This article is from May 22, 2020

டான்சானியா அதிபர் தன் மகனுக்கு இஞ்சி, எலுமிச்சைக் கொடுத்து கொரோனாவை குணப்படுத்தியதாக கூறினாரா ?

பரவிய செய்தி

என்னுடைய மகனுக்கு கொரோனா தொற்று இருந்தது..! பாரம்பரிய முறைப்படி இஞ்சி மற்றும் எலும்மிச்சம்பழத்தின் சாறுகளை கொடுத்து வந்தோம்.! அது உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து இன்று என் மகன் கொரோனா தொற்று இல்லாதவனாக விளையாடிக்கொண்டு இருக்கிறான்..!

Facebook link 

மதிப்பீடு

சுருக்கம்

டான்சானியா அதிபர் மகுஃபுலி கொரோனா பாதித்த தனது குழந்தைக்கு இஞ்சி, எலுமிச்சைச்சாறு அளித்ததாக கூறியது உண்மை. ஆனால், அதே அதிபர் வைரசை சாத்தான் என்றும் கூறி இருந்தார். அதையும் விரிவாக படிக்கவும்.

விளக்கம்

டான்சானியா நாட்டின் பிரதமர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட தன்னுடைய மகனுக்கு இஞ்சி மற்றும் எலுமிச்சையைக் கொடுத்து குணப்படுத்தியதாக ஓர் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. மேலும், தடுப்பூசிக்கு எதிரான கருத்துகளும் இதனுடன் முன்வைக்கப்படுகிறது. ஆகையால், பரவி வரும் தகவல் குறித்து ஆராய்ந்து பார்த்தோம்.

உண்மை என்ன ? 

வைரலாகும் தகவல் தொடர்பாக ஆராய்ந்து பார்த்த பொழுது புகைப்படத்தில் இருப்பவரும், வைரலான கூற்றைத் தெரிவித்தவரும் டான்சானியா நாட்டின் பிரதமர் அல்ல, ஜனாதிபதி மகுஃபுலி என அறிய முடிந்தது. டான்சானியா நாட்டின் அதிபர் தன் மகனுக்கு இஞ்சி மற்றும் எலுமிச்சைச் சாறு கொடுத்ததாக கூறினார் என செய்திகள் பலவற்றில் வெளியாகி இருக்கிறது.

மே 17-ம் தேதி பிபிசியில் ” Coronavirus: Tanzania President Magufuli says hospital numbers reducing ” என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில், ”  வடமேற்கு டான்சானியாவின் சட்டோ நகரத்தில் உள்ள சர்ச் சர்வீசில் பேசிய ஜனாதிபதி மகுஃபுலி தன்னுடைய குழந்தை வைரசால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், ஆனால் தற்போது நன்றாக இருப்பதாகவும், புஷ் அப் எடுப்பதாகவும் தெரிவித்தார். தனிமைப்படுத்திக் கொள்ளுதல், நீராவியை உள்ளிழுப்பது, எலுமிச்சை மற்றும் இஞ்சி சாறு போன்றவை கடைப்பிடித்து தன் குழந்தை மீட்டுள்ளதாக கூறினார் ” என டான்சானியாவில் இருந்து கிடைத்த தகவலை இடம்பெற்று உள்ளது.

ஆனால், இந்த சிகிச்சை வேலை செய்கிறது என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை மற்றும் பரவலாக அதிக அளவிளான மக்கள் கொரோனா வைரஸில் இருந்து மீண்டே வருகிறார்கள் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளதாக பிபிசியில் கூறப்பட்டுள்ளது.

டான்சானியா அதிபர் மகுஃபுலி தனது குழந்தையைத் தனிமைப்படுத்தி எலுமிச்சை, இஞ்சி சாறு கொடுத்து குணப்படுத்தியதாக பேசிய வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலாகியது. அடுத்ததாக, அவர் கோவிட்-19 பரிசோதனை முறையை ” மோசமான விளையாட்டு ” என விமர்சித்து இருந்தார்.

கோவிட்-19 சோதனைக்கு மனிதர்களின் மாதிரிகள் என செம்மறி ஆடுகள், ஆடுகள் மற்றும் பப்பாளி பழத்தின் மாதிரிகளை அனுப்பிய பொழுது சோதனை நேர்மறையாக வந்ததாக குற்றம்சாட்டி இருந்தார். டான்சானியாவில் கோவிட்-19 தொற்றால் 21 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. 2015-ம் ஆண்டில் டான்சானியாவின் அதிபராக மகுஃபுலி தேர்ந்தெடுக்கப்பட்டார். 2020-ம் ஆண்டில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு உருவாகியது. இதனால் அந்நாட்டின் தேர்தல் அக்டோபர் மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டான்சானியா தனது அண்டை நாடுகளைப் போன்ற சில சமூக இடைவெளி நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தி உள்ள நிலையில், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளின் வழிபாடுகளில் மக்களை கலந்து கொள்ள ஊக்குவிப்பதே மகுஃபுலியின் சொந்த விருப்பமாக இருந்தது. ஏனெனில், கொரோனா வைரசை ” சாத்தான் ” என்றும், அதை பிராத்தனை மூலம் வெல்ல முடியும் என மகுஃபுலி தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

” வைரசால் இயேசுவின் உடலில் வாழ முடியாது, அது உடனடியாக எரிந்து விடும் ” என மகுஃபுலி கூறி இருந்தார்.

டான்சானியா அதிபர் மகுஃபுலி தனது குழந்தைக்கு இஞ்சி, எலுமிச்சைச்சாறு அளித்து கொரோனாவில் இருந்து கொரோனாவில் இருந்து குணப்படுத்தியதாக கூறும் தகவல் உண்மையே. அவர் அந்த கூற்றை தெரிவித்த வீடியோ வைரலாகி உள்ளதாக செய்திகளில் இடம்பெற்று இருக்கிறது. ஆனால், இஞ்சி மற்றும் எலுமிச்சைச்சாற்றை மட்டும் வைத்து கொரோனாவை குணப்படுத்த முடியும் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை என மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேம்போக்காக பார்ப்பவர்களுக்கு இஞ்சி மற்றும் எலுமிச்சை எடுத்துக் கொண்டால் கொரோனாவை குணப்படுத்தலாம் என்கிற எண்ணம் உருவாகி இருக்கும்.

உலக அளவில் கோவிட்-19 பாதித்த அனைவரும் இறப்பதில்லை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முயற்சியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கோவிட்-19க்கு இதுதான் மருந்து என எந்த மருந்தும் அறிவிக்கப்படவில்லை. இந்தியாவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகளும், நல்ல உணவும் அளிக்கப்படுகிறது கபசுர குடிநீர் உள்ளிட்டவையையும் அளிக்கலாம் என அரசு அறிவித்தது. சீனாவிலும் பாரம்பரிய முறையிலான மருந்துகளும் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது..

ஆக, கொரோனா வைரசிற்கு பாரம்பரியம் மற்றும் இயற்கையான மருந்துகளே கொடுக்க கூடாது ஆங்கில மருந்துகளே கொடுக்க வேண்டும் என கட்டுப்பாடு இல்லை. அதேபோல், இதுதான் மருந்து என எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader