This article is from May 30, 2021

ஆக்சிஜன் வழங்கலை நிறுத்திய தெலங்கானா ஆம்புலன்ஸ் ஓட்டுநரை போலீஸ் தாக்கும் வீடியோவா ?

பரவிய செய்தி

இவன் ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர்.. தெலுங்கானா நிஜமாபாத் ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் சிலிண்டர் லைன் ஆப் பண்ணி விட்டான். போலீஸ் அவனை பிடித்து கேள்வி கேட்டபோது ரெண்டு மூணு நாளாக ஒருத்தருமே சாகவில்லை, அதனால் வேலை இல்லாமல் காசு இல்லாமல் தவிக்கிறதால செய்தேன் என்கிறான்.

மதிப்பீடு

விளக்கம்

தெலங்கானா மாநிலத்தில் உள்ள நிஜமாபாத் மருத்துவமனையில் நோயாளிக்கு அளிக்கப்பட்ட ஆக்சிஜன் விநியோகத்தை நிறுத்திய ஆம்புலன்ஸ் ஓட்டுநரை போலீசார் தாக்கும் காட்சி என 1.18 நிமிட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. மூன்று நாட்களாக எந்த உயிரிழப்பும் நிகழவில்லை, அதனால் வேலை இல்லை என்பதால் ஓட்டுநர் இப்படி செய்ததாக வீடியோவின் நிலைத்தகவலில் கூறப்பட்டுள்ளது. 

Facebook link | Archive link  

உண்மை என்ன ?

வைரல் செய்யப்படும் வீடியோ உடன் கூறிய தகவலை வைத்துத் தேடிப் பார்க்கையில், ” 2021 மே 24-ம் தேதி நியூஸ்18 தெலுங்கு இணையதளத்தில், தெலங்கானா நிஜாமாபாத் மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கள் சிகிச்சைப் பெற்று வந்த ICU வார்டிற்கு வழங்கப்பட்ட ஆக்சிஜன் விநியோகத்தை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நிறுத்தி  இருக்கிறார். அதைப் பார்த்த வார்டு பாய் உடனடியாக எச்சரிக்கை செய்து அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரை சிறைப் பிடித்து உள்ளனர்.

கடந்த சில நாட்களாக நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸ் தேவை இல்லை என்பதால் இம்முடிவை எடுத்ததாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தெரிவித்து உள்ளார். மருத்துவமனை ஊழியர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட ஓட்டுநர் போலீசில் ஒப்படைத்ததாக ” வெளியாகி இருக்கிறது.

தெலங்கானாவில் நடத்த இச்சம்பவம் குறித்து தெலுங்கு சமயம், சாக்சி டிவி உள்ளிட்ட செய்திகளில் வெளியாகி இருக்கிறது.

ஆனால், தெலங்கானா சம்பவத்துடன் தொடர்ப்படுத்தி பகிரப்பட்டு வரும் வைரல் வீடியோ இச்செய்திகளில் இடம்பெறவில்லை. வைரலாகும் வீடியோ குறித்து தேடுகையில், அது மகாராஷ்டிரா மாநிலத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என தெரிய வந்தது.

Twitter link

மகாராஷ்டிரா மாநிலத்தின் ஜல்னா நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஏப்ரல் 09-ம் தேதி உயிரிழந்து உள்ளார். இதனால் அந்த இளைஞரின் குடும்ப உறுப்பினர்கள் சில பாஜக ஆர்வலர்களுடன் தனியார் மருத்துவமனை ஊழியர்களை தாக்கி உள்ளனர். அந்த தாக்குதலில் முக்கிய பங்கு வகித்த பாஜக ஆர்வலர் சிவ்ராஜ் நரியால்வாலே என்பவர் காவல்துறையால் பிடிக்கப்பட்டு தாக்கப்பட்ட வீடியோ வைரலானது தொடர்பாக ஜல்னா போலீசார் அளித்த விளக்கம் ஏஎன்ஐ செய்தியில் மே 28-ம் தேதி வெளியாகி இருக்கிறது.

Twitter link 

மே 29-ம் தேதி நிஜாமாபாத் போலீஸ் ட்விட்டர் பக்கத்தில், ” நிஜாமாபாத் அரசு மருத்துவமனையில் போலீசாரால் ஒருவர் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ தவறானது, தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் ” எனப் பதிவிட்டு இருக்கிறார்கள்.

முடிவு :

நம் தேடலில், ” வைரல் செய்யப்படும் வீடியோ ஆனது தெலங்கானா நிஜமாபாத் மருத்துவமனையில் நோயாளிகளின் ஆக்சிஜன் விநியோகத்தை நிறுத்திய ஆம்புலன்ஸ் ஓட்டுநரை போலீசார் தாக்கும் வீடியோ அல்ல. அது தெலங்கானாவைச் சேர்ந்தது அல்ல, மகாராஷ்டிராவில் நிகழ்ந்த வேறொரு சம்பவம் ” என அறிய முடிகிறது. 

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader