தமிழ்நாடு செலுத்தும் வரியை காட்டிலும் அதிக நிதியை ஒன்றிய அரசு தந்துள்ளதாகப் பரப்பப்படும் பொய் !

பரவிய செய்தி

2014-2023 காலகட்டத்தில் தமிழகத்திடம் இருந்து மத்திய அரசு ரூ.6.23 லட்சம் கோடி வரியாக பெற்றது; பெற்ற வரியை விட கூடுதலாக தமிழகத்திற்கு ரூ.6.69 லட்சம் கோடி நிதி வழங்கியுள்ளோம் – நிர்மலா சீதாராமன்

X link

மதிப்பீடு

விளக்கம்

ஒன்றிய அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக ‘விக்சித் பாரத் சங்கல்ப யாத்ரா’ என்னும் பிரச்சாரத்தை ஒன்றிய அரசு முன்னெடுத்துள்ளது. இது தொடர்பாக கோடம்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். 

அந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், 2014-2023 காலக்கட்டத்தில் தமிழகத்திடம் இருந்து மத்திய அரசு ரூ.6.23 லட்சம் கோடி வரியாக பெற்றது; பெற்ற வரியை விட கூடுதலாக தமிழகத்திற்கு ரூ.6.69 லட்சம் கோடி நிதி வழங்கியுள்ளோம்’ எனக் கூறியதாக தினமலர் ஒரு நியூஸ் கார்டினை பதிவிட்டுள்ளது. 

X link 

இதே தகவலை பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலையும் தனது X (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அந்நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பேசியது: “நிதி ஆணையத்தின் பரிந்துரையின் பெயரில் 2014 மோடி ஐயா ஆட்சி வந்ததில் இருந்து 2023-24 வரை தமிழ்நாட்டிற்கான Total Tax Devolution 2,88,627 கோடி ரூபாய். அதை தவிர்த்து மானியமாக (Grant) கொடுக்கப்பட்டது 2,58,338 கோடி ரூபாய். இதை தவிர கொரோனவிற்கு பிறகு ஒவ்வொரு மாநிலமும் நன்றாக வெளியே வர வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டிற்கு கொடுத்த பணம் 6,412 கோடி ரூபாய். இவற்றை எல்லாம் மொத்தம் சேர்த்தால் 6,96,666 கோடி ரூபாய் தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

GST விஷயத்தை பிறகு பேசுகிறேன். நேரடி வரி அதாவது வருமான வரி, கார்ப்பரேட் வரி இவற்றை எல்லாம் சேர்த்தால் 2014 முதல் 2022 – 23 மார்ச் 31ம் தேதி வரை தமிழ்நாட்டில் இருந்து வந்த தொகை 6,23,713.3 கோடி ரூபாய். 2023-24க்கான தொகை இந்த மார்ச் மாதம் வந்தால்தான் கிடைக்கும். 

உங்களிடம் பெறப்படும் GST முழுமையாக உங்களுக்குத் தான் வருகிறது. SGST 100க்கு 100 சதவீதம் உங்களுக்குத்தான் வருகிறது. உதாரணமாக, 2022-23 மார்ச் மாதம் 31 வரைக்குமான 12 மாதங்களுக்கான கணக்கு SGST 36,353.12 கோடி ரூபாய். IGST 32,611.92 கோடி ரூபாய். இதில் 50:50 பங்கு. CGST 27,360.95 கோடி ரூபாய். இதில் 41 அல்லது 42 கோடி ரூபாய் மாநிலத்திற்கு வழங்கப்படுகிறது”.

உண்மை என்ன ? 

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டிற்கு 2014 முதல் 2023-24 வரை வழங்கப்பட்டதாகப் பட்டியலிட்ட தொகையினை கூட்டினால் 5,53,377 கோடி ரூபாய்தான் வருகிறது (2,88,627 + 2,58,338 + 6,412). எந்த கணக்கின் அடிப்படையில் 6,96,666 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாகக் கூறினார் எனத் தெரியவில்லை. 

அடுத்தபடியாக ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்குக் கொடுத்த நிதி குறித்துக் கூறுகையில் 2014 முதல் 2023-24 வரை என பத்து ஆண்டுகளை  குறிப்பிடுகிறார். அதுவே தமிழ்நாட்டில் இருந்து பெறப்பட்ட வரி தொடர்பாகக் கூறுகையில், 2014 முதல் 2022-23 மார்ச் மாதம் வரை என ஒன்பது ஆண்டுகளை மட்டுமே கணக்கிடுகிறார். அதுவும் நேரடி வரியை மட்டுமே குறிப்பிடுகிறார், பிற வரிகளை கூறவில்லை. 

GST பற்றி பிறகு பேசுவோம் எனச் சொல்லிவிட்டு 2022-23ம் ஆண்டு வசூலிக்கப்பட்ட GST வரி தொகையை மட்டும் சொல்கிறார். 2017ம் ஆண்டு முதல் எவ்வளவு GST வசூலிக்கப்பட்டது என்கிற முழு விவரத்தைச் சொல்லவில்லை. 

ஒன்றிய அரசின் பட்ஜெட் தரவுகளைக் கொண்டு ஆண்டு வாரியாக Tax Devolution கணக்கிடுகையில் 2014-15 நிதியாண்டு முதல் 2022-23 நிதியாண்டு வரையில் (9 ஆண்டுகள்) ரூ.2,46,995 கோடி Tax Devolution-ஆகத் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் பார்த்தாலும் 9 ஆண்டுகளில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கிய நிதி ரூ.5,11,745 கோடி (2,46,995 + 2,58,338 + 6,412). இது தமிழ்நாடு செலுத்தியதாக நிதியமைச்சர் சொல்லும் நேரடி வரி தொகையைக் காட்டிலும் குறைவு. 

இப்படி தங்களுக்குச் சாதகமான விஷயங்களை மட்டும் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார் என்பதை அறிய முடிகிறது. ஆனால், சில ஊடகங்களோ தமிழ்நாடு செலுத்தக்கூடிய ஒட்டுமொத்த வரியைக் காட்டிலும் ஒன்றிய அரசு அதிக நிதி வழங்கியதாகச் தவறான செய்திகளை வெளியிட்டுள்ளன. அவர் கூறியது நேரடி வரியை மட்டும் தான். தமிழ்நாட்டில் இருந்து ஒன்றிய அரசிற்கு செலுத்தப்படும் GST மற்றும் பிற வரிகள் பற்றிய முழு விவரம் கூறவில்லை. அதுவும் அவர் சொல்லும் கணக்கில் பிழைகள் உள்ளன. 

மேலும் படிக்க : தமிழ்நாட்டின் வெள்ளங்கள்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சும், உண்மையும் !

நிதியமைச்சர் இப்படி தவறான தகவல்களை பேசுவது முதல்முறை அல்ல. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பெய்த அதிகப்படியான மழை குறித்து 5 நாட்களுக்கு முன்னரே இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு விட்டதாக ஒரு பொய்யினை செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அது குறித்த உண்மையினை ஆதாரத்துடன் யூடர்ன் கட்டுரையாக வெளியிட்டது.

முடிவு :

நம் தேடலில், தமிழ்நாடு செலுத்தக்கூடிய வரியைக் காட்டிலும் அதிக தொகை நிதியாக வழங்கப்படுவதாகப் பரப்பப்படும் தகவல் தவறானவை. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய தொகையில் பிழை உள்ளது மற்றும் அவர் நேரடி வரியை பற்றி மட்டும் கூறிவிட்டு தமிழ்நாடு அளித்த GST மற்றும் பிற வரி பற்றிய எந்த விவரத்தையும் கூறாமல் தவிர்த்து இருக்கிறார் என்பதை அறிய முடிகிறது. 

Please complete the required fields.




ஆதாரம்

STATEMENT SHOWING STATE-WISE DISTRIBUTION OF NET PROCEEDS OF UNION TAXES AND DUTIES FOR BE 2014-2015

STATEMENT SHOWING STATE-WISE DISTRIBUTION OF NET PROCEEDS OF UNION TAXES AND DUTIES FOR BE 2015-2016

STATEMENT SHOWING STATE-WISE DISTRIBUTION OF NET PROCEEDS OF UNION TAXES AND DUTIES FOR BE 2017-18

STATEMENT SHOWING STATE-WISE DISTRIBUTION OF NET PROCEEDS OF UNION TAXES AND DUTIES FOR BE 2018-19

STATEMENT SHOWING STATE-WISE DISTRIBUTION OF NET PROCEEDS OF UNION TAXES AND DUTIES FOR BE 2019-20

STATEMENT SHOWING STATE-WISE DISTRIBUTION OF NET PROCEEDS OF UNION TAXES AND DUTIES FOR RE 2020-21

STATEMENT SHOWING STATE-WISE DISTRIBUTION OF NET PROCEEDS OF UNION TAXES AND DUTIES FOR RE 2021-22

STATEMENT SHOWING STATE-WISE DISTRIBUTION OF NET PROCEEDS OF UNION TAXES AND DUTIES FOR RE 2022-23

STATEMENT SHOWING STATE-WISE DISTRIBUTION OF NET PROCEEDS OF UNION TAXES AND DUTIES FOR BE 2023-24

Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader