தமிழ்நாட்டு இரயிலில் பீகார் தொழிலாளர்களிடம் டிடிஇ மோசமாக நடந்து கொள்வதாகப் பரப்பப்படும் போலி வீடியோ !

பரவிய செய்தி

தமிழ்நாட்டை விட்டு ஓடும் பீகாரிகளுக்கு இப்படித்தான் டிடி டிக்கெட் கொடுக்கிறார்கள். டிடியின் இந்த நடத்தை சரியா, அவர் சீருடை கூட அணியவில்லை.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என சமூக வலைத்தளங்களில் பல்வேறு போலி வீடியோக்கள் பரப்பப்பட்டது. அத்தகைய சம்பவங்கள் ஏதும் தமிழ்நாட்டில் நடைபெறவில்லை எனத் தமிழ்நாடு காவல் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், போலி செய்தி பரப்புபவர்கள் மீது சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு பரவிய போலிச் செய்திகளின் உண்மைத் தன்மை குறித்து ‘யூடர்ன்’ கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது.

Archive link 

இந்நிலையில் தமிழ்நாட்டில் இரயிலில் பீகார் தொழிலாளர்கள் இப்படித்தான் நடத்தப்படுகிறார்கள் என வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அவ்வீடியோவில் டிடிஇ ஒருவர் பயணியிடம் மிக மோசமாக நடந்து கொள்கிறார்.

https://twitter.com/sabirsh48723440/status/1633464038377263107?s=46&t=kIszbQH_arRSG8kPbuGeZw

Archive link 

உண்மை என்ன ? 

பரவக் கூடிய வீடியோவின் கீ ஃப்ரேம்களை கொண்டு இணையத்தில் தேடினோம். ‘Run on Track’ என்ற யூடியூப் பக்கத்தில் பரவக் கூடிய வீடியோவின்  முழு காணொளி கிடைக்கப்பட்டது. அப்பக்கத்தில், 2023, மார்ச் மாதம், 3ம் தேதி அவ்வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. அதில் 15வது நிமிடத்திற்கு மேல் பரவக் கூடிய வீடியோ பகுதி உள்ளது.

இந்தியில் உள்ள அத்தலைப்பினை மொழி பெயர்த்துப் படிக்கையில் ‘சம்பூர்ணா கிராந்தி விரைவு இரயிலின் நிலை இதுதான்’ என இருப்பதைக் காண முடிந்தது. சம்பூர்ணா கிராந்தி விரைவு இரயில் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ராஜேந்திர நகரிலிருந்து புது டெல்லி வரை இயக்கப்படுகிறது.

இதிலிருந்து பரவக் கூடிய வீடியோவில் உள்ள சம்பவம் தமிழ்நாட்டில் நிகழ்ந்ததல்ல என்பதை அறிய முடிகிறது.

இவ்வாறு பரவக் கூடிய வீடியோ ஒன்றின் ‘இரயில் சேவா’ என்ற டிவிட்டர் பக்கத்திலிருந்து கடந்த மார்ச் 9ம் தேதி டானாபூர் இரயில் நிலைய கோட்ட இரயில்வே மேலாளரை (DRM) டாக் செய்து ‘இது தொடர்பான சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என கமெண்ட் செய்யப்பட்டுள்ளது.

 

Archive link 

மேலும் அந்த டிடிஇ பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக டானாபூர் இரயில் நிலைய டிவிட்டர் பக்கத்திலிருந்து பதிலளிக்கப்பட்டுள்ளது. டானாபூர் இரயில் நிலையம் பீகார் மாநிலம் பாட்னாவில் அமைந்துள்ளது. பாட்னா முதல் டெல்லி செல்லும் இரயில் நடந்த சம்பவத்தை தமிழ்நாட்டில் நடந்ததாக தவறாக தகவலை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

மேலும் படிக்க : தமிழ்நாட்டில் இந்தி பேசுபவர்களை தாக்கி கொல்வதாக வடநாட்டில் பரப்பப்படும் வதந்தி !

இதேபோல் பீகார் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாகப் பரவிய பல்வேறு போலி செய்திகளின் உண்மைத் தன்மைகளை யூடர்னில் செய்திகளாக வெளியிட்டுள்ளோம்.

மேலும் படிக்க : தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளிகள் கொல்லப்படுவதாகப் பரவும் வேறு சில வதந்தி வீடியோக்கள் !

முடிவு :

நம் தேடலில், தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்களிடம் டிடிஇ மோசமாக நடந்து கொள்வதாகப் பரவும் வீடியோ தமிழ்நாட்டில் நடந்தது அல்ல. அது பாட்னாவிலிருந்து புது டெல்லி செல்லக்கூடிய சம்பூர்ணா கிராந்தி விரைவு இரயிலில் நிகழ்ந்தது என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader