஊர்தியின் மாதிரியில் சுதந்திரப் போராட்ட தியாகியாக கருணாநிதியின் உருவத்தை வைத்துள்ளதாக பரப்பப்படும் புகைப்படம் போலியாக எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.