எம்பி டி.ஆர்.பாலு கோவில், மசூதி இடிப்பு பற்றி பேசிய வீடியோவை எடிட் செய்து திரித்து பரப்பும் அண்ணாமலை !

பரவிய செய்தி
100 ஆண்டுகள் பழமையான இந்து கோவில்களை இடித்ததில் திமுகவினர் பெருமை கொள்கின்றனர். இந்த காரணத்திற்காக தான் இந்துசமய அறநிலையத்துறை கலைக்கப்பட வேண்டும் என்றும், அரசாங்கத்தின் பிடியில் இருந்து கோவில்களை விடுவிக்க வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம்.
மதிப்பீடு
விளக்கம்
சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வலியிறுத்தி நடைபெற்ற மாநாட்டில் திமுக எம்பி டி.ஆர்.பாலு, 100 ஆண்டுகள் பழமையான கோவிலை இடித்ததை பெருமையாக பேசுவதாக வீடியோ ஒன்றை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
DMK men take pride in demolishing 100-year-old Hindu temples.
The very reason we want the HR&CE dissolved and want the temple freed from the clutches of government. pic.twitter.com/c4AQTaRkPN
— K.Annamalai (@annamalai_k) January 29, 2023
40 நொடிகள் கொண்ட வீடியோவில், ” 100 வருட கோவிலை இடித்து இருக்கிறேன், இதே டி.ஆர் பாலு. எங்க ஊரில், என்னுடைய தொகுதியில் சரஸ்வதி கோவில் , லெட்சுமி கோவில் , பார்வதி கோவில், இந்த கோவில்களும் என்னுடைய தொகுதியில் ஜிஎஸ்டி ரோட்டில் கட்டிருப்பாங்க.. இந்த மூன்று கோவிலை நான்தான் இடித்தேன். எனக்கு ஒட்டு வராதுன்னு தெரியும். ஆனா, ஒட்டு எப்படி வர வைக்குறதுனும் தெரியும். ஒட்டு வராது, வராது, தயவு செய்து இடிக்காதீங்க என எனக்கு தோழர்களாம் சொன்னாங்க ” என எம்பி டி.ஆர்.பாலு பேசி இருக்கிறார்.
உண்மை என்ன ?
டி.ஆர்.பாலு பேசும் வீடியோ குறித்து தேடுகையில், ஜனவரி 27ம் தேதி ” சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி மாநாடு ” எனும் தலைப்பில் நியூஸ் 18 சேனல் நேரலை வீடியோவை வெளியிட்டதை பார்க்க முடிந்தது. மதுரையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் திக அமைப்பினர், திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
மாநாட்டில் டி.ஆர்.பாலு பேசுகையில்(49:45 நிமிடத்தில்), ” மனித நம்பிக்கைகள் பற்றி இப்ப சொன்னாங்க. சரி, மனித நம்பிக்கைகள் எப்படிப்பா இருக்க வேண்டும். 100 வருச கோவிலை இடித்து இருக்கேன். இதே டி.ஆர்.பாலு என்னுடைய இன்னொரு துறை சார்பாக. நான்கு வழிச்சாலை அமைக்கிற நேரத்தில் 100 வருச கோவில், கொல்கத்தாவில் 100 வருச மசூதியை இடித்து இருக்கேன். கோவிலை இடித்து இருக்கேன், மசூதியை இடித்து இருக்கேன், மாதா கோவிலை இடித்து இருக்கேன். வழியில் இருக்கும் ஸ்தலங்களை எல்லாம் இடிக்கும் போது மக்கள் வந்தாங்க..
இதுகுறித்து மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக இருந்த ஜோதிபாசு என்னை அழைத்து, இப்படி 100 வருச மசூதியை எல்லாம் இடித்தால் வாக்கு வங்கி பாதிக்கப்படுவது ஒருபுறம் இருந்தாலும், மத நம்பிக்கை எல்லாம் பாதிக்கும். இதெல்லாம் சரியான முடிவா எனக் கேட்டார்.
அதற்கு நான் சொன்னேன், எங்க ஊரில், என்னுடைய தொகுதியில் சரஸ்வதி கோவில் , லெட்சுமி கோவில் , பார்வதி கோவில், இந்த கோவில்களும் என்னுடைய தொகுதியில் ஜிஎஸ்டி ரோட்டில் கட்டிருப்பாங்க.. இந்த மூன்று கோவிலை நான்தான் இடித்தேன். எனக்கு ஒட்டு வராதுன்னு தெரியும். ஆனா, ஒட்டு எப்படி வர வைக்குறதுனும் தெரியும். ஒட்டு வராது, வராது, தயவு செய்து இடிக்காதீங்க என எனக்கு தோழர்களாம் சொன்னாங்க.
ஆனால் எனக்கு வேறு வழி கிடையாது. அவர்களுக்கு என்ன வேற கோவில் கட்டி தர வேண்டும், இதை விட சிறந்ததாக, 100, 200 பேர் உட்கார்ந்து சாப்பிடக் கூடிய வகையில் மண்டபம் எல்லாம் செய்து தரேன்னு சொல்லி, அந்த இடத்தில் இருந்த கோவில்களை எல்லாம் இடித்து விட்டு பக்கத்தில் கோவில் கட்டி கொடுத்தேன் ” எனப் பேசி இருக்கிறார்..
திமுக எம்பி டி.ஆர்.பாலுவின் முழுமையான பேச்சில், கோவில்களை இடித்ததை பற்றிய பகுதியை மட்டும் எடிட் செய்து பாஜகவினர் தவறாக பரப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க : திமுக ஆட்சியில் 150 கோவில்கள் இடிக்கப்பட்டனவா ? குஜராத்தில் 80 கோவில்கள் ஏன் இடிக்கப்பட்டது தெரியுமா ?
இதற்கு முன்பாக, தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 150 கோவில்களை இடித்து உள்ளதாக பாஜகவினரால் பொய்யான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. அப்போதே அதுகுறித்து கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
முடிவு :
நம் தேடலில், சேது சமுத்திர கால்வாய் திட்டம் குறித்து பேசிய டி.ஆர்.பாலு, ஒன்றிய அமைச்சராக இருந்த போது நான்கு வழிச் சாலை திட்டங்களுக்காக 100 வருட கோவில், கொல்கத்தாவில் 100 வருட மசூதியை இடித்ததை பற்றி பேசியதில் கோவில் பற்றி பேசிய பகுதியை மட்டும் எடுத்து உள்ளனர். மசூதி, மாதா கோவில் இடிக்கப்பட்டதாக கூறியதை நீக்கி உள்ளனர்.
இதேபோல், தன்னுடைய தொகுதியில் சாலை பணியின் போது கோவில்களை இடித்து விட்டு அருகே கோவில் கட்டிக் கொடுத்ததாக சொன்னதில் கோவில்களை இடித்ததை மட்டும் எடுத்து எடிட் செய்து அண்ணாமலை தவறாக பரப்பி வருகிறார் என அறிய முடிகிறது
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.