This article is from Nov 07, 2018

டாடா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் : விற்பனைக்கு வந்ததா ?

பரவிய செய்தி

டாடா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட புதிய TATA Evision காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 1000 கி,மீ செல்லலாம். இது உலக சாதனையாகும். இதன் பேட்டரிக்கு டாடா நிறுவனம் 10 வருட வாரண்டி அளித்து உள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

மார்ச் 2018-ல் ஜெனிவா வாகன கண்காட்சியில் “ TATA Evision sedan “ காரின் மாதிரி இடம்பெற்றது. இதன் உற்பத்தி இன்னும் தொடங்கவில்லை. மேலும், பரவும் செய்திகளில் இருப்பது போன்று சார்ஜ், பேட்டரி வாரண்டி பற்றிய தகவல் டாடா நிறுவனத்தால் அறிவிக்கப்படவில்லை.

விளக்கம்

இந்திய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் எலெக்ட்ரிக் சார்ஜ் மூலம் இயங்கக் கூடிய காரைத் தயாரித்துள்ளனர். இதனைப் பற்றி பல முரண்பட்ட தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

TATA EVISION SEDAN:

மார்ச் 2018-ல் ஜெனிவாவில் நடைபெற்ற வாகன கண்காட்சியில் டாடா நிறுவனத்தின் புதிய காராக “ TATA Evision Sedan “ காட்சிப்படுத்தப்பட்டது. இதற்கு முன்பாக டாடா இண்டிகா(1998), டாடா நானோ(2008), டாடா நெக்ஸான்(2014), டாடா ரேஸ்மோ (2017) கார்கள் காட்சிப்படுத்தப்பட்டு அதிக விற்பனையை கண்டது.

TATA Evision sedan “  கார் எலெக்ட்ரிக் சார்ஜ் மூலம் இயங்கக்கூடியவை. இந்தியாவில் எதிர்காலத்தில் பயன்படுத்தப்படும் எண்ணத்தில் உருவாக்கப்பட்டதே TATA Evision Sedan. ஆகையால், எலெக்ட்ரோ வாகனங்கள் தயாரிப்பில் டாடா நிறுவனம் களம் இறங்கி உள்ளது.

எனினும், TATA Evision Sedan ஒரு மாதிரி கார் மட்டுமே. அதன் வடிவம், உள் வேலைபாடுகள், சிறப்பம்சங்கள், எலெக்ட்ரிக் பவர்ட்ரெயின் உள்ளிட்டவையால் அக்கார் மதிப்பு 30 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என தெரிவித்து உள்ளனர். இந்த கார்கள் இந்தியாவில் அதிகம் விற்பனையாகுமா மற்றும் குறைந்த விலையில் அளிக்க முடியுமா எனத் தெரியவில்லை. சிறப்பான காராக இருக்க வாய்ப்பு அமையலாம்.

TATA Evision Sedan கார்களின் உற்பத்தி இன்னும் தொடங்கப்படவில்லை. இது வெறும் மாதிரி வடிவம் மட்டுமே. இதன் உற்பத்தி 2020க்கு பிறகு இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களின் பயன்பாட்டை சார்ந்தே தொடங்கப்படும்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 1000 கி.மீ பயணிக்கலாம் என்பது போன்று டாடா நிறுவனம் எந்த ஒரு தகவலையும் குறிப்பிட்டு கூறவில்லை. அதேபோன்று பேட்டரிக்கு 10 வருட உறுதி அளிப்பதாகவும் குறிப்பிடவில்லை. சில மாநில மொழி பதிவுகளில் ரூ.12  லட்சத்திற்க்கான TATA Evision Sedan கார் விற்பனை டெல்லியில் தொடங்கி உள்ளதாகத் தவறாக குறிப்பிட்டு உள்ளனர் “.

டாடா நிறுவனத்தால் TATA Evision Sedan எனும் எலெக்ட்ரிக் கார் 2020-க்கு பிறகு தயாரிக்கப்பட உள்ளது என்பது மட்டுமே உண்மை. மற்றபடி, அதனுடன் இணைக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் தவறானவை.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader