டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக அறவழியில் போராடினால் கைது செய்யக்கூடாது-உயர் நீதிமன்றம்

பரவிய செய்தி
தமிழகத்தில் டாஸ்மாக் கடைக்களுக்கு எதிராக போராடும் யாரையும் கைது செய்யக்கூடாது என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! இந்த உத்தரவை வழங்கியவர் உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்.
மதிப்பீடு
சுருக்கம்
மதுவுக்கு எதிராக அறவழியில் போராடி வருபவர்களை கைது செய்யக் கூடாது என்று நீதிபதி என்.கிருபாகரன் 2017 ஆம் ஆண்டிலேயே உத்தரவிட்டு இருந்தார்.
விளக்கம்
தமிழகத்தில் மதுவிற்கு எதிராக போராட்டங்களும், கோரிக்கைகளும் அதிகரித்து வருவதற்கு நேர்மாறாக அரசிற்கு கிடைக்கும் மது வருவாய் உயர்ந்து கொண்டே செல்கிறது. நாளுக்கு நாள் குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழலில் வருவாய் அதிகரிக்கத்தானே செய்யும்.
அரசே மதுவை விற்கிறது, ஆனால் அதனை எதிர்ப்பு போராடுபவர்கள் மீது கைதுகள், வழக்குகள் பாய்கிறது என்ற கருத்து மக்களிடையே பேசப்படுகிறது. பல ஊர்களில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடுபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுவார்கள்.
இந்நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக அறவழியில் போராடும் மக்களை கைது செய்யக் கூடாது என்ற உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்டது. இதைப் பற்றி மீம்கள் சமூக வலைத்தளங்களால் தற்போது பகிரப்பட்டு வருகிறது.
2017-ல் மதுபானக் கடைகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டு இருந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் கொண்ட அமர்வு, ” குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடைகள் திறக்கக்கூடாது, மதுவுக்கு எதிராக கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் அந்த கிராமத்தில் மது கடைகளை திறக்கக்கூடாது, மதுவுக்கு எதிராக அறவழியில் போராடி வருபவர்களை கைது செய்யக்கூடாது ” எனவும் உத்தரவிட்டார்.
இதற்கு பதில் அளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், ” அறவழியில் போராடினால் அரசு எந்த இடையூறும் செய்யாது. ஆனால், பொதுமக்களுக்கு, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் போராட்டம் நடந்தால் சட்ட விதிகளுக்கு உட்பட்டு காவல்துறை தடுக்கும் ” எனக் கூறி இருந்தார்.
டாஸ்மாக் கடைகள் அரசின் பிரதான வருவாயாக மாறியதன் விளைவு, மது வேண்டாம் என போராடினாலும் கைது. இனி அறவழியில் போராடி மதுவிற்கு எதிராக உங்கள் எதிர்ப்பினை தெரிவியுங்கள்.