This article is from Feb 27, 2018

லேப்டாப் கருவியை கண்டுபிடித்தது தமிழர்கள்.. கல்வெட்டு ஆதாரம் உண்மையா ?

பரவிய செய்தி

4000 வருடங்களுக்கு முன்னாடியே நம்மாளு லேப்டாபை கண்டுபுடுச்சுட்டான்.. வெள்ளக்காரன் அதுக்கு உயிர்குடுத்து பேர் வாங்கிட்டான்.

மதிப்பீடு

சுருக்கம்

முதலில் இந்த சிற்பங்கள் தமிழகத்தைச் சேர்ந்தவையே அல்ல. பழங்கால கிரேக்க சிற்பங்கள் ஆகும். சிற்பத்தில் பெண்ணின் கையில் இருப்பது நகைகள் போன்ற பொருட்களை வைக்கும் பெட்டியாக இருக்கக்கூடும் என்று ஆராய்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

விளக்கம்

4000 ஆண்டுகள் பழமையான சிற்பத்தில் பெண் ஒருவள் லேப்டாப் ஒன்றை பயன்படுவது போன்ற அமைப்பு இடம்பெற்றுள்ளது. ஆக, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் லேப்டாப் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளனர் என்று சமூக வலைதளங்களில் இப்புகைப்படங்கள் பரவி வருகின்றன.

மறுபுறம், இத்தகைய பழங்கால கிரேக்க சிற்பத்தில் செல்வந்த பெண் ஒருவள் லேப்டாப் அல்லது நவீன சாதனத்தை பயன்படுத்துவது போன்று செதுக்கப்பட்டுள்ளன. மேலும், அந்த லேப்டாப்பில் USB பயன்படுத்துவதற்காக இரு துளைகள் உள்ளன என்று ஒரு கற்பனை கதையாக இணையத்தில் செய்திகளும், வீடியோக்களும் பரவி வருகின்றன. இது தொடர்பான வீடியோக்கள் 2014-ல் “ STILL SPEAKING OUT ” என்ற youtube சேனலில் வெளிவந்தன.

கிரேக்க சிற்பம் :

“ Grave Naiskos of an Enthroned Women With an Attendant ” என்ற பெயரிடப்பட்ட இச்சிற்பம் பழங்கால கிழக்கு கிரேக்கத்தை சேர்ந்தவை. கி.மு100 காலக்கட்டத்தைச் சேர்ந்த இச்சிற்பத்தை வடிவமைத்தவர் பற்றிய எந்த தகவலும் இல்லை. மார்ஃபில் கற்களில் செதுக்கப்பட்ட இந்த சிற்பம் கலிபோர்னியாவில் உள்ள j. Paul Getty museum இல் வைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய பழமையான கிரேக்க சிற்பக்கலையில் அமர்ந்த நிலையில் இருக்கும் பெண்ணுக்கு எதிராக பணி பெண் ஒருவள் கையில் ஒரு பெட்டி ஒன்றை ஏந்தியவாறு நிற்பாள். அதில் இரு துளைகள் காணப்படுகிறது. இவையே லேப்டாப் கற்பனைக்கு காரணியாகும்.

சிற்பத்தில் இடம்பெற்ற லேப்டாப் போன்ற பெட்டியானது அலங்கார நகைகளை வைக்கப்படும் பெட்டி அல்லது கண்ணாடி பொருத்தப்பட்ட பெட்டியாக இருக்கக்கூடும் என்று அகழ்வாராய்ச்சி ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றன.

பெட்டியில் உள்ள USB பொருத்துவது போன்ற இரு துளைகள் வெண்கல பொருள் அல்லது தனியாக வடிவமைக்கப்பட்ட மார்ஃபில் சிற்பத்தை பொருத்துவதற்காக இடம்பெற்றிருக்கலாம் என்று ஒரேகோன் பல்கலைக்கழகத்தின் கலை, வரலாறு பேராசிரியர் ஜெஃப் ஹுர்விட் தெரிவித்துள்ளார்.  

பழங்காலத்தில் பெண்கள் தங்களை அலங்காரப்படுத்தி கொள்வதற்காகவே கையடக்க கண்ணாடி பெட்டிகள் மற்றும் அணிகலன்கள் அடங்கிய பெட்டிகளை அதிகம் உபயோகித்து வந்தனர் என்பதை பல கலை ஓவியங்கள் மூலம் நாம் அறிந்ததே.

இதை போன்று, 1928-ம் ஆண்டில் வெளியான சார்லின் சாப்ளின் திரைப்படம் ஒன்றில் நவீன செல்போன் ஒன்றை பெண் ஒருவள் பயன்படுத்துவது போன்ற காட்சி இடம்பெற்றிப்பதாக கூறி 2010-ல் இணையத்தில் பரவி வந்தன. அதன்பின்னர், அப்பெண் பயன்படுத்தியது ஒருவிதமான இசைக்கருவி என்று வல்லுநர்கள் அறிவித்தனர்.

இவற்றை அடிப்படையாக கொண்டு, வருங்காலத்தில் பயன்படும் அதிநவீன தொழில்நுட்பம் அடங்கிய லேப்டாப் கருவிகள் பற்றி முன்பே தமிழர்கள் அல்லது கிரேக்கர்கள் அறிந்துள்ளனர் என்று கூறி வருவது தவறானது என்று கூற முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader