கடலூரில் 6 குழந்தைகளைப் படிக்க வைக்கும் அரசு பள்ளி ஆசிரியரா ?

பரவிய செய்தி
கடலூரில் 6 ஏழை குழந்தைகளை தத்தெடுத்து அவர்கள் கல்வி செலவை ஏற்றுக் கொண்டுள்ள அரசு பள்ளி ஆசிரியை கயல்விழி. மனம் இருந்தால் ஷேர் பண்ணி வாழ்த்துங்கள்.
மதிப்பீடு
விளக்கம்
கடலூர் பகுதியில் 6 ஏழைக் குழந்தைகளை தத்தெடுத்து அவர்களின் கல்வி செலவை ஏற்றுக் கொண்ட அரசு பள்ளி ஆசிரியர் கயல்விழி என ஒருவரின் புகைப்படம் முகநூலில் பகிரப்படுவதை பார்க்க நேரிட்டது. தமிழ் தேசியம் எனும் முகநூல் பக்கத்தின் லோகோ உடன் இருக்கும் மீம் பதிவே பல முகநூல் குழுக்களில் பரவி வருகிறது.
உண்மை என்ன ?
அரசு பள்ளி ஆசிரியர் கயல்விழி என காண்பிக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்தில் இருப்பவர் யார் என அறிந்து கொள்ள புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்து பார்க்கையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் மனைவி கயல்விழி என்பதை அறிய முடிந்தது.
சீமானுக்கும், மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் திருமணம் முடிந்த கையேடு இடிந்தகரையில் உள்ள அணு உலைக்கு எதிரான போராட்டக் களத்திற்கு சென்றுள்ளனர்.
2013 செப்டம்பர் 11-ம் தேதி வெளியான ஒன்இந்தியா செய்தியில், ” இடிந்தகரையில் சீமான் மற்றும் கயல்விழி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அணு உலைக்கு எதிரான அமைதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக ” வெளியாகி இருக்கிறது.
சீமான் உடன் கயல்விழி இருக்கும் புகைப்படத்தில் கயல்விழியை மட்டும் பிரித்து மீம் பதிவிட்டு உள்ளனர். அவர் அரசு பள்ளி ஆசிரியர் அல்ல, மறைந்த முன்னாள் தமிழக சபாநாயகர் காளிமுத்துவின் மகள் ஆவார்.
இத்தகைய மீம் பதிவை நீண்ட காலமாக முகநூல் குழுக்களில் பதிவிட்டு வருகின்றனர். பின்னர் நீக்கிய நிகழ்வுகளும் அரங்கேறி உள்ளது. மக்கள் உண்மை அறியாமல் வாழ்த்துக்களை தெரிவித்து பகிர்வதால் இனி இதுபோன்ற தவறான தகவல்களை பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
முகநூலில் சில பெண்களின் புகைப்படங்களை வெவ்வேறு ஊர்களை குறிப்பிட்டு அரசு பள்ளி ஆசிரியர் என்றும், குழந்தைகளை தத்தெடுத்து கல்விக்கு உதவுவதாக தவறான செய்திகளை லைக் மற்றும் ஷேர்க்காக பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்கதையாகி போகிறது என்பதால் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.