ஆந்திராவில் தீவிரவாதிகள் மீது கமாண்டோக்கள் தாக்குதலா ?

பரவிய செய்தி

ஆந்திரப்பிரதேசத்தின் திருமலை நெடுஞ்சாலை அருகே 4 தீவிரவாதிகள் மீது கமாண்டோக்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் இறந்துள்ளார், 3 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதிப்பீடு

சுருக்கம்

தெலங்கானா மாநிலத்தில் இரு இடங்களில் OCTOPUS கமாண்டோ பிரிவினரால் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு எதிரான முன்மாதிரி பயிற்சி (Mock drill) வீடியோக்கள் உண்மையான தீவிரவாத தாக்குதல் என தவறாக பரவி வருகிறது.

விளக்கம்

ஆந்திராவில் தீவிரவாதிகள் மீது கமாண்டோக்கள் நடத்திய அதிரடி தாக்குதல் எனப் பரவி வரும் வீடியோக்கள் அதிகம் வைரலாகி வருகிறது. இதில், முஸ்லிம் ஜிகாதி தீவிரவாதி கொல்லபட்டதாகவும் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

ஆந்திர மாநிலத்தில் தீவிரவாத தாக்குதல் நடந்ததா என தேடுகையில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக செய்திகளில் வெளியாகவில்லை. ஆனால், தீவிரவாத தாக்குதல் என பரவும் வீடியோக்கள் பற்றிய செய்தியை காண முடிந்தது.

தாக்குதல் முன்மாதிரி : 

மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகள், கோவில்கள் உள்ளிட்ட இடங்களில் தீவரவாத தாக்குதல்கள் நடந்தால் அதனை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற முன்மாதிரி பயிற்சி நடவடிக்கைகள் OCTOPUS(organisation of counter terrorist operation)-ன் கமாண்டோக்கள் படையினர் மூலம் தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்றன.

தெலங்கானா மாநிலத்தின் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள பத்ரகாளி கோவில் மற்றும் எம்.ஜி.எம் ஹாஸ்பிடல் பகுதி ஆகிய இரு இடங்களில் தீவிரவாத எதிர் தாக்குதல் போன்ற முன்மாதிரி பயிற்சி நடவடிக்கைகள்  ஜனவரி 11, 2019-ல் நடைபெற்றன.

Advertisement

இதற்காக நன்கு பயிற்சி பெற்ற கருப்பு உடை அணிந்த 45 கமாண்டோக்கள் உடன் வாரங்கல் பகுதியின் 45 காவலர்களும் இணைந்து செயல்பட்டனர். கோவில்களில் பக்தர்கள் இருக்கும் இடத்தில் தாக்குதல்களை எப்படி எதிர் கொள்வது என்றும், எம்.ஜி.எம் ஹாஸ்பிடல் பகுதியில் வாகனத்தில் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி கைது செய்வது போன்ற பயிற்சி யும் நடைபெற்றது.

“ கமாண்டோக்கள் மூலம் நிகழ்ந்த முன்மாதிரி பயிற்சி சம்பவம் தீவிரவாத தாக்குதல் என பரவி வருவது அதிர்ச்சியை அளிக்கிறது. இவை நன்கு பயிற்சி பெற்ற கமாண்டோக்கள் மூலம் நடைபெற்ற போலியான தாக்குதல் நிகழ்ச்சியே(Mock drill). இதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை ” என வாரங்கல் காவல்துறையின் பி.ஆர்.ஓ மோகன் கிருஷ்ணா கூறியுள்ளார்.

தெலங்கானா மாநிலத்தின் வாரங்கல் பகுதியில் கமாண்டோக்கள் நடத்திய பயிற்சி தாக்குதல் சம்பவத்தை ஆந்திராவில் தீவிரவாத தாக்குதல் என வதந்தியைப் பரப்பி வருகின்றனர்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button