சுங்கச்சாவடிகள் அதிகம் கொண்ட மாநிலம் எது ?|தமிழகத்தின் டோல் வருமானம் என்ன ?

பரவிய செய்தி

கேரளாவில் 1782 கி.மீ தூரம் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வெறும் மூன்றே மூன்று சுங்கச்சாவடிகள் மட்டுமே உள்ளன. 15,437 கி.மீ தூரம் தேசிய நெடுஞ்சாலை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் 44 சுங்கச்சாவடிகள் உள்ளன. ஆனால், 5,381 கி.மீ தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை உள்ள தமிழகத்தில் 52 சுங்கச்சாவடிகள் உள்ளன.

கேரளவுடன் ஒப்பிட்டால் தமிழகத்தில் 9 சுங்கச்சாவடிகள் மட்டுமே இருக்க வேண்டும், மகாராஷ்டிராவுடன் ஒப்பிட்டால் 15 சுங்கச்சாவடிகள் தான் இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் 52 சுங்கச்சாவடிகள் அமைத்து சுங்கக்கட்டணம் வசூலிப்பது வழிப்பறியே.

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவில் கட்டணங்கள் வசூலிக்கும் சுங்கச்சாவடிகள் அனைத்தும் முழுமையாக அகற்றப்பட வேண்டும் என்பது பல்வேறு தரப்பு மக்களின் கருத்து. ஆனால், உறுதியான, வசதியான சாலைகள் வேண்டுமென்றால் சுங்கக்கட்டணம் கட்ட வேண்டும் என ஆட்சியாளர்களும் கூறுவதுண்டு.

இந்நிலையில், செய்தித்தாள் போன்ற பேப்பரில் கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் தூரம் மற்றும் அதில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை குறித்த ஒப்பீடு கேள்வி பதிலாக வெளியாகி இருக்கும். இதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து கூறுமாறு யூடர்ன் ஃபாலோயர் ஒருவர் கேட்டுக் கொண்டார்.

Advertisement

இதனையடுத்து, சுங்கச்சாவடிகள் குறித்த தகவல் எங்கு வெளியாகியது என்பது குறித்து தேடிய பொழுது கலைஞர் செய்திகள் இணையதளத்தில் செப்டம்பர் 11-ம் தேதி வெளியாகி இருக்கிறது. அதிலுள்ள தகவலே செய்திகளிலும் வெளியாகி இருக்கிறது.

மாநிலங்களில் நெடுஞ்சாலை தூரம் :

மூன்று மாநிலங்களின் நெடுஞ்சாலை தொலைவு குறித்த ஒப்பீட்டில் உள்ள கிலோ மீட்டர் சரியான தகவல். அவை 2017-18 தரவுகள் அடிப்படையில் ” Press Information Bureau Government Of India ” தளத்தில் வெளியாகி இருக்கிறது. அதன்படி, கேரளாவில் 1,781 கி.மீ, மகாராஷ்டிராவில் 15,436 கி.மீ , தமிழ்நாட்டில் 5,381 கி.மீ நெடுஞ்சாலை தூரம் உள்ளன.

Advertisement

மாநிலங்களில் உள்ள சுங்கச்சாவடிகள் எண்ணிக்கை மற்றும் நெடுஞ்சாலை தூரம் குறித்த தரவுகள் 2017-2018-ம் ஆண்டு வரையிலான தகவல்களே. 2019 பிப்ரவரி மாதம் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலை தொலைவு அதிகரிக்கப்பட்டு உள்ளதாக வெளியாகி இருக்கிறது.

2018 நவம்பர் 11-ம் தேதி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, ஜூன் 2017-ல் இருந்து தமிழகத்தில் 5,381 கி.மீ ஆக இருந்த நெடுஞ்சாலை தூரத்தை 6,741.5 கி.மீ ஆக உயர்த்தி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலை தொலைவானது உயர்த்தப்பட்டு உள்ளது. கேரளாவில் சுங்கச்சாவடிகளுக்கு எதிரான மனநிலையையே அம்மாநில அரசும் கொண்டிருக்கிறது. நாட்டில் அதிகளவிலான நெடுஞ்சாலை தொலைவை கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா விளங்குகிறது. ஆனால், அம்மாநிலத்தில் சுங்கச்சாவடிகள் எண்ணிக்கை தமிழகத்தை விட குறைவு.

எனினும், மகாராஷ்டிரா மாநிலத்தை விட குறைவான நெடுஞ்சாலை தூரம் கொண்ட ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கூட அதிக எண்ணிக்கையில் சுங்கச்சாவடிகள் உள்ளன. நாட்டில் உள்ள மொத்த 549 சுங்கச்சாவடிகளில் 90 சுங்கச்சாவடிகள் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளன. அதன் பின் உத்தரப்பிரதேசத்தில் 55, தமிழ்நாட்டில் 52 சுங்கச்சாவடிகள் உள்ளன.

சுங்கச்சாவடிகள் வருமானம் :

2017-18-ல் இந்தியாவில் அதிக சுங்கக் கட்டணம் வசூலித்த மாநிலமாக ராஜஸ்தான் இருந்து வந்தது. 2018-19-ம் ஆண்டில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் 55 சுங்கச்சாவடிகளில் ரூ.1,525 கோடியும், குஜராத்தில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் 1,059 கோடியும், தமிழ்நாட்டில் உள்ள 52 சுங்கச்சாவடிகளில் 1,036 கோடியும் வசூல் செய்யப்பட்டு உள்ளதாக 2019 ஜூலை 28-ம் தேதி வெளியான நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

2016-17-ம் ஆண்டில் ரூ.6,938 கோடியும், 2017-18-ல் 8,630 கோடியும், 2018-19-ல் 9,187 கோடியும் என மூன்றே ஆண்டுகளில் தோராயமாக 25,000 கோடி சுங்கவரிகள் மூலம் வசூலிக்கப்பட்டு உள்ளது. சமீபகாலமாக தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் வருமானம் அதிகரித்து வருவதை காண முடிந்தது.

முடிவு :

நமக்கு கிடைத்த தகவலில், மூன்று மாநிலத்தின் நெடுஞ்சாலை தூரத்தை ஒப்பிடும் கி.மீ தரவு முந்தைய ஆண்டுகளில் வழங்கப்பட்ட தரவுகள். தமிழகத்தின் நெடுஞ்சாலை தொலைவை 6,741.5 ஆக உயர்த்தி உள்ளதாக நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் நெடுஞ்சாலை தொலைவை தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிடமும் ஒப்பிடலாம். 7,906 கி.மீ நெடுஞ்சாலை தொலைவை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் நாட்டிலேயே அதிகமாக 90 சுங்கச்சாவடிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

சமீப ஆண்டுகளில் தமிழகத்தில் சுங்கக்கட்டண தொகை அதிகரித்து வருவது உண்மையே. அதற்கு அவ்வப்போது சுங்கவரி கட்டணம் உயர்த்தப்படுவதே காரணம்.

கலைஞர் செய்தியில் கூறியது போன்று நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக சுங்கச்சாவடிகள் என்பது தவறு. தமிழகத்தை விட ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சுங்கச்சாவடிகள் அதிகம் உள்ளன.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம் / Proof Links

Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close