Fact Checkஅரசியல்மதம்

தெலங்கானாவில் சிவ தீட்சையை தவறாக பேசிய பாதிரியாரை தாக்கியதாக இந்து முன்னணியினர் பரப்பும் பொய் !

பரவிய செய்தி

தெலுங்கானாவில் தேவநோரு கிராமத்தில் பாதிரியார் சிவ தீட்சையை பற்றியும் சிவனை பற்றியும் மிகக் கேவலமாக பிரச்சாரம் செய்தான் சிவனடியார்கள் போட்டு வெளுக்கிறார்கள் தமிழகம் இப்படி மாறுமா?

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

தெலங்கானா மாநிலத்தில் உள்ள தேவநோரு என்கின்ற கிராமத்தில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் சிவ தீட்சையை பற்றியும், சிவனை பற்றியும் மிகக் கேவலமாக பிரச்சாரம் செய்த போது, சிவமாலை அணிந்த சிவனடியார்கள் அவரை தாக்கியதாக 30 நொடிகள் கொண்ட வீடியோ ஒன்றை இந்து முன்னணி கட்சியைச் சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

Advertisement

30 நொடிகள் வீடியோவில், காவின் துண்டு அணிந்த பலர் ஒன்றுக்கூடி ஒருவரை தாக்குவதை காவலர்கள் சிலர் தடுக்க முயல்கின்றனர். எனினும், காவலர்களை மீறியும் அந்த நபர் தாக்குதலுக்கு உள்ளாகும் காட்சிகள் பதிவாகி இருக்கின்றன.

உண்மை என்ன ?

தெலங்கானாவில் சிவமாலை அணிந்தவர்கள் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் குறித்து தேடுகையில், பிப்ரவரி 2ம் தேதி அஜய் தோமர் என்பவரின் ட்விட்டர் பக்கத்தில், ” தெலங்கானாவின் தேவநோரு கிராமத்தில் தலித் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவத்தில் குற்றச்சாட்டப்பட்ட 9 பேர் தலைமறைவு ” எனக் கூறி வைரல் செய்யப்படும் வீடியோவுடன் பதிவிடப்பட்டு உள்ளது.

Twitter link | Archive link 

மேலும், பிப்ரவரி 2ம் தேதி தி நியூஸ் நிமிட் இணையதளத்தில், ” Dalit youth attacked by mob of Shiva devotees in Telangana’s Vikarabad district “ எனும் தலைப்பில் இச்சம்பவம் குறித்த செய்தி வெளியாகி உள்ளது.

செய்தியின்படி, ” ஜனவரி 31ம் தேதியன்று தெலங்கானாவின் விகாராபாத் மாவட்டத்தில் உள்ள யலால் எனும் பகுதியில் 26 வயது தலித் இளைஞனை சிவமாலை அணிந்த கும்பல் கொடூரமாக தாக்கி உள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான தேவனூர் கிராமத்தைச் சேர்ந்த மெட்லி நரேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், தாக்குதல் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

தேவனூர் கிராமத்தில் உள்ள தலித்துகள், கிராமத்தின் மையத்தில் அம்பேத்கரின் சிலையை நிறுவ முடிவு செய்த சம்பவத்தால் இந்த சம்பவம் தூண்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த முடிவிற்கு எதிராக வலதுசாரி குழுவான இந்து வாஹினி அப்பகுதியில் சத்ரபதி சிவாஜி சிலையை நிறுவ திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த தாக்குதலானது தனிப்பட விரோதம் காரணமாக நடந்ததாக காவல்துறை தரப்பில் கூறினாலும், இது வேண்டுமென்றே நடத்தப்பட தாக்குதல் என்றும், அக்கிராமத்தில் தலித்துகள்  வன்முறை மற்றும் பாகுபாட்டுக்கு ஆளாக்கப்பட்டதாகவும் நிர்மூலனா போராட்ட சமிதியின் தலைவர் அபினவ் பூராம் தெரிவித்து உள்ளார்.

யலால் காவல் உதவியாளர் அரவிந்த் கூறுகையில், ” ஜனவரி 30ம் தேதி மாலை நரேஷ் மற்றும் ஸ்ரீநிவாஸ் ஆகிய இருவருக்கும் ஏற்பட்ட சண்டையின் போது நரேந்தர் என்பவர் தலையிட முயன்றார். சிவமாலை அணிந்ததால் தலையிட வேண்டாம் எனக் கூறி நரேந்தரை ஒதுக்கி தள்ளியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நரேந்தர் சம்பவம் குறித்து வாட்ஸ் அப் குரூப்பில் பகிர்ந்து உள்ளனர். போலீசிலும் புகார் அளித்து இருக்கிறார்.  இதையடுத்து, அடுத்த நாள் நரேசை 100 பேர் கொண்ட கும்பல் தாக்கி உள்ளனர் ” என இடம்பெற்று இருக்கிறது.

பிப்ரவரி 2ம் தேதி தி சவுத் ஃபர்ஸ்ட் எனும் இணையதளத்திற்கு நிர்மூலனா போராட்ட சமிதியின் தலைவர் அபினவ் பூராம் கூறுகையில், ” அம்பேத்கர் சிலைக்கான அடிக்கல் நாடும் விழா முடிந்த பிறகு தலித் இளைஞர்களுக்கும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களால் அழைத்து வரப்பட்ட சிவமாலை அணிந்த நபரிடம்(நரேந்தர்) தீட்சையில் இருக்கும் போது சாதி அடிப்படையிலான அவதூறுகளை பயன்படுத்த வேண்டாம் என நரேஷ் கூறி இருக்கிறார். இதனால் கோபமடைந்த அவர் காவல் நிலையத்திற்கு சென்று நரேஷ் மீது புகார் அளித்து இருக்கிறார் ” எனக் கூறியதாக இடம்பெற்று உள்ளது.

முடிவு :

நம் தேடலில், தெலங்கானாவில் காவி சிவ மாலை அணிந்தவர்கள் தலித் இளைஞனை தாக்கிய போது எடுத்த வீடியோவை சிவ தீட்சையை பற்றியும், சிவனை பற்றியும் மோசமாக பிரச்சாரம் செய்த பாதிரியார் தாக்கப்பட்டதாக தவறாக பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button