சீனாவில் ” டீ ” மூலம் கொரோனா நோயாளிகளை குணமாக்கினார்களா ?

பரவிய செய்தி

சீன வைத்தியர்கள் வைத்தியசாலைகளில் தினமும் மூன்று வேளை தேநீர் வழங்கி பெருமளவிலான நோயாளிகளை குணப்படுத்தி விட்டார்கள். இறுதியில் இந்த pandemic நோயின் மையமான wuhan முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

மதிப்பீடு

விளக்கம்

சீனாவின் வுஹான் மாகாணத்தில் பரவி உலகம் முழுவதும் பெரும் தொற்றாக மாறி இருக்கும் நோவல் கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளை வுஹானில் தேநீர் (டீ) மூலம் சீன வைத்தியர்கள் குணப்படுத்தி உள்ளதாக ஓர் தகவல் சமூக வலைதளங்களில் வேகமாய் பரவி வருகிறது.

Advertisement

” Dr.LiWenliang சீனாவின் ஹீரோ டாக்டர். கொரோனா வைரசை முதன்முதலாக கண்டுபிடித்ததற்காக சீன அரசினால் தண்டிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவர். அதே வைரசினால் பீடிக்கப்பட்டு அநியாயமாக பலியெடுக்கப்பட்டவர். ஆனால் அந்த கதாநாயகன் இடைப்பட்ட சிறு காலத்தில் தனது மனிதநேயமிக்க திறன்வாய்ந்த ஆராய்ச்சிகள் மூலம் அதற்கு தீர்வையும் விட்டுச் சென்றிருக்கிறார்.

ஆம் Covid-19 என்ற அரக்கனின் ஆற்றலை கொன்றுவிடும் ரசாயனங்களான Methylxthine, Theobromine மற்றும் theophyline ஆகியவை கொரோனாவிட்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து அதனை கட்டுப்படுத்துகிறது என்ற குறிப்பை இவ்வுலகிற்கு விட்டுச் சென்றார். இதில் வியப்பான விடயம் என்னவெனில் அந்த மூன்று ரசாயனங்களும் செரிந்திருப்பது நாம் தினமும் அருந்தும் Tea எனும் பானத்தில்தான்.

தேயிலை செடி இந்த இரசாயனங்களை உற்பத்தி செய்தி அதனை அண்டவிடாமல் உயிர்களை காக்கிறது. இதனைத் தெரிந்து கொண்ட சீன வைத்தியர்கள் வைத்தியசாலைகளில் தினமும் மூன்று வேளை தேநீர் வழங்கி பெருமளவிலான நோயாளிகளை குணப்படுத்தி விட்டார்கள். இறுதியில் இந்த pandemic நோயின் மையமான wuhan முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதனை பகிருங்கள் தீர்வு உங்கள் சமையல் அறையிலேயே இருக்கிறது ” என தமிழில் பரவி வருகிறது. இதே செய்தி ஆங்கிலத்தில் CNN இணையதளத்தில் வெளியாகியதாக சமூக வலைதளத்தில் பரவுகிறது.

உண்மை என்ன ?

இந்த தகவலை பார்க்கும் பொழுது சிலருக்கு ” என்ன பாஸ் டீ குடிச்சா கொரோனா குணமாகுதா, இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு ” எனத் தோன்றும். இந்தியாவில் பல மொழிகளில் வைரலாகும் செய்தியின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார்த்தோம்.

CNN செய்தி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில், சீனாவில் கொரோனா நோயாளிகளை டீ மூலம் குணப்படுத்தியதாக எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை. டீ-யில் Methylxthine என்ற ரசாயனம் இருப்பது உண்மையே. டீ மட்டுமின்றி காஃபி மற்றும் சாக்லேட் உள்ளிட்டவையிலும் அத்தகைய ரசாயனம் காணப்படுகிறது.

Advertisement

கொரோனா வைரஸ் குறித்து எச்சரிக்கை செய்த சீன மருத்துவர் LiWenliang வைரசிற்கு எதிராக டீ-யின் விளைவுகள் குறித்து ஆராய்ச்சி செய்தார் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை . மேலும், அவர் வைரஸ் தொடர்பான வல்லுநர் அல்ல, கண் சிகிச்சை தொடர்பான வல்லுநர். அதேபோல், சீனாவில் உள்ள மருத்துவமனையில் நோவல் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு குறிப்பாக டீ கொடுத்து சிகிச்சை அளித்ததாகவும் தரவுகள் இல்லை. சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவலை உறுதிப்படுத்தும் வகையில் ஆதாரங்கள் ஏதுமில்லை.

மார்ச் 3-ம் தேதி சீன டெய்லி இணையதளத்தில், ” சிஜியாங் மாகாணத்தின் நோய்கள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் ஆராய்ச்சியாளர்கள், டீ குடிப்பதன் மூலம் நோவல் கொரோனா வைரசை தடுக்கலாம், அதற்கான ரசாயனப் பொருட்கள் இருப்பதாக சோதனையில் கண்டறிந்து உள்ளதாக கட்டுரை வெளியாகியது ” எனத் தெரிவித்து உள்ளனர்,

எனினும், பிப்ரவரி 26-ம் தேதி சிஜியாங் சிடிசி வெளியிட்ட கட்டுரை பின்னர் நீக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளனர். நோவல் கொரோனா வைரசிற்கு என பிரத்யேக மருந்துகள் இல்லை. ஆகையால், அதற்கான தடுப்பு மருந்தினை கண்டறியும் முயற்சியில் அறிவியலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். நோவல் கொரோனா வைரசின் பாதிப்பை குறைப்பதாக சில மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், எந்தவொரு குறிப்பிட்ட மருந்தினையும் உலக சுகாதார மையம் குறிப்பிடவில்லை.

சீனாவில் டீ மூலம் கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளை குணப்படுத்தியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானது. சில தவறான தகவல்கள் மக்களுக்கு தவறான நம்பிக்கையை கொடுக்கக்கூடும் என்பதால் சிந்தித்து செய்திகளை பகிரவும்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button