தமிழ்நாட்டின் தாரா நெடுஞ்சாலையில் உள்ள சிவலிங்கம் மீது 365 நாளும் நீர் விழும் அதிசயம் எனப் பரவும் பொய் !

பரவிய செய்தி
இந்த சிவலிங்கம் தமிழ்நாட்டில் தாரா நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ளது. வருடத்தில் 365 நாட்களும் சிவலிங்கத்தின் மீது வானத்திலிருந்து தொடர்ந்து நீர் விழுவதை இங்கே காணலாம். வானத்திலிருந்து தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பது யாருக்கும் தெரியாது ஆச்சரியமான உண்மை.
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாட்டில் தாரா நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ள சிவலிங்கம் மீது வருடத்தில் 365 நாட்களும் வானத்தில் இருந்து தொடர்ந்து நீர் விழுவதாக வனப் பகுதியில் நீரோடை அருகே அமைந்துள்ள சிவலிங்கத்தின் வீடியோ ஒன்று வைரல் செய்யப்பட்டு வருகிறது. அவ்வீடியோவில், சிவலிங்கத்தின் மீதிருந்து கீழே நீர் வடிந்துகொண்டே இருப்பதை பார்க்க முடிகிறது.
இந்த சிவலிங்கம் தமிழ்நாட்டில் தாரா நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ளது.
வருடத்தில் 365 நாட்களும் சிவலிங்கத்தின் மீது வானத்திலிருந்து தொடர்ந்து நீர் விழுவதை இங்கே காணலாம். வானத்திலிருந்து தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பது யாருக்கும் தெரியாது. ஆச்சரியமான உண்மை என்னவென்றால்…. pic.twitter.com/y5jSMesICO— ஓம் நமச்சிவாய (@marannellai) March 12, 2023
இந்த சிவலிங்கம் தமிழ்நாட்டில் தாரா நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ளது.
வருடத்தில் 365 நாட்களும் சிவலிங்கத்தின் மீது வானத்திலிருந்து தொடர்ந்து நீர் விழுவதை இங்கே காணலாம். வானத்திலிருந்து தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பது யாருக்கும் தெரியாது..சிவ..சிவ..🙏🙏🙏 pic.twitter.com/8SoSdqJwEk— Maha Simha (@maha_simha) November 29, 2022
உண்மை என்ன ?
தாரா நெடுஞ்சாலை சிவலிங்கம் குறித்து தேடுகையில், கடந்த 2021ம் ஆண்டில் இருந்தே இத்தகவல் இந்தியா முழுவதும் பரவி வந்துள்ளதை அறிய முடிந்தது. ஆகையால், வீடியோவில் இருந்து கீப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2020 ஜூலை 26ம் தேதி மலேசியா முகநூல் பக்கம் ஒன்றில் செலங்கோரில் உள்ள பாது குகையின் ஓம் சிவ்ய நம தியான ஆலயம் எனக் கூறி அதே சிவலிங்கத்தின் புகைப்படங்கள் பதிவிடப்பட்டு உள்ளது. மேலும், அந்த ஆலயத்தின் கூகுள் மேப் லிங்கும் இடம்பெற்று இருக்கிறது.
மலேசியாவில் உள்ள சிவலிங்கத்தின் கோவில் குறித்து “Gomback shivan temple” எனும் தலைப்பில் பல்வேறு யூடியூப் சேனல்களில் வீடியோக்கள் வெளியாகி இருக்கின்றன. அதில், சிவலிங்கத்தில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டிருக்கும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன.
எனினும், கோவில் குறித்து பிரத்யேக இணையதள பக்கங்கள் ஏதும் கிடைக்கவில்லை. மாறாக, malaysiahanuman எனும் இணையதளத்தில் Shivan Meditation Sanctuary, Bentong Old Road, Gombak, Selangor எனும் தலைப்பில் வெளியான கட்டுரை கிடைத்தது. ஆனால், அதில், சிவலிங்கத்தில் இருந்து தண்ணீர் வடிவது குறித்து எந்த தகவலும் இல்லை.
இந்த சிவலிங்கம் குறித்து மேற்கொண்டு தேடுகையில், 2019ம் ஆண்டு வெளியான யூடியூப் வீடியோவில் சிவலிங்கத்தை சுற்றி கட்டுமானப் பணிகள் நடைபெறும் காட்சிகள் இடம்பெற்று உள்ளது. அந்த வீடியோவில் சிவலிங்கத்தின் மீது வானில் இருந்து தண்ணீர் விழவில்லை என்பதை தெளிவாய் காணலாம்.
மேலும் படிக்க : 28,450 ஆண்டுகள் பழமையான சிவனின் கல்ப விக்ரஹா சிலை கிடைத்ததாக அர்ஜுன் சம்பத் பரப்பும் வதந்தி !
மேலும் படிக்க : இந்தோனேசியாவில் 7500 ஆண்டுகள் பழமையான சிவாலயமா ?
முடிவு :
நம் தேடலில், தமிழ்நாட்டில் தாரா நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள சிவலிங்கம் மீது 365 நாட்களும் வானத்தில் இருந்து நீர் விழுவதாகப் பரவும் தகவல் தவறானவை. வைரல் செய்யப்படும் வீடியோ மலேசியாவைச் சேர்ந்து, தமிழ்நாடு அல்ல. கடந்த 2019ம் ஆண்டு எடுக்கப்பட்ட கட்டுமானப் பணிகள் வீடியோவில் சிவலிங்கத்தின் மீது நீர் விழவில்லை என்பதையும் அறிய முடிந்தது.