“அரசு ஊழியர்களுக்கு சோறு போடுவது டாஸ்மாக் தான்” என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாக போலி நியூஸ் கார்டு!

பரவிய செய்தி

அரசு ஊழியர்களுக்கு சோறு போடுவது டாஸ்மாக் தான். டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாயில் தான் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தரப்படுகிறது. எனவே டாஸ்மாக் கடைகளை மூட சொல்வது நியாயமற்றது -கலால் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு டாஸ்மாக் மூலம் வரும் வருமானம் மூலமாகத்தான் சம்பளம் கொடுக்கப்படுகிறது. எனவே டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்வது நியாயமற்றது எனக் கலால் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாக ABP நாடு நியூஸ் கார்டினை பாஜக ஆதரவாளர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை என்ன ?

Abp நாடு நியூஸ் கார்ட் குறித்து அவர்களது சமூக வலைத்தளங்களில் தேடினோம். அப்படி எந்த ஒரு நியூஸ் கார்டினையும் அவர்கள் சமீபத்தில் பதிவிடவில்லை. மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ் கார்ட் 2022, ஜனவரி மாதம் முதலே பாஜகவினர் பரப்பி வந்ததைக் காண முடிந்தது.

Facebook link

அதில் காணப்படும் 2022, ஜனவரி 26ம் தேதியிலும் அத்தகைய நியூஸ் கார்டு எதுவும் பதிவிடப்படவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜியும் எந்தவொரு இடத்திலும் அப்படிப் பேசவில்லை. இதிலிருந்து பரவும் ஏபிபி நாடு நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.

திமுகவின் மகளிரணி செயலாளர் கனிமொழி 2016, ஏப்ரல் மாதம் விருதுநகரில் நடைபெற்ற திமுக மகளிரணி கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசும் போது , “இந்தியாவிலேயே அதிகமாக இளம் விதவைகள் இருக்கக்கூடிய மாநிலமாகத் தமிழ்நாடு மாறிக்கொண்டு இருக்கிறது. ஏன் என்றால்? இங்கே குடிப்பழக்கம் ஒவ்வொரு நாளும் மதுவுக்கு அடிமையாகக்கூடிய நிலை அதிகரித்துக் கொண்டே போகிறது. அதைப்பற்றி இந்த அரசாங்கத்திற்குக் கவலை இல்லை.” எனப் பேசி இருந்தார்.

முதலைச்சர் மு.க.ஸ்டாலின் 2021, ஜூன் மாதம் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் “உங்களது தேர்தல் பிரச்சாரத்தின் போதும், கொரோனா ஊரடங்கின் போதும் டாஸ்மாக் கடைகளை ஒட்டுமொத்தமாக மூட வேண்டும் எனக் கூறி இருந்தீர்கள். தற்போது நீங்கள் ஆட்சிக்கு வந்துள்ளீர்கள். மதுக்கடைகளை ஒட்டுமொத்தமாக மூடப் போவது உள்ளதா” எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் “படிப்படியாகக் குறைக்கப்படும் என்பதின் அடிப்படையில் தான் கூறி இருந்தோம். படிப்படியாக நிச்சயம் குறைக்கப்படும்” எனப் பதில் அளித்திருந்தார்.

2016 சட்டமன்ற தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கு என்பதைக் குறிப்பிட்டு இருந்தது. ஆனால் 2021 தேர்தல் அறிக்கையில் அந்த வாக்குறுதி இடம்பெறவில்லை.

இப்படி தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதில்லை. மாறாக, அதன் வருமானம் கோடிக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது.

முடிவு :

நம் தேடலில், டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாயில் தான் அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் தரப்படுகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாகப் பரவும் ஏபிபி நாடு நியூஸ் கார்டு உண்மை அல்ல. அது எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader