தமிழ்நாடு மின்துறை அதிகாரிகளிடம் ரூ.360 கோடியை அமலாக்கத்துறை பறிமுதல் செய்ததாகப் பரவும் பொய் தகவல் !

பரவிய செய்தி
மின் துறை அதிகாரிகளிடம் இவ்வளவு என்றால் அணில் அண்ணன் கிட்ட…
மதிப்பீடு
விளக்கம்
“மின்துறை அதிகாரிகளிடம் சோதனை – ரூ360 கோடி முடக்கம்!” என்ற தலைப்பில் ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு ஒன்றினை அதிமுகவினர் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
மின் துறை அதிகாரிகளிடம் இவ்வளவு என்றால் 🐿
அணில் கிட்ட…..🤔 pic.twitter.com/ewaQJVTxwo— Sai Jayathi Kovai AIADMK (@SaiAiadmk) April 28, 2023
அதில், “தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சில அதிகாரிகளுக்குத் தொடர்புடைய 10 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதில் முறைகேடு தொடர்பான ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள், சொத்துப் பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், ரூ360 கோடி மதிப்பிலான வைப்பு நிதியும் முடக்கப்பட்டிருக்கிறது!” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்துறை அதிகாரிகளுடமே இவ்வளவு தொகை இருந்தால் அமைச்சரிடம் எவ்வளவு இருக்கும் என இக்கார்டை அதிமுகவினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை என்ன ?
பரவக் கூடிய ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு குறித்து அவர்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் தேடினோம். நேற்றைய தினம் (ஏப்ரல், 27ம் தேதி) அந்த கார்டினை ஜூனியர் விகடன் தங்களது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
மின் துறை அதிகாரிகளிடம் சோதனை – ரூ360 கோடி முடக்கம்! pic.twitter.com/D5fULCJ4nP
— @JuniorVikatan (@JuniorVikatan) April 27, 2023
இது குறித்து மேற்கொண்டு தேடியதில், அமலாக்கத் துறையின் அதிகாரப் பூர்வ டிவிட்டர் பக்கத்தில் சில தகவல்கள் கிடைக்கப்பட்டது. அதில், 2023, ஏப்ரல் 24ம் தேதி சென்னையில் 10 இடங்களில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக (TANGEDCO) அதிகாரிகள் மற்றும் சிலரது இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
அச்சோதனையில் பல்வேறு ஆவணங்கள், டிஜிட்டல் சான்றுகள், சொத்து ஆவணங்கள் மற்றும் சவுத் இந்தியா கார்ப்பரேஷன் (SIC) நிறுவனத்தின் ரூ.360 கோடி வைப்புத் தொகை ஆகியவை கைப்பற்றப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.
During the searches various incriminating documents, digital evidence, property documents and Rs. 360 Crore lying as fixed deposits in the accounts of South India Corporation were seized.
— ED (@dir_ed) April 27, 2023
இதுகுறித்து ‘அறப்போர் இயக்கம்’ தனது டிவிட்டர் பக்கத்தில் அமலாக்கத் துறையின் செய்தி அறிக்கை ஒன்றினை பதிவிட்டுள்ளது. அதில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை நிலக்கரி போக்குவரத்துக்காக அதிகப் பணம் பெற்று மோசடி செய்தது தொடர்பாக ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு இயக்குநரகம் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டது.
இந்த இழப்பு 2001 முதல் 2019ம் ஆண்டு வரையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அதிகாரிகளின் ஒத்துழைப்பில் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து நடத்தப்பட்ட சோதனையில் சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ரூ.360 கோடி வைப்புத் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை கூறியுள்ளது.
சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ரூ.360 கோடி வைப்புத் தொகையை அமலாக்கத் துறை கைப்பற்றியுள்ளது. ஆனால், இது குறித்து ஜூனியர் விகடன் வெளியிட்ட நியூஸ் கார்டில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதி கைப்பற்றப்பட்டது போல் தவறாகப் பொருள் கொள்ளும்படி குறிப்பிடப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு அறப்போர் கொடுத்த நிலக்கரி போக்குவரத்து ஊழல் புகார் மீது லஞ்ச ஒழிப்பு துறை விரிவான விசாரணைக்கு பிறகு ரூ 908 கோடி ஊழல் இந்த வாரம் வழக்கு தாக்கல் செய்தது. செட்டிநாடு குழுமம் சவுத் இந்தியா கார்பரேஷன் லிமிடட் மற்றும் மின்சார வாரிய அதிகாரிகள் உள்பட 10 பேர் மீது FIR (2/2) pic.twitter.com/LMHDXLI0ad
— Jayaram Venkatesan (@JayaramArappor) March 3, 2023
மேலும், அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் தனது டிவிட்டர் பக்கத்தில், இவ்வழக்கின் முதல் தகவல் அறிக்கையினை பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், 2018ம் ஆண்டு அறப்போர் இயக்கம் தாக்கல் செய்த ஊழல் புகாரில் 2011 முதல் 2016ம் ஆண்டு வரையில் நிலக்கரி போக்குவரத்தில் ரூ.908 கோடி ஊழல் நடந்ததாக ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு இயக்குநரகம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. இதில், செட்டிநாடு குழுமம், சவுத் இந்தியா கார்பரேஷன் லிமிடட் மற்றும் மின்சார வாரிய அதிகாரிகள் உள்பட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
முடிவு :
நம் தேடலில், மின்துறை அதிகாரிகளிடம் சோதனை – ரூ.360 கோடி முடக்கம் என ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ள நியூஸ் கார்டில் குறிப்பிடப்பட்டிருப்பது, சவுத் இந்தியா கார்பரேஷன் நிறுவனத்தின் வைப்புத் தொகையே, மின்துறை அதிகாரிகளிடம் இருந்து அல்ல என்பதை அறிய முடிகிறது.