சுமார் 1 கோடி மரங்களை நட்டு சாதனை படைத்தவர் பத்மஸ்ரீ ராமையா !

பரவிய செய்தி
தெலுங்கனா மாநிலம் முழுவதும் சுமார் ஒரு கோடி மரங்களை நட்டு சாதனை படைத்துள்ளார் ” பத்மஸ்ரீ ராமையா ” .! மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று மக்களால் கிண்டல் செய்யப்படுபவர். வாழ்த்துக்கள் ஐயா
மதிப்பீடு
விளக்கம்
தெலங்கானா மாநிலத்தின் காமம் மாவட்டத்தில் உள்ள ரெட்டிபல்லேவில் வசிக்கும் 70 வயதை கடந்த தரிபள்ளி ராமையா ” செட்டு (மரம்) ராமையா ” என பிரபலமாக அழைக்கப்படுகிறார். சைக்கிளில் மரக்கன்றுகள், விதைகள், பதாகைகள் உடன் சுற்றித்திரிந்த ராமையா ஒரு காலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டதாக கிண்டல் செய்யப்பட்டார். கடந்த 2017-ல் அவரின் சேவைக்காக ” பத்மஸ்ரீ விருதுக்கு ” தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பெரிய அளவில் பிரபலமாகினார்.
ராமையா தன்னுடைய வாழ்நாளில் எத்தனை மரக்கன்றுகளை நட்டார் என்கிற பதிவை வைத்திருக்கவில்லை என்றாலும், தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் 3 மரங்கள் அல்லது கிட்டத்தட்ட 10 மில்லியன் (1 கோடி) அளவிலான மரங்களை தாண்டி இருக்கும் என அவர் கடந்த 2017-ல் கூறியுள்ளார்.
” மரக்கன்றுகளை நடுவது எனக்கு ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்ல, ஆர்வமும்தான். தரிசு நிலத்தை நான் கண்டால் அங்கு மரங்கன்றுகளை நடுவேன். நான் நாடும் ஒவ்வொரு மரக்கன்றுகளும் உயிர்பிழைத்து வளர்வதை பார்ப்பதே எனது நோக்கம். ஒரு செடி வாடினால் கூட என் உயிரை இழந்ததைப் போல் நான் உணர்கிறேன் ” என ராமையா கூறுகிறார்.
ராமையா 10-ம் வகுப்பிற்கு பிறகு மேற்கொண்டு கல்வியை தொடரவில்லை. எனினும், மரங்கள் மற்றும் மரம் வளர்ப்பு பற்றிய கட்டுரைகளை எங்கு பார்த்தாலும் அவற்றை பத்திரப்படுத்தியும், சுவற்றில் மற்றும் பலகையில் ஒட்டும் பழக்கத்தைக் கொண்டுள்ளார். மரம் நடுவது தொடர்பான விழிப்புணர்வையும் எற்படுத்தி வருகிறார்.
” விதைகள் மற்றும் மரக்கன்றுகளை வாங்குவதற்கான பணத்தை திரட்டுவதற்காக நாங்கள் எங்கள் மூன்று ஏக்கர் நிலத்தை விற்றுவிட்டதாக ” ராமையா கூறியதாக ஹிந்துதான் டைம்ஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.
ராமையாவின் பசுமை பிரச்சாரத்தை அங்கீகரிக்கும் வகையில் பல மாநில மற்றும் தேசிய விருதுகள் தவிர, 2016-ல் தெலங்கானா மாநிலம் உருவான இரண்டாம் ஆண்டு தின கொண்டாட்டத்தில் தெலங்கானா அரசு அவருக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசையும் வழங்கி உள்ளது. 2017-ல் ஜேசுதாஸ், விராட் கோஹ்லி ஆகியோருடன் ராமையா அவர்களுக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டு உள்ளது. இப்படி இந்திய அளவில் இயற்கையின் மீது அக்கறையும், ஆர்வமும் கொண்டவர்களை பெருமைப்படுத்த வேண்டியது அவசியமாகும்.