தெலங்கானா என்கவுண்டரில் இறந்தவர்கள் என தவறாக பரவும் புகைப்படம்!

பரவிய செய்தி
இறுதியாக நீதி கிடைத்து விட்டது. ஹைதராபாத் கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை குற்றவாளிகள் 4 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே இறந்தவர்களின் உடல்கள்.
மதிப்பீடு
விளக்கம்
தெலங்கானா மாநிலத்தில் கால்நடை மருத்துவரை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நான்கு பேர் தப்பிக்க முயன்றதாக கூறி நடத்தப்பட்ட என்கவுண்டரில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்நிலையில், சம்பவ இடத்திலேயே குற்றம்சாட்டப்பட்டவர்களின் இறந்த உடல்கள் என இருப்பதாக புகைப்படமொன்று முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Finally justice has been done.all four accused in Hyderabad vet rape and murder case shot dead..#JusticeForRoja Rape & Murder Criminals…#Encounter pic.twitter.com/o2gs59dKOd
— கலைவாணி (@imKalaiv) December 6, 2019
மேலும், செய்தி ஊடகமான ஜீ நியூஸ் வெளியிட்ட செய்தியிலும் 5.19 -வது நிமிடத்தில் இறந்தவர்களின் உடல்கள் என மேற்காணும் புகைப்படம் காண்பிக்கப்பட்டு இருந்தது. இப்படி செய்தி ஊடகங்கள் தொடங்கி சமூக ஊடகங்களிலும் அதிகம் இடம்பெற்று உள்ளது. ஆகையால், இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்த்தோம்.
உண்மை என்ன ?
வைரலாகும் புகைப்படத்தை வைத்து ரிவர்ஸ் இமேஜ் செய்து பார்க்கையில், இறந்தவர்களின் உடல்கள் தெலங்கானாவில் சுட்டுக்கொல்லப்பட்ட குற்றவாளிகள் அல்ல. இதே புகைப்படம் 2015-ல் ஹிந்து ஆங்கில செய்தி இணையதளத்தில் “20 woodcutters from TN gunned by A.P. police ” என்ற தலைப்பில் வெளியான செய்தியுடன் இடம்பெற்று இருக்கிறது.
ஆந்திராவின் திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள சேஷாச்சலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டும் பொழுது ஆந்திரப் போலீசால் நடத்தப்பட்ட என்கவுண்டரில் தமிழகத்தில் இருந்து சென்ற மரம் வெட்டுபவர்கள் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர் என செய்தியில் வெளியாகி இருக்கிறது.
இதேபோல், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில், ” தமிழகத்தைச் சேர்ந்த மரம் வெட்டுபவர்கள் என்கவுண்டரில் கொல்லப்பட்ட பழைய புகைப்படம் ஹைதராபாத் என்கவுண்டர் என வைரலாகி வருவதாக ” வெளியாகி இருக்கிறது.
தமிழகத்தில் இருந்து சென்று செம்மரம் வெட்டியதாக கூறி என்கவுண்டரில் ஆந்திரப் போலீசால் சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் உடல்களை தெலங்கானாவில் சுட்டுக்கொல்லப்பட்ட பாலியல் குற்றவாளிகள் என தவறாக செய்தி ஊடகங்கள் கூட பரப்பி வருகின்றனர். இதை அறியாமல், தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் சமூக வலைதளங்களில் தவறான புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.
முடிவு :
தெலங்கானாவில் சுட்டுக்கொல்லப்பட்ட பாலியல் குற்றவாளிகள் என பரவும் புகைப்படம் 2015-ம் ஆண்டில் ஹிந்து செய்தியில் வெளியாகி இருக்கிறது. அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.