மதுபான ஊழல் வழக்கில் மகள் சிக்கியதால், ‘நான் பிரதமர் மோடியின் நண்பன்’ என சந்திரசேகர ராவ் கூறினாரா ?

பரவிய செய்தி

டெல்லி மதுபான வழக்கில் தனது மகள் பெயர் சிக்கியதை அடுத்து திடீரென கே.சி.ஆர் மோடியின் நண்பன் மற்றும் ரசிகர் ஆனார்.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு கொண்டு வந்த புதிய மதுபான கொள்கையின்படி, டெண்டர் தொடர்பான உரிமக் கட்டணத்தில் மதுக்கடைகளுக்கு ரூ.144.36 கோடி அளவிற்கு தள்ளுப்படி செய்ய அனுமதித்ததாக பாஜக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறையின் ரிமான்ட் அறிக்கையில், தெலங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ் அவர்களின் மகள் கவிதா பெயர் இடம்பெற்றது. இதையடுத்து, தனது மகள் சிக்கியதால், நான் பிரதமர் மோடியின் சிறந்த நண்பன் எனக் கூறி முதல்வர் சந்திரசேகர ராவ் பேசியுள்ளதாக இவ்வீடியோ பாஜகவினரால் பரப்பப்பட்டு வருகிறது.

Twitter link | Archive link 

வீடியோவில் கேசிஆர் பேசுகையில், ” நரேந்திர மோடிக்கு எதிராக எனக்கு எதுவுமில்லை. அவர் மீது மரியாதை உள்ளது, நான் அவருடைய சிறந்த நண்பனும் கூட ” என்று கூறுகிறார்.

உண்மை என்ன ? 

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிர்ப்பு நிலையில் இருந்து வருகிறார். அவரது மகளின் பெயர் டெல்லி மதுபான ஊழல் வழக்கில் சிக்கியதால், நான் பிரதமர் பிரதமர் மோடியின் சிறந்த நண்பன் எனக் கூறி பாஜக பக்கம் சாய்வதாக பரப்பப்படும் வீடியோ குறித்து தேடுகையில், அந்த வீடியோ கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக எடுக்கப்பட்டது என அறிய முடிந்தது.

2018ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி Xplorer India எனும் யூடியூப் சேனலில், “I am Modi’s Best Friend” – CM KCR on his relationship with PM Modi “ எனும் தலைப்பில் வெளியான வீடியோவில், ” நரேந்திர மோடிக்கு எதிராக எனக்கு எதுவுமில்லை. அவர் மீது மரியாதை உள்ளது, நான் அவருடைய சிறந்த நண்பன். நாட்டின் மெதுவான முன்னேற்றத்திற்கே நான் எதிரானவன் “ எனப் பேசியுள்ளார். அதில் இருந்து 30 நொடிகள் கொண்ட பகுதியை தற்போது பரப்பி வருகிறார்கள்.

தெலங்கானா முதல்வர் கேசிஆர் அளித்த முழுமையான பேட்டி 2018 மார்ச் 4ம் தேதி தெலுங்கு யூடியூப் சேனலில் வெளியாகி இருக்கிறது.

தெலங்கானாவின் கரீம்நகர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியை தெலுங்கில் மரியாதையற்ற வார்த்தைகளால் விமர்சித்ததாக பாஜகவினரால் குற்றம்சாட்டப்பட்டு சர்ச்சையானது. இதையடுத்து, கேசிஆர் விளக்கம் அளித்த பேட்டியில் அவ்வாறு பேசி இருக்கிறார்.

முடிவு : 
நம் தேடலில், டெல்லி மதுபான ஊழல் வழக்கில் தனது மகள் சிக்கியதை அடுத்து, நான் பிரதமர் மோடியின் சிறந்த நண்பன் என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பேசியதாக பாஜகவினர் பரப்பும் தகவல் பொய்யானது. பாஜகவினரால் பரப்பப்படும் வீடியோ 4 ஆண்டுகளுக்கு முன்பு பேசிய வீடியோவில் இருந்து எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.
Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader