தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் சிலை வைக்க, ஊர்வலம் செல்ல தடை எனப் பரவும் பழைய செய்தி !

பரவிய செய்தி
விநாயகர் சதுர்த்தி.. பொது இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி இல்லை.. சிலைகளை ஊர்வலமாகவோ நீர்நிலைகளில் கரைக்கவோ அனுமதி இல்லை. என் பண்டிகையை கொண்டாட நான் எதுக்கு உங்கள் கிட்ட அனுமதி கேட்கனும்.
மதிப்பீடு
விளக்கம்
2023 ஆண்டிற்கான விநாயகர் சதுர்த்தியின் பொதுவிடுமுறை தினமாக முதலில் செப்டம்பர் 17ம் தேதி அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், செப்டம்பர் 18ம் தேதியே விநாயகர் சதுர்த்தி கொண்டாட இருப்பதாக பல்வேறு கோவில் நிர்வாகத்திடம் இருந்து கோரிக்கை வந்ததால் செப்டம்பர் 18ம் தேதியை விடுமுறை தினமாக தமிழ்நாடு அரசு மாற்றியது.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைக்க அனுமதியில்லை, சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லவோ, நீர் நிலைகளில் கரைக்கவோ அனுமதியில்லை உள்ளிட்ட கட்டுபாடுகளை தமிழ்நாடு அரசு விதித்து உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுவது போன்ற தந்தி டிவி சேனலின் நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் பாஜகவினரால் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்நாடு அரசு கட்டுப்பாடுகள் விதித்ததாக சமீபத்திய செய்திகள் ஏதும் வெளியாகவில்லை. ஆகையால், நியூஸ் கார்டில் உள்ள செய்தியை வைத்து தேடுகையில், 2021 ஆகஸ்ட் 30ம் தேதி தந்தி டிவியின் ட்விட்டர் பக்கத்தில் இதே செய்தி வெளியாகி இருக்கிறது.
#BREAKING : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைக்க அனுமதியில்லை
சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்செல்லவோ, நீர் நிலைகளில் கரைக்கவோ அனுமதியில்லை
நீர்நிலைகளில் சிலைகளை கரைக்க தனி நபர்களுக்கு அனுமதி#VinayagarChathurthi #TNGovt #CoronaRestrictions pic.twitter.com/X5RzfadwIw
— Thanthi TV (@ThanthiTV) August 30, 2021
அதில், ” விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைக்க அனுமதியில்லை. சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்செல்லவோ, நீர் நிலைகளில் கரைக்கவோ அனுமதியில்லை நீர்நிலைகளில் சிலைகளை கரைக்க தனி நபர்களுக்கு அனுமதி ” என வெளியாகி இருக்கிறது.
வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டில் முதல்வர் ஸ்டாலின் பேசும் வீடியோ ஆனது 2021 ஆகஸ்ட் 30ம் தேதி தந்தி டிவியின் யூடியூப் சேனலில் “விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைக்க அனுமதியில்லை” எனும் தலைப்பில் வெளியாகி இருக்கிறது.
2021ம் ஆண்டில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பண்டிகை காலங்களில் எச்சரிக்கையாக இருக்கும்படியும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்து இருந்தது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைக்க, ஊர்வலம் செல்ல அனுமதியில்லை என்றும், தனிநபராக சிலைகளை கொண்டு செல்லலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது.
மேலும் படிக்க : விநாயகர் சதுர்த்திக்கு குறைந்த சிலைகளை அமைக்க திமுக அரசு வழக்கு தொடுத்ததாக வதந்தி பரப்பும் பாஜகவினர்
மேலும் படிக்க : குப்பை வண்டியில் பறிமுதல் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள்.. திமுக அரசின் செயலா ?
இதற்கு முன்பாக, தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பரப்பப்பட்ட பல்வேறு பொய் செய்திகள் தொடர்பான உண்மை குறித்தும் யூடர்ன் கட்டுரைகளை வெளியிட்டு இருக்கிறோம்.
முடிவு :
நம் தேடலில், தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைக்க, ஊர்வலம் செல்ல அனுமதியில்லை எனப் பரவும் நியூஸ் கார்டு 2021ல் வெளியான பழைய செய்தி என்பதை அறிய முடிகிறது.