திமுக ஆட்சியில் டாஸ்மாக்கில் பிராந்தியை எப்படி குடிப்பது என பயிற்சி அளிப்பதாகத் தவறாகப் பரவும் 2012ம் ஆண்டு செய்தி !

பரவிய செய்தி
டாஸ்மாக்கில் புதிய ரக பிராந்தி அறிமுகம். எப்படி ருசித்து அருந்துவது என்பதற்கு செயல் விளக்க பயிற்சி. திராவிட சாதனை ஆட்சியின் சாட்சி.
மதிப்பீடு
விளக்கம்
கடந்த மே 22 அன்று டாஸ்மாக்கில் புதிய ரக மதுபானம் அறிமுகம் ஆகியுள்ளது என்று கூறிய செய்தித்தாளின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் ஆளும் திமுக அரசுக்கு எதிராக வைரலாகப் பரவி வருகிறது. மேலும் அந்த செய்தித்தாளில் எப்படி புதிய ரக மதுபானத்தை ருசித்து அருந்துவது என்பதற்கு செயல் விளக்க பயிற்சியும் அளிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
திமுக சிக்கி சின்னாபின்னமான தமிழர்கள் https://t.co/rKCBYlEGK5
— 🌷மினி மோகன்🌷 (@Mini52614198) May 24, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் செய்தித்தாளின் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இது 2023 மே 22 அன்று வெளியான செய்தித்தாள் இல்லை என்பதையும், 2012 மே 22 அன்று வெளியான இரு வெவ்வேறு பழைய செய்தித்தாள்களின் புகைப்படங்கள் என்பதையும் அறிய முடிகிறது.
மேலும் இந்த செய்தி குறித்து ஃபேஸ்புக்கில் 2012 மே 22 அன்று காட்டுபூச்சி & கோ என்ற பக்கத்தில் பரவி வரும் இதே செய்திதாளின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளதை காண முடிந்தது. மேலும் அதில் “டாஸ்மாக் இல் புதிய ரக பிராந்தி அறிமுகம்.. எப்படி ருசித்து அருந்துவது என்று செயல் விளக்கம்…. எல்லாம் நல்ல தான் இருக்கு பாஸ்.. சாம்பிள் தருவாங்களா பாஸ்…” என்பது போன்று நையாண்டியாக பதிவிட்டுள்ளதையும் காண முடிந்தது.
மேலும் இதுகுறித்து ஆய்வு செய்து பார்த்ததில், 2003 நவம்பர் 29 அன்று முதல் Tamilnadu State Marketing Corporation Ltd (TASMAC) எனப்படும் டாஸ்மாக் வணிக நிறுவனத்திருக்கு மது விற்பனை செய்யும் உரிமையை அப்போதைய அதிமுக அரசு அதிகாரப்பூர்வமாக அளித்தது. அதன்படி மக்களை கவர்வதற்காக அப்போதில் இருந்தே வெளிநாட்டிலிருந்து பல புதிய ரக மதுபானங்களை அறிமுகப்படுத்தி வந்தனர்.
அதன்படி, 2012 மே 22 அன்று டாஸ்மாக் நிறுவனம் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தி எனும் புதிய வகை மதுவை அறிமுகப்படுத்தியதாகவும், அதை எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்பது குறித்து மக்களுக்கு செயல்முறை விளக்கங்களையும் வழங்கியுள்ளது. இதனை ஒன் இந்தியா தமிழ் என்னும் ஊடகம் 2012 மே 22 அன்று வெளியிட்டுள்ள கட்டுரையின் மூலம் உறுதிபடுத்த முடிகிறது.
மேலும் அந்த கட்டுரையில் ஜியோஸ்பேஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ராஜா என்பவர், இந்த புதியவகை மதுபானத்தை எவ்வாறு அருந்துவது என்பது குறித்து விளக்குகையில், நீளமான கண்ணாடிக் கிளாஸில்தான் இதை ஊற்றிக் குடிக்க வேண்டும் என்றும், இது திராட்சை நறுமணம் கொண்ட பானம் எனவும் பல தகவல்களை பகிர்ந்துள்ளார் என்பதை அறிய முடிகிறது.
இதே போன்று விகடன், தினமலர் மற்றும் ஒன் இந்தியா தமிழ் போன்ற பல்வேறு ஊடகங்களும் டாஸ்மாக்கில் அறிமுகமாகிய ஒவ்வொரு புதிய ரக மதுபானம் குறித்தும் பல்வேறு செய்திகளை வெளியிட்டிருக்கின்றன என்பதை அறிய முடிந்தது.
மேலும் படிக்க: டாஸ்மாக் நிறுவனத்தின் இணையதளத்தில் திமுக அலுவலகம் என இருக்கிறதா ?
இதற்கு முன்பும், டாஸ்மாக் தொடர்பாக பரவிய வதந்திகள் குறித்து பல்வேறு கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: பொங்கல் பரிசு தொகை டாஸ்மாக் செல்வதாக பழைய புகைப்படத்தினை செய்தியாக வெளியிட்ட தினமலர் !
மேலும் படிக்க: டாஸ்மாக் கடைக்குச் சென்றுவர இலவச பஸ் பாஸ் கேட்டதாக 2018ல் வெளியான செய்தியைப் பரப்பும் அதிமுக, பாஜகவினர் !
முடிவு :
நம் தேடலில் கடந்த மே 22 அன்று முதல் டாஸ்மாக்கில் புதிய ரக மதுபானத்தை அறிமுகப்படுத்திய திமுக அரசு எனப் பரவும் செய்தித்தாளின் புகைப்படம் தற்போது வெளியானது அல்ல என்பதையும், அது 2012 மே 22 அன்று வெளியான பழைய செய்தித்தாளின் புகைப்படம் என்பதையும் அறிய முடிகிறது.