கர்நாடகாவை விட தமிழகத்தில் அதிக மழை பெய்கிறதா ?

பரவிய செய்தி

ஒரு ஆண்டில் பெய்யும் சராசரி மழையளவு, கர்நாடகாவில் 722 மி.மீ, ஆந்திராவில் 908 மி.மீ. ஆனால், தமிழ்நாட்டில் 950 மி.மீ ஆக உள்ளது. ஆந்திராவை விடவும், கர்நாடகாவை விடவும் தமிழகத்தில்தான் மழையின் அளவு அதிகமாக உள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் பொழியும் சராசரி மழையின் அளவு கர்நாடகாவை விட குறைவாகவும், ஆந்திராவை விட சிறிது அதிகமாகவும் இருப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கின்றன.

விளக்கம்

காவிரி நதிநீர் பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனை, கிருஷ்ணா நதிநீர் பிரச்சனை என தமிழகத்தை சுற்றி தண்ணீர் பிரச்சனைக்கு பஞ்சமில்லை. முன்பில்லாத அளவிற்கு நதிநீர் பங்கீட்டு, மற்ற மாநிலங்களுக்கு செல்லும் ஆற்றின் பாதையில் அணைக் கட்டுவது என தொடர்ந்து பல பிரச்சனைகள் எழுவதற்கு காரணம் அரசியலைத் தவிர வேறெதுவாக இருக்கவும் வாய்ப்பில்லை.

தமிழகத்திற்கு உரித்தான நதிநீரை மற்ற மாநிலங்களிடம் கேட்டு பெறும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். இதற்கு காரணம் தமிழகத்தில் போதிய மழைநீர் சேமிப்பு திட்டங்கள் இல்லாததே.

ஒரு ஆண்டில் பெய்யும் சராசரி மழையளவாக கர்நாடகாவில் 722 மி.மீ, ஆந்திராவில் 908 மி.மீ, தமிழ்நாட்டில்  950 மி.மீ ஆக உள்ளது. ஆந்திரா, கர்நாடகாவை விட தமிழகத்தில்தான் மழையின் அளவு அதிகமாக உள்ளது. ஆனால், நம்மை விட குறைந்த மழையளவு கொண்ட மாநிலங்களிடம் தண்ணீர் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். இலவசங்களுக்கு ஆசைப்பட்டு தகுதியற்றவர்களை தேர்ந்தெடுத்தது நமது தவறு. இவ்வாறு தென் மாநிலங்களில் பெய்யும் மழையின் அளவை மேற்கோள்காட்டி ஒரு செய்தி சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்படுகிறது.

இந்த தகவலை பார்த்தவுடன், அட..! நம்ம தமிழ்நாட்டில் இவ்வளவு மழை பெய்கிறது. ஆனா, அதை சேமிக்காமல் விட்டது நமது தவறுதான் போல என்று அனைவரும் நினைத்திருப்பார்கள். இங்கு மாறுபட்ட புள்ளி விவரங்களை கூறி மக்களின் எண்ணத்தை மாற்றவே இது போன்ற தவறான விவரங்களை கூறி வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் பொழியும் மழையின் அளவை கணக்கிடும் புள்ளிவிவரமான “ Rainfall Statistic Report of India ” அறிக்கையானது Ministry Of Earth Science கீழ் இயங்கும் துறையின் மூலம் வெளியிடப்படுகிறது.

வருடந்தோறும் சராசரி மழை பொழிவானது கர்நாடகாவில் 1147.2 மி.மீ, கேரளாவில் 2924.3 மி.மீ, ஆந்திராவில் 890.0 மி.மீ , தமிழ்நாட்டில் 912.4 மி.மீ ஆக இருக்கும் என தீர்மானித்துள்ளனர். இவை ஒவ்வொரு இடத்திற்கும் பொதுவான அளவாகும்.

தமிழ்நாட்டின் வருடாந்திர சராசரி மழையளவு கர்நாடகாவை விட குறைவாகவும், ஆந்திராவை விட சிறிது அதிகமாகவும் இருப்பதை இந்த புள்ளிவிவரங்கள் தெளிவுப்படுத்துகிறது. மேலும், தமிழகத்தின் பல இடங்களில் பருவமழை பொய்த்துப் போவதும், காலம் தவறிய மழைப் பொழிவாலும் விவசாயிகள் நீர் இன்றி தவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் முறையான நீர் மேலாண்மை இல்லாத காரணத்தினால் கிடைக்கும் குறைவான பருவ மழையை கூட முழுமையாக சேமிக்க முடியாத நிலையில் உள்ளோம். ஏரி, குளங்கள் அனைத்தும் தூர்வாரி தகுந்த திட்டங்கள் வகுத்து தண்ணீரின் தேவையை நிவர்த்தி செய்ய வேண்டும்.

இங்கு யாரும் தேவைக்கு அதிகமாக நீரை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லையென்றாலும் நதிநீர் பங்கீட்டில் தமிழக மக்களின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டியது ஜனநாயகக் கடமையாகும்.

காவிரியை கேட்கக்கூடாது,அதற்காக போராடக்கூடாது அல்லது இவர்களை நோக்கி கேள்விகள் வரக் கூடாது என்பதற்காக பல கதை வரும். அதை திட்டமிட்டு பரப்புவர். இந்த கதைவிடும் குள்ளநரித் தந்திரத்திற்கு இடமளிக்காமல் காவிரி வேண்டும்! அதற்கு மேலாண்மை வாரியம் வேண்டும்! என ஒரு குரலாய் ஒலிப்போம்.

Please complete the required fields.
ஆதாரம்

Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close