Read in English

ஆண்டவனும், அறநிலையத்துறையும் கண்டுகொள்ளாத அர்ச்சகரா ?| யார் இவர் ?

பரவிய செய்தி

இந்து அறநிலயத்துறை சம்பளம் கொடுப்பதில்லை. கிராமத்தில் தட்டு வருமானம் இல்லை. இறைவனும் கண்டுகொள்ளவில்லை. வயது முதுமை. பெரிய கோவில்களில் நடப்பதும் பெரிய பெரிய படிகளில் ஏறி இறங்குவதும் முன்போல் முடியவில்லை. ஆனால் தான் வராவிட்டால் பகவான் பட்டினி கிடப்பானோ என்ற கவலை. அதனால் தான் இருக்கும்வரை பகவான் கைவிட்டாலும் பகவானை கைவிடுவதில்லை என்று வாழும் மகான்கள் பலர்.

Facebook link | Archive link

மதிப்பீடு

விளக்கம்

சிவலிங்கத்திற்கு பூஜை  செய்து விட்டு வரும் வயதான அர்ச்சகரைக் குறிப்பிட்டு இந்து அறநிலையத் துறை அவருக்கு சம்பளம் வழங்கவில்லை, கிராமத்தில் தட்டு வருமானம் இருப்பதில்லை, இறைவனும் கண்டுகொள்ளவில்லை எனக் கூறி இப்பதிவை வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement

முகநூல் பக்கங்கள், குழுக்களில் இப்பதிவை பகிர்ந்து வருபவர்களுக்கு அப்புகைப்படத்தில் இருப்பவர் யார் என்ற விவரம் தெரியவில்லை, அக்கோவில் எங்குள்ளது என்றும் தெரியவில்லை. இப்படி எந்தவொரு விவரமும் தெரியவில்லை என்றாலும், இப்புகைப்படத்தை அரசியல்படுத்தி பகிர்ந்து வருவதை காண முடிந்தது. இப்பதிவின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்க்கத் தீர்மானித்தோம்.

உண்மை என்ன ? 

இந்து அறநிலையத்துறையைக் குறிப்பிட்டு பதிவிட்டதால் பலரும் வயதான அர்ச்சகர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என நினைத்துக் கொண்டு தமிழக அரசையும், அரசியல் சார்ந்தும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Archive link

சிவலிங்கத்திற்கு தொண்டு செய்து வரும் முதியவர் யார் எனத் தெரிந்து கொள்ள புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், கர்நாடகாவின் ஹம்பி பகுதியில் உள்ள 9 அடி படாவி லிங்கத்தை தினமும் சுத்தப்படுத்தி பூஜை செய்யும் கே.என்.கிருஷ்ணா பாட் என ட்விட்டர் பக்கம் ஒன்றில் சில புகைப்படங்கள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி இருக்கின்றன.

2019 ஏப்ரல் 28-ம் தேதி வெளியான தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில், ” உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் ஹம்பியில் படாவி லிங்கா கோவிலில் 86 வயதான கே.என்.கிருஷ்ணா பாட் அர்ச்சகர் தினமும் லிங்கத்தை சுத்தம் செய்து பூக்கள், திருநீறு வைத்து பூஜை செய்து செல்கிறார். கிருஷ்ணா பாட் சிவமோகா மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு முன்பு ஹம்பிக்கு வந்துள்ளார். காலை கோவிலில் பூஜை செய்வதற்கு தன்னுடைய இருப்பிடத்தில் இருந்து உள்ளூர்வாசிகள் உதவியுடன் சென்று வருகிறார். ராம் சிங், ஆரிஃப், ஆரிஃப்  உடைய தந்தை உள்ளிட்டோர் வழக்கமாக உதவுகின்றனர். இவரை அனேகுன்டி அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் படாவி லிங்க கோவிலின் அர்ச்சகராக நியமித்து உள்ளனர்.

இதுகுறித்து, அனேகுன்டி விஜயநகர அரசக் குடும்பத்தை சேர்ந்த கிருஷ்ணதேவ ராயா கூறுகையில், ” 1980-களில் ஹம்பியை பார்வையிடுவதற்காக காஞ்சி பரமாச்சார்யா வருகை தந்த போது சிவலிங்கத்திற்கு வழக்கமாக பூஜை செய்ய அர்ச்சகரை நியமித்து அவருக்கு ஒவ்வொரு மாதமும் அரசியும், கொஞ்சம் தொகையும் வழங்கி வழிபாட்டை நடத்துமாறு கேட்டுக் கொண்ட பிறகு வழிபாடு தொடங்கியது. அன்றில் இருந்து வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அர்ச்சகருக்கு நாங்கள் பணம் செலுத்துகிறோம். மகாசிவராத்திரிக்கு அவரை (பாட்) சந்தித்து பணம் கொடுத்தேன் ” என வெளியாகி இருக்கிறது.

அர்ச்சகராக பணியாற்றிய கிருஷ்ணா பாட் தமிழகத்தைச் சேர்ந்தவர் இல்லை. அனேகுன்டி அரசக் குடும்பத்தினர் அவரை அர்ச்சகராக நியமித்து ஊதியம் வழங்கி வந்துள்ளனர். ஏதுவாயினும், வயதான காலத்திலும் இறைவனுக்கு தொண்டு செய்யும் எண்ணத்தில் தினமும் பூஜை செய்து வந்துள்ளார். தற்போது வயதுமூப்பு காரணமாக கோவில் பூஜைக்கு செல்வதில்லை என்றும், அவரின் மகன் மற்றும் உறவினர்கள் பூஜையை கவனித்துக் கொள்வதாக கூறப்படுகிறது.

முடிவு : 

நம் தேடலில், கர்நாடகா ஹம்பியில் உள்ள படாவி லிங்க கோவிலில் உள்ள லிங்கத்திற்கு தினமும் பூஜை செய்து வந்த கே.என்.கிருஷ்ணா பாட் என்பவரின் புகைப்படத்தை வைத்து தமிழக இந்து அறநிலையத்துறை ஊதியம் அளிக்கவில்லை, இறைவன் கண்டுகொள்ளவில்லை என தவறான தகவல்களை இணைத்து பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button