இளம் பெண் போதையில் இருப்பதாக தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டு பரப்பப்படும் மங்களூரு வீடியோ !

பரவிய செய்தி
மப்பு மண்டைக்கேறி அலப்பறை காட்சி
மதிப்பீடு
விளக்கம்
இளம் பெண் ஒருவர் போதையில் மோசமாக நடந்து கொள்வதாக வீடியோ ஒன்றினை சமூக வலைத்தளங்களில் வலதுசாரி ஆதரவாளர்கள் பரப்பி வருகின்றனர். மேலும் பெண்களின் உரிமைக்காகத் தொடர்ந்து போராடி வந்த சமூக சீர்திருத்தவாதி பெரியாருடன் ஒப்பிட்டு ‘பெரியார் பேத்திக்குப் போதை தலைக்கு ஏறிவிட்டது’ எனப் பரப்புகின்றனர். அந்த வீடியோவினை சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.
சொரியாரியான் பேத்தி மப்பு மண்டைக்கேறி அலப்பறை காட்சி pic.twitter.com/R2pscjp9bl
— anantham (@ananthamharshi) September 15, 2023
அந்த வீடியோவில் ஆக்ரோஷமாக நடந்து கொள்ளும் பெண்ணை பிடிக்கக் காவல் துறையினர் முயற்சி செய்கின்றனர். அப்போது அவர் காவலர்களை எட்டி உதைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தொடர்ந்து அவரது கால்களுக்கு விலங்கு மாட்டப்படுகிறது.
உண்மை என்ன ?
பரவக் கூடிய வீடியோவில் உள்ள காவலர்கள் தமிழில் பேசவில்லை. அவர்கள் கன்னடத்தில் பேசுகின்றனர். மேலும் அவர்களது சீருடையில் இடது கையில் உள்ள காவலர் பேட்ஜ்-ல் கர்நாடக காவல் துறையின் முத்திரை உள்ளது.
மேற்கொண்டு பரவும் வீடியோவின் கீ ப்ரேம்களையும் முக்கிய வார்த்தைகளையும் கொண்டு தேடியதில் அது கர்நாடக மாநிலம் மங்களூரில் நடந்தது என்பதை அறிய முடிந்தது.
கடந்த செப்டம்பர் 1ம் தேதி மங்களூரில் உள்ள மருந்துக் கடை ஒன்றில் இளம் பெண் ஒருவர் ஆக்ரோஷமாக நடந்து கொண்டுள்ளார். எனவே காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், அப்பெண் போதைப் பொருள் உட்கொண்டு இருக்கலாம் எனச் சந்தேகப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
சோதனையில் அப்பெண் போதைப் பொருள் எதுவும் உட்கொள்ளவில்லை என ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து அப்பெண் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு அவருக்கு மருத்துவச் சிகிச்சைகள் நடைபெற்று வருகிறது என மங்களூரு காவல் துறை தரப்பில் கடந்த 9ம் தேதி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து News 18, Daiji world போன்ற இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. மங்களூரில் நடந்த இச்சம்பவத்தினை தமிழ்நாட்டுடனும், போதைப் பொருள் உட்கொண்டதாகவும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
முடிவு :
நம் தேடலில், போதையில் பெண் ஒருவர் மோசமாக நடந்து கொள்கிறார் எனத் தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டுப் பரப்பப்படும் வீடியோ குறித்தான தகவல் உண்மை அல்ல. மங்களூரில் நடந்த அந்த சம்பவத்தில் அப்பெண் போதைப் பொருள் எதையும் உட்கொள்ளவில்லை எனக் காவல் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது.